×

ராசியின் ரகசியம் சொல்லும் சரம், ஸ்திரம், உபயம்

ஜோதிடத்தில் ராசி சக்கரம் பன்னிரெண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு அந்த பன்னிரெண்டு ராசிகளும் மூன்று பிரிவுகளாக பிரித்து அதில், மூன்றுவிதமான இயக்கத்தை ராசிகள் இயக்குகின்றன. இதில் என்ன இருக்கிறது என்பதை விஸ்தாரமாக பார்க்கலாம். ஒரு ராசி இயங்கும் அமைப்பை விளக்குதற்கு கண்டறிவதற்கு ராசியின் தன்மை கண்டறிவது முக்கியமாகும். ராசியின் தன்மையின் அடிப்படையில்தான் அதன் தன்மையில் இயக்கம் உண்டு. அந்த மூன்று பிரிவுகளும் சரம், ஸ்திரம், உபயம் என்று பிரிக்கப்படுகிறது சரம் என்பதற்கு மாறிக்கொண்டே இருப்பது (நிலையற்றது) என்று பொருள். நம் வழக்கு மொழியில் சரம் பார்ப்பது என்ற பதம் உண்டு. அதாவது, சரம் என்பது மூச்சுக்காற்றை குறிக்கிறது. எப்பொழுதும் மாறிக்கொண்டே இருப்பது மூச்சுகாற்று. எனவே, சரம் என்ற பொருளும் நிலையற்றது எனக் கொள்ளலாம். இதனை வளர்ச்சி என்றும் எடுத்துக் கொள்ளலாம்.ஸ்திரம் என்பதற்கு நிலையானது என்றும் மாறாதது என்றும் பொருள்படுகிறது. அப்படி மாறாத நிலைத்தன்மையை கொடுக்கக்கூடியது ஸ்திரமாகும். நிலையானதாது என்று எடுத்துக் கொள்ளலாம்.உபயம் என்பதற்கு இரண்டு என்று பொருள். அதாவது, சில நேரங்களில் சரம் (நிலையற்றதாகவும்) போலவும் அதாவது மாறிக்கொண்டும் சிலநேரங்களில் ஸ்திரம் (நிலையானது) போன்றும் உள்ள அமைப்பை உடையது உபயம் என்று பொருள்படுகிறது. இரட்டைதன்மையுடையது என்று பொருள் கொள்ளலாம். சில சமயங்களில் வளர்ச்சியும். சில சமயங்களில் வளர்ச்சியற்ற தன்மையை கொடுக்கும்.

ராசிகளின் மூன்று பிரிவுகள்

* மேஷம், கடகம், துலாம், மகரம் – சர ராசிகள்.
* ரிஷபம், சிம்மம், விருச்சிகம் கும்பம் – ஸ்திர ராசிகள்.
* மிதுனம், கன்னி, தனுசு, மீனம் – உபய ராசிகள்.
ஜென்ம ராசிகளின் அடிப் படையில்தான் அவர்களின் மனம் இருக்கும் என்பது தத்துவமாகும்.

* கிரகங்கள் ராசிகளில் பலன்கள் சரம், ஸ்திரம், உபயத்தில் எவ்வாறு இருக்கும்?

சர ராசியில் நிற்கும் கிரகங்கள் இயக்கமும் பலன்களும் நிலைத்தன்மை இல்லாமல் இருக்கும். அதாவது, கிரக காரகங்களின் அடிப்படையில் கிடைக்கும் என்பதாகும்.
ஸ்திர ராசியில் நிற்கும் கிரகங்கள் இயக்கமும் பலன்களும் நிலையானதாக இருக்கும். நிலையான பொருள் கொண்ட பலன்கள் கிடைக்கும்.
உபய ராசியில் நிற்கும் கிரகங்கள் இயக்கம் சில நேரங்களில் நிலையற்ற தன்மை கொண்ட பொருட்களையும் தருவிக்கின்றது இயற்கை.

