×

மங்காத வாழ்வளிப்பாள் மதுரை மீனாட்சி

மாலிக்காபூர் என்ற அந்நிய ஆக்கிரமிப்பாளன், இந்தியச் செல்வங்களைச் சூறையாடிய சமயம். மிகப் பெரிய இந்தியப் பரப்பில் கொள்ளை, கொள்ளையாய் பொக்கிஷங்கள்! பிரமித்த அவன், அந்தச் செல்வங்களை அடைய ஒவ்வொரு பகுதியாகப் பிரவேசித்து அனைத்தையும் தனக்குரிமையாக்கிக் கொண்டிருந்தான். அந்த வகையில், அவன் நாற்பதாயிரம் ஆண்டுகள் சரித்திர முக்கியத்துவம் பெற்ற மதுரை மாநகர் என்கிற திரு ஆலவாய் நகருக்குள் நுழைந்தான். ஏற்கெனவே அவனது கொள்ளை வெறி, கொலை வெறியைப் பற்றிக் கேள்விபட்டிருந்த ஆகம விற்பன்னர்கள், கோயிலின் கற்பக் கிருஹத்தினுள் ஒரே ஒரு விளக்கை மட்டும் எரியவிட்டு பின் மீனாட்சி அம்மன் கருவறையை மண்ணைப் போட்டு மூடிவிட்டனர். கோயிலினுள் நுழைந்த மாலிக்காபூரின் படைகள், கோயிலின் சிற்பங்கள் அனைத்தையும் துவம்சம் செய்தனர். அம்மன் சந்நதியை ஏதோ மணல் திட்டு என்று எண்ணி அதனுள் புகாமல் சென்றனர். மாலிக்காபூர் பற்றிய அச்சம் அகன்ற ஓராண்டு கழித்து, மக்கள் கோயிலைப் புதுப்பிக்க முனைந்தனர். மண்ணை அகற்றி கருவறையை நோக்கியபோது, அப்படியே திகைத்து நின்றார்கள். ஆமாம், என்றோ ஏற்றிவைத்த அகல் விளக்கு, அப்போதும் ஒளி குன்றாமல், பிரகாசமாக எரிந்து கொண்டிருந்தது! இது மீனாட்சி அம்மனின் சக்தி அல்லாமல் வேறு என்ன!

மீனாட்சி அம்மனின் சிலை, சுத்த மரகதக் கல்லால் ஆனதாகும். இதை செதுக்கியது தேவலோகச் சிற்பியான விஸ்வகர்மா என்கிற மயன் ஆவார். இந்த மீனாட்சி அம்மன் கோயிலைக்கடம்ப வனம் சூழ்ந்திருந்தது. பிரம்ம தேவனும், தேவேந்திரனும் விஷ்ணுவும் ஒருங்கிணைந்து உண்டாக்கிய கோயில்.அன்னை மீனாட்சி வெற்றியின் சின்னம். மீனாட்சி அம்மனை நேரில் கண்டவர் பலர். குமரகுருபரருக்கு முத்து மாலை வழங்கி மறைந்தவள் மீனாட்சி அம்மன். குழந்தை வடிவாக திருமலை நாயக்கருக்கும், காஞ்சனமாலை, மலையத்வாஜ பாண்டிய மன்னனுக்கும் காட்சி தந்தவள். சோமசுந்தரக் கடவுளை மணந்தவர். இன்றும் மீனாட்சி கல்யாண வைபோகத்தில், திருமலை நாயக்கர் தம் குடும்பத்துடனும், காஞ்சன மாலை – மலையத்வாஜ பாண்டியரும் மக்களோடு மக்களாக கலந்துகொண்டு சேவிக்கின்றனராம். இங்குள்ள பொற்றாமரை குளம் சோமசுந்தரேஸ்வரரால் உருவாக்கப்பட்டது. இங்கு தினமும் தாமரை மலர்கள் தங்கத்தினால் தோன்றும். இதனை எடுத்தே சப்த ரிஷிகளும் அன்னை மீனாட்சியை ஆராதித்து வந்தனர். இந்த பொற்றாமரைக் குளம் இன்றும் தெய்வீக சக்தி கொண்டது. ஒரு மீனோ, புழுவோ, பூச்சியோ இந்த குளத்தில் நிரந்தர வாசம் செய்யாது.

