×

தொடர் மழையால் பசுமைக்கு திரும்பிய முதுமலை புலிகள் காப்பகம்

ஊட்டி: நீலகிரியில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக முதுமலை புலிகள் காப்பகம் பகுதி பசுமைக்கு திரும்பி உள்ளது. நீலகிரி மாவட்டத்தில் கடந்த மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் வரலாறு காணாத அளவிற்கு வெப்பம் அதிகரித்து காணப்பட்டது. இதன் காரணமாக நீர்நிலைகள், தடுப்பணைகள் முழுமையாக வறண்டன. கடுமையான வெயில் காரணமாக முதுமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட பகுதியில் நீர்நிலைகள் நீரின்றி வறண்டது. மேலும் செடி, கொடிகள், புல்வெளிகள் காய்ந்து பசுமை இழந்து காட்சியளித்தது. இதனால், யானை உள்ளிட்ட வனவிலங்குகள் தண்ணீர் தேடியும், உணவு தேடியும் அலைந்தன. மேலும், கடுமையான வெயில் காரணமாக காட்டு தீயும் ஏற்பட்டு வந்தது. இதனால், கோடை மழையை எதிர்பார்த்து பொதுமக்கள் காத்திருந்தனர்.

இதற்கேற்ப கடந்த மே மாதம் 2வது வாரத்தில் கனமழை கொட்டியது. முதுமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட தெப்பகாடு, மசினகுடி, மாயார், சீகூர் வனப்பகுதிகளிலும் அடிக்கடி மழை பெய்து வருவதால், வறண்டு கிடந்த நீர்நிலைகளில் தண்ணீர் வரத்து துவங்கியுள்ளது. மாயாற்றிலும் நீர்வரத்து துவங்கியுள்ளது. இதனால், சிறு சிறு நீரோடைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுகின்றன. இதன் காரணமாக முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதி பசுமைக்கு திரும்பி உள்ளது. இதனால், சாலையோரங்களில் மான் கூட்டங்கள், மயில்கள், காட்டு யானைகள் உள்ளிட்டவைகள் மேய்ச்சலில் ஈடுபட்டு வருகின்றன. இதை வாகனங்களில் செல்லும் சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து செல்கின்றனர்.

The post தொடர் மழையால் பசுமைக்கு திரும்பிய முதுமலை புலிகள் காப்பகம் appeared first on Dinakaran.

Tags : Mudumalai Tiger Reserve ,Nilgiris ,Nilgiri district ,Dinakaran ,
× RELATED முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதி அருகே பெண் யானை உயிரிழப்பு!