*பொதுமக்கள் அவதி
நாகர்கோவில் : நாகர்கோவில் சரலூர் ஆற்றங்கரை சாலையில், வெவ்வேறு வார்டு பகுதிகள் என்பதால் மழைநீர் வடிகால் இணைக்கப்படாமல் உள்ளதால், மண் அரிப்பு ஏற்பட்டு வருகிறது. நாகர்கோவில் மாநகராட்சி பகுதியில் உள்ள மழைநீர் வடிகால்களில் மழைநீர் மற்றும் கழிவுநீர் தேங்கி நிற்காத வகையில் மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது. அதுபோல் மழைநீர் வடிகால்களில் மண்டிக்கிடக்கும் மண், புதர்களை பொக்லைன் இயந்திரம் மூலம் அகற்றி வருகிறது. நாகர்கோவில் மாநகராட்சி 36வது வார்டு பகுதியில் சரலூர் ஆற்றங்கரை சாலை உள்ளது. கோட்டாரில் இருந்து செட்டிகுளத்திற்கு வருபவர்கள் பலர் இந்த சாலையை பயன்படுத்தி வருகின்றனர்.
இதனால் எப்போதும் இந்த சாலையில் வாகனங்கள் அதிகம் சென்று வருகிறது. மாநகராட்சி நிர்வாகம் இந்த சாலையை புதிதாக சீரமைத்துள்ளது. மேலும் சாலையின் ஓரத்தில் மழைநீர் வடிகால் அமைத்துக் கொடுத்துள்ளது. நாகர்கோவில் நகராட்சியாக இருந்தபோது இந்த சாலையின் ஒரு பகுதி ஒரு வார்டின் கீழும், மற்றொரு பகுதி மற்ெறாரு வார்டின் கீழும் இருந்து வந்தது. இரு வார்டுகளும் தனித்தனியாக மழைநீர் வடிகாலை அமைத்தன.
இருவார்டுகளும் தனித்தனியாக மழைநீர் வடிகால் அமைத்ததால், வார்டுகள் முடியும் இடத்தில் மழைநீர் வடிகால் இணைக்கப்படாமல் உள்ளது. இதனால் மழைக்காலத்தில் மழைநீர் வடிகால் இணைக்கப்படாமல் உள்ள இடத்தில் மண் அரிப்பு ஏற்பட்டு பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது. அந்த வழியாக பைக் மற்றும் கார்களில் வரும்போது வழிவிடுவதற்காக ஒதுங்குபவர்கள் அந்த பள்ளத்தில் விழும் நிலை ஏற்பட்டுள்ளது.
சரலூர் ஆற்றங்கரை சாலையை பல வாகன ஓட்டிகள் பயன்படுத்தி வருகின்றனர். வடிகால் முடியாத இடத்தில் ஏற்பட்டுள்ள பள்ளத்தில் பெரிய விபத்து ஏற்படுவதற்கு முன்பே மழைநீர் வடிகாலை இணைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த வார்டு கவுன்சிலர் ரமேஷ் மாநகராட்சி நிர்வாகத்திடம் கோரிக்கை மனு கொடுத்துள்ளார்.
The post சரலூர் ஆற்றங்கரை சாலையில் இணைக்கப்படாத வடிகாலால் தேங்கும் மழைநீர் appeared first on Dinakaran.