×

அகில இந்தியா சுற்றுலா வாகன அனுமதி சீட்டு; விதிமீறினால் நடவடிக்கை; தமிழ்நாடு போக்குவரத்துத்துறை எச்சரிக்கை

சென்னை: அகில இந்திய சுற்றுலா வாகன அனுமதிச் சீட்டை பெற்று, பயணிகள் பேருந்து போல கட்டணம் வசூலித்து, பல்வேறு மாநிலங்களில் இருந்து பயணிகளை ஏற்றி, இறக்கி விதிமீறலில் ஈடுபடுபவர்கள் மீது, நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு போக்குவரத்துத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. சுற்றுலா என்ற பெயரில் அனுமதி சீட்டு பெற்று பேருந்துகள் பல்வேறு மாநிலங்களில் பயணிகளை ஏற்றி, இறக்கி விதிமீறலில் ஈடுபடுவதாக புகார் எழுந்துள்ளது. சுற்றுலா அழைத்துச் செல்லாமல் பேருந்துகள், பல்வேறு மாநிலங்களில் பயணிகளை ஏற்றி இறக்கி அரசுக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்துவதாக புகார் எழுந்துள்ளது.

யாத்திரை, திருமணம் மற்றும் சுற்றுலா இடங்களை பார்வையிடுவதற்காக வழங்கப்படும் அனுமதி சீட்டு தவறாக பயன்படுத்தப்படுவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அகில இந்திய சுற்றுலா பேருந்துகளுக்கு போக்குவரத்துத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில்; அகில இந்திய சுற்றுலா வாகனங்கள் பயணிகள் பேருந்துகள் போல இயங்கி வருவது கண்டறியப்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களாக அகில இந்திய சுற்றுலா அனுமதி சீட்டு பெற்ற வாகனங்கள் வேறு வகையில் செயல்படுகின்றன. எஸ்எம்எஸ், இ-டிக்கெட் மற்றும் ரெட் பஸ், அபிபஸ் போன்ற செயலி மூலம் மின்னணு டிக்கெட் தந்து தனிநபர்களிடம் இருந்து கட்டணம் வசூலித்துள்ளனர்.

ஒப்பந்தத்தின் படி பேருந்து நிறுவனங்கள் அவர்களின் திட்டமிட்ட பாதை, தேதியை பின்பற்றாமல் இருந்துள்ளனர். சுற்றுலா பயணி புறப்படும், சேரும் இடம் பற்றிய விவரத்தை சுற்றுலா வாகன ஏற்பாட்டாளர்கள் 1 வருடத்துக்கு பத்திரப்படுத்தி வைக்க வேண்டும். தேவைப்படும் பட்சத்தில் 1 வருடத்துக்கான பயணிகள் விவரம் சமர்ப்பிக்கப்பட வேண்டும். மாநில எல்லை சோதனை சாவடி, காவல் சோதனை சாவடிகளில் சுற்றுலா பயணிகளின் விவரம், பயண வழி விவரங்களை பதிவு செய்ய வேண்டும். அகில இந்திய சுற்றுலா வாகனங்கள் எப்பொழுதும் பயணிகளின் பட்டியலை மின்னணு வடிவிலோ, காகித வடிவிலோ வைத்திருக்க வேண்டும்.

நாளை மறுநாள் முதல் அகில இந்திய சுற்றுலா வாகனங்கள் நெறிமுறைகளை கட்டாயம் பின்பற்றவேண்டும். அகில இந்திய சுற்றுலா அனுமதி சீட்டு பெற்ற பேருந்து உள்ளிட்ட வாகனங்கள் விதிமீறலில் ஈடுபட்டால் நடவடிக்கை எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

The post அகில இந்தியா சுற்றுலா வாகன அனுமதி சீட்டு; விதிமீறினால் நடவடிக்கை; தமிழ்நாடு போக்குவரத்துத்துறை எச்சரிக்கை appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu Transport Department ,Chennai ,
× RELATED அகில இந்திய சுற்றுலா பேருந்துகளுக்கு...