* கிரகங்களின் தன்மைகளும் பலன்களும்…

சந்திரன், செவ்வாய், ராகு, கேது – சர கிரகங்கள் இவை நிலையற்றதாகும். சூரியன், சுக்ரன், சனி – ஸ்திர கிரகங்கள் இவை நிலையானதாக இருக்கும். புதன், குரு – உபய கிரகங்கள் இவை நிலையானதாகவும் நிலையற்றதாகவும் இருக்கும்.சர கிரகங்களின் திசா, புத்திகளின் பலன்கள் யாவும் கொடுக்கக்கூடிய தன்மைகளும் பொருட்களும் நிலையற்ற தன்மை உடையதாக இருக்கிறது. ஸ்திர கிரகங்களின் திசா, புத்திகள் யாவும் கொடுக்கக்கூடிய தன்மைகளும் பொருட்களும் நிலையான தன்மை கொண்டதாக இருக்கிறது. உபய கிரகங்களின் திசா, புத்திகள் யாவும் கொடுக்கக்கூடிய தன்மைகளும் பொருட்களும் நிலையான மற்றும் நிலையற்ற தன்மைகளும் பொருட்களும் கொண்டதாக இருக்கும்.

* பரிகாரங்களும் மூன்று தன்மைகளும்

சர ராசியை அடிப்படையாகக் கொண்டு செய்யப்படுகின்ற பரிகாரங்கள் நிலையற்ற தன்மையிலும் அதாவது ஓடும் நதிக்கு அருகில் அமைந்துள்ள கோயில் அடிப்படையில் இருப்பது சிறப்பு.
ஸ்திர ராசியை அடிப்படையாகக் ெகாண்டு செய்யப்படுகின்ற பரிகாரங்கள் நிலையான ஸ்திர தன்மை மலை மீது செய்யப்படுகின்ற பரிகாரங்களாக இருப்பது சிறப்பு.
உபய ராசியை அடிப்படையாகக் கொண்டு செய்யப்படுகின்ற பரிகாரங்கள் இரண்டு தன்மையிலும் செய்யலாம்.

* சரம், ஸ்திரம், உபயத்தின் பலன்கள் என்னென்ன?

ஜாதகர் சர ராசி நான்காம் பாவகமாக அமைந்து நிலம் வாங்குகிறார் என்று வைத்துக் கொள்வோம். அவர் தொடர்ந்து கட்டிடங்களை ஒவ்வொரு மாடியாக வளர்த்துக் கொண்டே போவார்.ஜாதகர் ஸ்திர ராசியின் அடிப்படையில் நான்காம் பாவகமாக அமைந்து. அதிலும் ஸ்திர கிரகங்கள் அமையப்பெறின் ஜாதகர் வாங்கும் வீடு நீண்ட காலம் நிலைத்த தன்மையுடன் இருக்கும். அவருக்குப் பிறகு அவரின் வாரிசுகளும் பாகப்பிரிவினை செய்து கொள்ளாமல் இருப்பர் என்பதாகும்.ஜாதகர் உபய ராசியின் அடிப்படையில் நான்காம் பாவகமாக அமைந்து வீடு வாங்கும் ஜாதகர் எப்பொழுதாவது மாற்றுவார் பின்பு நிறுத்தி மறுபடியும் இருவாசல்களை கொண்ட அமைப்பாக வைத்திருப்பார்.

* லக்னங்கள் அடிப்படையில் என்னென்ன செய்யலாம்? என்னென்ன செய்யக்கூடாது?
* வங்கியில் கடன் பெறும் போது சர லக்னத்தில் வாங்குவதை தவிர்க்க வேண்டும். அவ்வாறு செய்யும் பொழுது கடன் வளர்ச்சியடைவது தவிர்க்கப்படும். கடன் எளிதில் அடைபடும். உபய லக்னத்தில் கடன் பெறும் போது எளிதில் அடைபடும் வாய்ப்பு உண்டாகும்.
* திருமணத்திற்காக முகூர்த்த லக்னத்தை குறிப்பது, பிறந்த குழந்தைக்கு பெயர் சூட்டுவது, புதிதாக வியாபாரம் தொடங்குவது, வீடு கட்டி புதிய வீட்டிற்கு குடி போவது, புதியதாக நிலம் வாங்கி பத்திரம் பதிவு செய்வது ஆகிய நிலையான யாவற்றையும் ஸ்திர லக்னத்தில் செய்தால் நிலைத்தன்மை கொண்டதாக இருக்கும்.
* உடல் சுகவீனம் அடைந்து மருத்துவத்திற்காக மருத்துவரை நாடுவது, கடன் வாங்குவது, கடன் கொடுப்பது போன்றவைகளை உபய லக்னத்தில் செய்வது சிறப்பாகும்.

 

The post ராசியின் ரகசியம் சொல்லும் சரம், ஸ்திரம், உபயம் appeared first on Dinakaran.

Tags :
× RELATED முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்!