×

செங்கல்பட்டு ரயில்வே மேம்பால பாதையை ஒருவழி பாதையாக மாற்றியதால் பயங்கர போக்குவரத்து நெரிசல்: உரிய நடவடிக்கை எடுக்க கோரிக்கை

செங்கல்பட்டு, ஜூன் 11: செங்கல்பட்டு பழைய பேருந்து நிலைய ரயில்வே மேம்பால பாதையை, ஒருவழி பாதையாக மாற்றியதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்துள்ளனர். செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள ரயில்வே மேம்பாலம் வழியாக தாம்பரம், சென்னை நோக்கி செல்ல அனைத்து வாகனங்களுக்கும் தடைவிதித்து ஒருவழிபாதையாக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இந்த சாலை வழியாக மாமல்லபுரம், திருக்கழுக்குன்றம், கல்பாக்கம், திருப்போரூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்துவரும் அரசு மற்றும் தனியார் பேருந்துகள், கார், வேன், இருசக்கர வாகனங்கள் காலங்காலமாக சென்று வந்தன. மேம்பாலம் வழியாக செல்லும் வாகனங்கள் புலிப்பாக்கம் பகுதியை கடந்து திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையை கடக்கும்போது விபத்துக்கள் நடப்பதை தவிர்ப்பதற்காக, கடந்த 1 மாதமாக ஒருவழிபாதை நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டது. அப்போது, பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டிருந்தது. இந்நிலையில், நேற்று முதல் பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், செங்கல்பட்டு – காஞ்சிபுரம் சாலையையொட்டி 4 பள்ளிகள் இயங்கி வருகின்றன. இப்பள்ளியில், சுமார் 600 மாணவ – மாணவிகள் பயின்று வருகின்றனர். எற்கனவே, இச்சாலையில் கோடை விடுமுறைக்கு முன்பு பள்ளிகள் இயங்கியபோது காலையிலும், மாலையிலும் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது.

தற்போது, தற்போது இச்சாலை ஒருவழிப்பாதையாக மாற்றப்பட்டு விட்டதால், செங்கல்பட்டில் இருந்து சென்னை நோக்கி செல்லும் அனைத்து வாகனங்களும், செங்கல்பட்டு – காஞ்சிபுரம் பைபாஸ் சாலை வழியாக செல்வதால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்ப்பட்டு வருகிறது. மேலும் பள்ளி செல்லும் மாணவ – மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் சாலையை கடக்கவும், வாகனங்களை நிறுத்தவும் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும், விபத்து நடப்பதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதால் வழக்கம்போல ரயில்வே மேம்பால பாதையை இருவழிப்பாதையாக மீண்டும் நடைமுறைபடுத்தவும், காலை மற்றும் மாலை பள்ளிநேரங்களில் கூடுதல் போலீசார் பணியில் அமர்த்த வேண்டும் எனவும் பெற்றோர் மற்றும் வாகன ஓட்டிகள் தரப்பில் கோரிக்கை வைத்துள்ளனர்.

The post செங்கல்பட்டு ரயில்வே மேம்பால பாதையை ஒருவழி பாதையாக மாற்றியதால் பயங்கர போக்குவரத்து நெரிசல்: உரிய நடவடிக்கை எடுக்க கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Chengalpattu ,Chengalpattu Old Bus Station… ,Dinakaran ,
× RELATED செங்கல்பட்டு ரயில்வே மேம்பாலத்தில்...