சங்கப்பலகை கொண்டு தமிழ்ப்புலவர்களின் திறனை சோதித்த இடம் இது. சிவனின் நெற்றிக்கண் பட்டு நக்கீரர் தனது உடம்பெல்லாம் புண்ணாகிப்போய் எரிச்சல் அடங்க இந்த பொற்றாமரைக் குளத்தில்தான் குதித்தார். குதித்த நொடியில் அக்னியினால்தான் ஏற்பட்ட பிணியும், வடுவும் நீங்கியது. கூன்பாண்டியனின் தீராத வயிற்று வலியும், இந்த கோயிலின் பிரசாதம் சமைக்கும் அடுப்பில் இருந்த சாம்பலினால் அகன்றது. ‘மந்திரமாவது நீறு’ என்பதும் ‘மருந்தாவதும் நீறே’ என்பதும் (நீறு என்றால் விபூதி) உண்மை. சொக்கநாதர் – மீனாட்சி திருமணத்தை நடத்தி வைக்க வைகுந்தத்தில் இருந்து பெருமாள் புறப்பட்டார். வரும் வழியில் ‘ஆதி மூலமே!’ என்று ஒரு யானை பெருமாளை அழைத்தது. நீர் அருந்த சென்ற யானையின் காலை, ஒரு முதலை கவ்வி இழுக்க, வலி பொறுக்கமாட்டாமல் உயிர் காக்குமாறு திருமாலை கஜேந்திரன் என்ற யானை அழைக்க, விஷ்ணுவானவர், பக்தனை ரட்சிக்க திசை மாறிப் போனார். முதலையைச் சக்கராயுதத்தால் கொன்று கஜேந்திரன் என்ற யானைக்கு மோட்சம் அளித்து, பிறகு மதுரை நோக்கி வந்தார். முகூர்த்த நேரம் முடிவதற்குள்ளாக கோடானுகோடி அம்சங்கள் அடங்கிய பவழக்கனிவாய் பெருமாள் முன்னின்று, அன்னை மீனாட்சி திருமணத்தை முடித்து வைத்தார்.

‘கரிவரத பெருமாள்’ என்ற சுந்தரராச அழகர் இதை கேள்விப்பட்டு சற்றே திகைத்து நின்ற இடமே ‘சோலை மலை’ – திருமாலிருஞ்சோலை என்னும் அழகர்மலை. இவரை, திருமணத்திற்குத் தான் வரவில்லை, விருந்துக்காவது வருக என சோமசுந்தரர், நந்தியை அனுப்பி அழைப்பு விடுத்தார். அதற்குள் விருந்தும் ஆரம்பம் ஆகிவிட்டது. சிவபெருமானுக்கு குண்டோதரன், மொட்ட முனீஸ்வரன், காத்தவராயன் போன்ற கணங்கள் உண்டு. விருந்து உண்டவர்களின் தாகத்தைத் தணிக்க, குண்டோதரனை நோக்கி சிவன் இந்த இடத்தில் ‘வை கை’ என்றார். உடனே வேகமாக நீர் பெருகி வந்து அனைவரின் தாகத்தையும் சாந்தி செய்தது. இதுவே இப்போது வைகை என பெயர் பெற்று விளங்கும் நதி. ராணி மங்கம்மாள், சத்திரம் அமைத்து மீனாட்சி தேவியாரை வணங்க வரும் பக்தர்களுக்கெல்லாம் உண்டி கொடுத்து உபசரித்தார். பெருமாள் அழகிய வஸ்திரம் தரித்து மதுரைக்கு வருகையில் அன்னை மீனாட்சி தன் தமையன் மதுசூதனனை வேண்டினாள். ‘நீ ஆற்றில் இறங்கி, இம்மதுரையம்பதியையும், தமிழகத்தையும் காக்க வேணும்’ என்றார். இதுவே அழகனார் இன்றும் ஆற்றில் இறங்கும் வைபவமாக விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. கடவுள்களால் தோற்றுவிக்கப்பட்ட இந்தக் கோயிலில், 12 கோபுரங்கள் உண்டு. இவை 12 ராசிகளை குறிக்கும். இந்தத் தலத்தில் 33,000 சிற்பங்கள் உண்டு. ஒவ்வொரு சிற்பத்திற்கும் உயிர் உண்டு. இங்குள்ள பத்திரகாளி பேய், பிசாசு போன்றவைகளிலிருந்து விடுதலை தருவாள்.

