×

மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வீடு கட்டும் திட்டத்தின் கீழ் எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? முதல்வரிடம் மாவட்ட ஆட்சியர்கள் நேரில் விளக்கம்

சென்னை: மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வீடு கட்டும் திட்டத்தின் கீழ் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து முதல்வரிடம் மாவட்ட ஆட்சி தலைவர்கள் விளக்கம் அளித்தனர். முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற 14 மாவட்ட ஆட்சி தலைவர்களுடனான ஆய்வு கூட்டத்தின் நிறைவில், மாவட்ட ஆட்சி தலைவர்களிடம் மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வீடுகள் கட்டுவது தொடர்பாகவும், பாதிக்கப்பட்ட மக்கள் மீண்டுவர எடுக்கப்பட்ட நடவடிக்கைகளும் குறித்தும், வீடு கட்டும் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் வீடுகளின் தற்போதைய நிலை குறித்தும் கேட்டறிந்தார்.

அப்போது திருவள்ளூர் மாவட்ட ஆட்சி தலைவர் பிரபு சங்கர் கூறியதாவது: முழுமையான சேதம் மற்றும் பகுதியாக சேதமடைந்த வீடுகள் என்று இருவகைப்படுத்தப்பட்டது. அதில் 1360 வீடுகள் முழுமையாக சேதமடைந்த வீடுகள் என்று கண்டறியப்பட்டு, ஒவ்வொரு வீட்டிற்கும் ரூ.4 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தேர்தலுக்கு 2 நாட்களுக்கு முன்பு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டு, அங்கு தங்கியிருக்கும் அனைவரும் அப்புறப்படுத்தப்பட்டு வீடுகள் கட்டும் பணி தொடங்கப்பட்டுள்ளது. அதேபோல புயலால் தொழில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு மாவட்ட தொழில் மையம் மூலமாக கடன்உதவி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மகளிர் சுய உதவிக்குழுவினருக்கும் அவர்களின் கடனுதவி அளவினை உயர்த்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சி தலைவர் கலைச்செல்வி கூறும்போது, காஞ்சிபுரம் மாவட்டத்தில் குன்றத்தூரில் தாலுகாவில் மிக்ஜாம் புயலால் பெரும்பாதிப்பு ஏற்பட்டது. காஞ்சிபுரம் தாலுக்காவிலும் பயிர் சேதம் ஏற்பட்டது. தகுதியுள்ள அனைவருக்கும் 100 சதவீதம் பயிர் இழப்பீடு வழங்கப்பட்டு விட்டது. அதுதவிர தற்காலிகமாக சரி செய்ய வேண்டியது, நிரந்தரமாக கட்டி கொடுக்க வேண்டியது என்று சேதமடைந்த வீடுகளை வகைப்படுத்தி அந்த வீடுகளை எல்லாம் கட்டும் பணி தொடங்கப்பட்டு விட்டது என்றார். செங்கல்பட்டு மாவட்ட ஆட்சி தலைவர் அருண்ராஜ் கூறும்போது, பாதிப்படைந்த வீடுகளை சீர்செய்திட தேர்தலுக்கு முன்பே அனைவருக்கும் நிர்வாக அனுமதி வழங்கப்பட்டது.

வீடுகள் கட்டும் பணி தொடங்கப்பட்டு, நிறைய வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. பாதிப்படைந்த பகுதிகளில் குறிப்பாக பள்ளிக்கு செல்லும் மாணவர்களுக்கு சிறப்பு முகாம் நடத்தி தேவையான சான்றிதழ்கள் வழங்கப்பட்டன என தெரிவித்தார். கூட்டத்தின் நிறைவாக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசும்போது, வீட்டுவசதி இல்லாதவர்களுக்கு புதிய வீடுகள் கட்டித்தருவது அரசின் தலையாய கடமையாகும். இதற்கு போதுமான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது, எனவே, மாவட்ட ஆட்சி தலைவர்கள் இதில் கூடுதல் கவனம் செலுத்தி இப்பணிகளை விரைந்து முடித்திட வேண்டும். மேலும், மழைக்காலம் தொடங்கப்போகிறது. ஏரி, குளம், குட்டை, கண்மாய்களையெல்லாம் தூர்வாரி, குடிமராமத்து பணிகளை மேற்கொண்டு, மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை இப்போதே தொடங்க வேண்டும் என்றார்.

The post மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வீடு கட்டும் திட்டத்தின் கீழ் எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? முதல்வரிடம் மாவட்ட ஆட்சியர்கள் நேரில் விளக்கம் appeared first on Dinakaran.

Tags : Migjam cyclone house ,District Collectors ,Chief Minister ,CHENNAI ,Mikjam storm ,M.K.Stalin ,Migjam storm ,Dinakaran ,
× RELATED புதுமைப்பெண் திட்டம் போல...