×

‘பாத்ரூமிற்கு போகும்போதும், வரும்போதும் பேச மாட்டோம்’ இனிமேல் லைப்ல ஏர்போர்ட்ல பேட்டி கொடுக்கவே மாட்டேன்: தோல்விக்குப்பின் கோவையில் அண்ணாமலை புதுசபதம்

கோவை: இனிமேல் வாழ்க்கையில் ஏர்போர்ட்டில் பேட்டி கொடுக்க மாட்டேன் என்று பாஜ மாநில தலைவர் அண்ணாமலை கோவையில் தெரிவித்தார். நாடாளுமன்ற தேர்தலில் பாஜ மாநில தலைவர் அண்ணாமலை கோவை தொகுதியில் போட்டியிட்டு திமுக வேட்பாளரிடம் தோல்வி அடைந்தார். இதனால் எதுவும் பேசாமால் அடங்கிவிட்டார். அதேநேரத்தில் ஒன்றிய அமைச்சராகிவிடலாம் என்ற எதிர்பார்ப்பில் டெல்லியில் முகாமிட்டிருந்தார். ஆனால் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. இது அவருக்கு பெருத்த ஏமாற்றமாக அமைந்துள்ளது.

தேர்தல் நேரத்தில் பிரசாரத்துக்கு கிளம்பும்போது ஒரு பேட்டி… பிரசாரம் முடிந்தபிறகு ஒரு பேட்டி… பிரசாரத்தின்போதே ஒரு பேட்டி… விமான நிலையத்தில் இறங்கும்போது ஒரு பேட்டி… விமானத்தில் ஏறச்செல்லும்போது ஒரு பேட்டி… என யார் மைக்கை நீட்டினால்போதும் பேச ஆரம்பித்து விடுவார். அதில் ஏதாவது சரக்கு இருக்குமா? என்றால் அது இருக்காது. முழுவதும் பொய்தான் என அரசியல் தலைவர்கள் விமர்சிக்கும் அளவுக்கு சளைக்காமல் பேசி தீர்த்து வந்தார். பக்கத்தில் அமர்ந்திருக்கும் சக கட்சி நிர்வாகிகளுக்கு அதிர்ச்சி கொடுக்கும் வகையில் அவரது பேட்டி இருந்தது. இந்த சூழலில், ‘‘இனிமேல் வாழ்க்கையில் ஏர்போர்ட்டில் பேசவே மாட்டேன்’’ என்று புதிய சபதம் எடுத்துள்ளார்.

டெல்லியில் இருந்து நேற்று விமானம் மூலமாக அவர் கோவைக்கு வந்தார். அவரை விமான நிலையத்தில் கட்சி நிர்வாகிகள் வரவேற்றனர். ஆனால் அண்ணாமலை முகத்தில் பழைய ‘களை’ இல்லை. முகம் வாடிய நிலையில் காணப்பட்டார். வழக்கம்போல விமான நிலையத்தில் ஏராளமான நிருபர்கள் குவிந்தனர். ஆனால் பத்திரிகையாளர்களை சந்திக்க அண்ணாமலை விரும்பவில்லை. நிருபர்கள் அவரிடம் பேட்டி எடுக்க முயன்றனர். ஆனால், அவர் நிருபர்களை கண்டுகொள்ளாமல் விறுவிறுவென நடந்து தனது காரில், முன்பக்க சீட்டில் ஏறிக்கொண்டார். ஆனாலும், துரத்திய சில நிருபர்கள் அவரது முகத்தை நோக்கி, மைக்கை நீட்டி பேட்டி கேட்டபோது, ‘‘இனி கட்சி அலுவலகத்தில்தான் பேட்டி கொடுப்பேன். விமான நிலையத்தில் இனி பேட்டி வேண்டாம். மாவட்ட தலைவர் இதற்கான ஷெட்யூல் கொடுப்பார்.

24 மணி நேரத்திற்கு முன்பாக முறையாக பத்திரிகையாளர்களுக்கு தகவல் தெரிவிக்கப்படும். விமானத்திலிருந்து இறங்கும் நேரத்தில் சில விஷயங்கள் நடந்திருக்கும், அது நமக்கு தெரியாமல் போய் இருக்கும். தினமும் மாலை நேரத்தில் கட்சி அலுவலகத்தில் இருந்து பத்திரிகைகளுக்கு அறிக்கை வந்து விடும்’’ என்று கூறிவிட்டு அங்கிருந்து செல்ல முயன்றார். அப்போது நிருபர்கள் தொடர்ந்து ேகள்வி எழுப்பினர். இதனால் சற்று காட்டமான அண்ணாமலை, ‘‘இனிமேல் வாழ்க்கையில் ஏர்போர்ட்டில் பேச மாட்டேன். இனிமேல் எல்லாவற்றையும் முறைப்படுத்த நடவடிக்கைகள் எடுக்க போறோம்.

இனி அனைத்து சந்திப்புகளும் அப்படித்தான் நடக்கும். பாத்ரூமிற்கு போகும்போது, வெளியில் வரும்போதும் எல்லாம் இனி பேச மாட்டோம். கோவையில் இனிமேல் கட்சி அலுவலகத்தில் மட்டும்தான் செய்தியாளர் சந்திப்பு இருக்கும். பிரஸ் மீட் இனிமேல் இப்படித்தான் நடக்கும்’’ என்று கூறிவிட்டு புறப்பட்டார். தேர்தல் தோல்விக்கு பின் அண்ணாமலைக்கு எதிராக தமிழிசை போன்ற மூத்த தலைவர்கள் பேட்டியளித்து வருகின்றனர். மாநில தலைவர் பதவியில் இருந்து அண்ணாமலையை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. தேர்தல் தோல்விக்கு அதிமுகவுடனான கூட்டணியை அண்ணாமலை முறித்ததே காரணம் என்று டெல்லி தலைமைக்கு புகார் சென்று உள்ளது.

இதனால் அண்ணாமலை மீது மேலிடம் அதிருப்தியில் உள்ளது. டெல்லி சென்றிருந்த அண்ணாமலையை மேலிட தலைவர்கள் சந்திக்க மறுத்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது. தமிழ்நாட்டில் பாஜ வளர்ந்துவிட்டது. குறிப்பிட்ட தொகுதிகளை கைப்பற்றுவோம் என்று பேசிய அண்ணாமலை ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை. அவரும் தோல்வியடைந்தார். இதனால் அண்ணாமலைக்கு மேலிடம் டோஸ் விட்டு, பேட்டி கொடுப்பதில் கட்டுப்பாடு விதித்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக அண்ணாமலை புதிய சபதம் எடுத்து உள்ளார் என்று கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.

The post ‘பாத்ரூமிற்கு போகும்போதும், வரும்போதும் பேச மாட்டோம்’ இனிமேல் லைப்ல ஏர்போர்ட்ல பேட்டி கொடுக்கவே மாட்டேன்: தோல்விக்குப்பின் கோவையில் அண்ணாமலை புதுசபதம் appeared first on Dinakaran.

Tags : Annamalai Pudusapatam ,Coimbatore ,BJP ,president ,Annamalai ,DMK ,Dinakaran ,
× RELATED அண்ணாமலை புதிய கட்சி துவங்க உள்ளாரா?: வானதி சீனிவாசன் விளக்கம்