மகாவிஷ்ணு, தனக்குப் பிரியமான வெண்ணெயை உருட்டி பத்திரகாளி மீதும், ஊர்த்துவ தாண்டவர் மீதும் வீசினால், 108 புண்ணிய நதி தீரத்தில், நமது மூதாதையருக்கு திதி கொடுத்த பலன் சேரும். இங்குள்ள முக்குருணி விநாயகர் வெற்றியின் உறைவிடம். அன்னை மீனாட்சியை தொழுத பின்னர்தான் சொக்கநாதரை தொழ வேண்டும். மீனாட்சி அம்மன் கேட்டதை கொடுப்பார். சிவில் சர்வீசஸ் பரீட்சைக்கு செல்பவர்கள் அன்னை மீனாட்சியை தொழுது பின் முக்குருணி கணபதியை ஆராதித்து சிவனைப் பூஜித்து வர நூறு சதம் தெய்வ அருள் வெற்றிக்கு துணை ஆகும். எப்படிப்பட்ட பழி வியாஜ்ஜியம், தோஷம் இருந்தாலும் சரி, பொற்றாமரைக் குளத்தில் அமாவாசை அன்று நீராடி அன்னை மீனாட்சியை ஆராதித்து வாருங்கள். விரைவில் கடன் அடைபடும். தீராப் பிணி தீரும். வியாஜ்யம் வெல்லும் என்கின்றனர் சித்தர்கள்.

‘கடம்ப வனத்துறை அங்கயற்கண்ணி அனைத்து நலனு மீவாள். அன்னை இவளினுமுயர்ந்ததோர் இறை இல்லை கண்டோம் சத்யம் சொன்னோம். ஆதி தீர்த்தத்தமாவாசை (பொற்றாமரைக் குளம், அமாவாசை) யதனிலே விதரங் கொண்டு நீராடி அகிலாண்ட நாயகியா மங்கையற்கண்ணியை தொழுவார்க்கு முடியாததென் இம்மேதினியிலே. கலியால் கொண்ட துயரகல யம பயமது சாய தேவர்க்கரசும் (இந்திரன்) மயனும் கூடி சமைத்த அம்பலத்துறை அன்னை மீனாட்சி அடி பணிவீரேபில்லியுஞ் சூனியமோடும் பணி மேன்மை சேரும். மாடு கன்று விருத்தியாம், பட்ட வாழ்வு தழைக்குமாம், போன திரவ்யம் மீளுமாம் மொட்டைக் கோபு முனியை தொழுது நிற்பவர்க்கே.’ இது அகத்தியரின் அருள்வாக்கு. விஸ்வாமித்திரர், வசிஷ்டர், ஜமதக்கினி போன்ற சப்த ரிஷியராலும், பட்டினத்தார், அகஸ்தியர், போகர், புலிப்பாணி, அகப்பை சித்தர், பாம்பாட்டி சித்தர், சிவ வாக்கியர், திருமூலர் போன்ற சித்தர்களாலும், பற்பல மன்னர் பெருமக்களாலும் போற்றப்பட்டவர் அருள்மிகு மீனாட்சி. நாமும் உள்ள சுத்தியுடன் தொழுது வாழ்வை சிறப்பாக வைப்போமே!

The post மங்காத வாழ்வளிப்பாள் மதுரை மீனாட்சி appeared first on Dinakaran.

Tags : Madurai Meenakshi ,Malikapur ,India ,
× RELATED கோயில்களில் ஓராண்டு அர்ச்சகர் பயிற்சி: அறநிலையத்துறையினர் தகவல்