×

புதுச்சேரியில் விஷவாயு தாக்கி உயிரிழந்த 3 பேரின் குடும்பத்துக்கு நிவாரணம் அறிவித்தார் முதல்வர் ரங்கசாமி

புதுச்சேரி: புதுச்சேரியில் விஷவாயு தாக்கி உயிரிழந்த 3 பேரின் குடும்பத்துக்கு முதல்வர் ரங்கசாமி நிவாரணம் அறிவித்துள்ளார். உயிரிழந்த சிறுமியின் குடும்பத்துக்கு ரூ.30 லட்சம் நிவாரணம் வழங்கப்படும். விஷவாயு தாக்கி உயிரிழந்த 2 பெண்களின் குடும்பத்துக்கு தலா ரூ.20 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.

புதுச்சேரியில் ரெட்டியார்பாளையம் புதுநகர் பகுதியில் சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் மட்டுமின்றி ஜவகர் நகர், உழவர்கரை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பாதாள சாக்கடை திட்டம் வழியாக, வீடுகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர் கனகன் ஏரியை ஒட்டியுள்ள சுத்திகரிப்பு நிலையத்தை வந்தடைந்து அங்கு சுத்திகரிப்பு செய்யப்பட்டு கனகன் ஏரி வாய்க்காலில் விடப்படுகிறது.

இந்நிலையில் சில மாதங்களாகவே ரெட்டியார்பாளையம் புதுநகர் பகுதியில் உள்ள வீடுகளில் கழிவறைக்கு செல்லும் பொதுமக்கள் விஷவாயு போன்ற கசிவு ஏற்படுவதை உணர்ந்து இதுதொடர்பாக கனகன்ஏரி கழிவுநீர் வாய்க்கால் சுத்திகரிப்பு நிலைய அதிகாரிகளிடம் முறையிட்டனர். ஆனால் அரசும், அதிகாரிகளும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிகிறது. இந்த நிலையில் இன்றுகாலை உடையார்பாளையம் புதுநகர் 4வது தெருவில் உள்ள பொதுமக்கள் அவரவர் வீடுகளில் உள்ள கழிவறைக்கு சென்றுள்ளனர்.

அப்போது கதவை திறந்து உள்ளே சென்ற மூதாட்டி, சிறுவர்கள் உட்பட 7 பேரை விஷவாயு தாக்கி மூச்சுத்திணறி கழிவறைக்குள்ளேயே மயங்கி கிடந்துள்ளனர். வெகுநேரம் ஆகியும் அவர்கள் வராததால் சந்தேகமடைந்த உறவினர்கள் கதவை தட்டியும் திறக்கப்படாததால் கதவை உடைத்து பார்த்தபோது அதிர்ச்சியடைந்தனர். அங்கு கழிவறைக்கு சென்றவர்கள் மயங்கி கிடந்துள்ளனர். அவர்களை மீட்க சென்றவர்களுக்கும் மயக்கம் ஏற்படவே அவர்கள் அலறி அடித்து வீடுகளை விட்டு வெளியே ஓடி வந்தனர்.

அவர்கள் கூச்சல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர்களும் வீடுகளை விட்டு வெளியேறி உடனடியாக உழவர்கரை தாசில்தார் அலுவலகத்துக்கும், ரெட்டியார்பாளையம் காவல்நிலையத்திற்கும் தகவல் கொடுத்தனர். இதையடுத்து உழவர்கரை தாசில்தார் ராஜேஷ்கண்ணா, வடக்கு எஸ்பி வீரவல்லவன் தலைமையில் போலீசாரும், அரசு அதிகாரிகளும் அங்கு விரைந்து வந்தனர்.

உடனடியாக ரெட்டியார்பாளையம் ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் கதிர்காமம் அரசு மருத்துவமனையில் இருந்து மருத்துவக் குழு வரவழைக்கப்பட்டு உடனடியாக அப்பகுதியில் வசிப்பவர்களுக்கு முககவசம் வழங்கப்பட்டது. மேலும் வீடுகளில் இருந்து பாதுகாப்பாக மக்களை வெளியேற்றிய அதிகாரிகள் கழிவுநீர் சுத்திகரிப்பு வாகனம், ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வற்றை வரவழைத்து அப்பகுதியில் வீடுகளில் இருந்து வெளியேறும் விஷவாயுவை வெளியேற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

இதனிடையே வீடுகளின் கழிவறைக்கு சென்று விஷவாயு தாக்கி மயக்கமடைந்து சிகிச்சை பெற்று வந்த 11ம் வகுப்பு மாணவி செல்வராணி (15), செந்தாமரை (72), அவரது மகள் காமாட்சி (55) ஆகிய 3 பெண்களும் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பாலகிருஷ்ணன் உள்ளிட்ட சிலருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்தச் சம்பவத்தால் அந்தப் பகுதியில் வருவாய்த்துறையினர், காவல்துறையினர், தீயணைப்புத் துறையினர் மற்றும் மருத்துவத் துறையினர் குவிந்தனர். பாதிக்கப்பட்ட பகுதியில் புதுவை முதல்வர் ரங்கசாமி ஆய்வு செய்தார். இந்நிலையில் விஷவாயு தாக்கி உயிரிழந்த 3 பேரின் குடும்பத்துக்கு முதல்வர் ரங்கசாமி நிவாரணம் அறிவித்துள்ளார்.

உயிரிழந்த 15 வயது சிறுமி பாக்கியலட்சுமியின் குடும்பத்தாருக்கு 30 லட்சம் நிதியுதவியும், மற்ற பெண்களான செந்தாமரை(72), காமாட்சி ஆகியோர் குடும்பத்திற்கு தலா 20 லட்சம் ரூபாயும் நிதியுதவி அறிவித்துள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரிக்க இரு குழுக்களை அமைத்து உத்தரவிட்டுள்ளார்.

The post புதுச்சேரியில் விஷவாயு தாக்கி உயிரிழந்த 3 பேரின் குடும்பத்துக்கு நிவாரணம் அறிவித்தார் முதல்வர் ரங்கசாமி appeared first on Dinakaran.

Tags : Rangasamy ,Vishwajaw attack ,Puducherry ,Chief Minister ,Rangasami ,Vishwajaw ,Dinakaran ,
× RELATED புதுச்சேரியில் விஷவாயு தாக்கி...