×
Saravana Stores

வேலைக்காக பல ஊர்களுக்கு அலையும் உள்ளூர் தொழிலாளர்கள் நிம்மதி: உத்திரமேரூரில் விரைவில் சிப்காட் தொழிற்சாலை

காஞ்சிபுரம்: உத்திரமேரூரில் விரைவில் சிப்காட் தொழிற்சாலை அமையவுள்ளதால், வேலைக்காக பல ஊர்களுக்கு அலையும் உள்ளூர் தொழிலாளர்களுக்கு நிம்மதி அடைந்துள்ளனர். தமிழகத்தில் பல தொழிற்பேட்டைகள் இருந்தாலும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள தொழில்பேட்டைகள்தான் தொழில் வளர்ச்சி மட்டுமில்லாமல், அரசுக்கு வருவாய் ஈட்டித்தரும் தொழிற்பேட்டைகளாக அமைந்திருக்கிறது. அந்த வகையில், பல்வேறு தொழிற்பேட்டைகள் சென்னைக்கு அருகிலுள்ள காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ளது. பெரும்பாலான வேலை தேடும் இளைஞர்கள், சென்னையை நோக்கி படையெடுக்கின்றனர். இதனால், தமிழகத்தின் தலைநகரான சென்னை மற்றும் சென்னை ஒட்டிய புறநகர் பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது.

அவற்றை களையவும், உள்ளூர் மக்களுக்கு உள்ளூரிலே வேலை வழங்கவும் நடவடிக்கை எடுக்கும் வகையில் தொழிற்பேட்டைகள் கிராமங்களை நோக்கி நகர வேண்டும் அப்போதுதான் கிராமத்தில் உள்ளவர்களும் வேலைவாய்ப்பு பெற்று பொருளாதார ரீதியாக முன்னேற முடியும் என்ற தொலைநோக்கு பார்வையுடன் இந்த உத்திரமேரூர் சிப்காட் தொழிற்பேட்டை அமைகிறது. காஞ்சிபுரம் மாவட்டத்தில், உத்திரமேரூர் தொகுதி முழுக்க விவசாயத்தை நம்பியுள்ள பகுதி. இப்பகுதியில் தொழிற்பேட்டை உருவானால் ஏராளமான இளைஞர்களும், தொழில் நாடுநர்களும் வேலைவாய்ப்பு பெறுவார்கள், போதிய அளவு முன்னேற்றமும் அடையும் என்பது இப்பகுதி மக்களின் 30 ஆண்டுகளாக கோரிக்கையாக உள்ளது.

தமிழகத்திலேயே அதிக எண்ணிக்கையிலான தொழிற்சாலைகள் நிறைந்த மாவட்டமாகவும், உற்பத்தி ஏற்றுமதி என தொழில் துறைக்கு அனைத்து வகையிலான சாதகங்கள் கொண்டதாக காஞ்சிபுரம் மாவட்டம் உள்ளது. இதனால், உள்நாட்டு நிறுவனங்கள் மட்டுமல்லாம், வெளிநாட்டு தொழிற்சாலைகள் பலவும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் தொழில் துவங்க ஆர்வம் காட்டுகின்றன. மாவட்டம் முழுதும் சிறியதும், பெரியதுமாக 2,300க்கும் அதிகமான தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இதில் கண்ணாடி, ஆட்டோ மொபைல், எலெக்ட்ரானிக்ஸ், ரசாயனம், டயர் என பல வகையான பொருட்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. ஸ்ரீபெரும்புதுார், ஒரகடம், இருங்காட்டுக்கோட்டை பகுதிகளை சுற்றி 7 சிப்காட் தொழிற்பூங்காக்கள் இயங்குகின்றன. இதில், 1.5 லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.

இந்நிலையில், அடுத்தகட்டமாக உத்திரமேரூர் தாலுகாவில், திருப்புலிவனம், மருதம் ஆகிய இரு கிராமங்களிலும் புதிய சிப்காட் தொழிற்பூங்கா அமைக்க, தமிழக தொழில் துறை முடிவு செய்துள்ளது. அங்கு, நிலத்தை கையகப்படுத்தி தரவும், அதற்கு ஆகும் செலவினம் பற்றிய முழு விபரங்களை தயாரித்து, கருத்துருவாக அனுப்ப, காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகத்திடம் தொழில்துறை கேட்டுள்ளது. திருப்புலிவனம் கிராமத்தை சுற்றி புதிய சிப்காட் தொழிற்பூங்கா அமைக்க தேவையான அடிப்படை விபரங்களை வருவாய் துறையினர் சேகரிக்க துவங்கியுள்ளனர். திருப்புலிவனம் சுற்றி, 750 ஏக்கர் பரப்பளவில், சிப்காட் தொழிற்பூங்கா அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதில், 500 ஏக்கர் பரப்பளவில் அரசு நிலங்கள் இருப்பதால் மீதமுள்ள தனியார் பட்டா நிலங்களை கையகபடுத்துவதில் சிரமம் இருக்காது என தொழில் துறை கருதுகிறது. உத்திரமேரூர் தாலுகாவில் வசிக்கும் இளைஞர்கள், பெண்கள், பட்டதாரிகள் என பல தரப்பினரும், ஒரகடம், ஸ்ரீபெரும்புதுார் ஆகிய சிப்காட் தொழிற்சாலைகளுக்கும், அருகிலுள்ள செய்யாறு சிப்காட் தொழிற்சாலைக்கும் பணிக்கு செல்கின்றனர். திருப்புலிவனத்தில் தொழிற்சாலைகள் அமைந்தால், வேலைவாய்ப்பு பெறுவதோடு குடும்ப பொருளாதாரத்தை ஓரளவு உயர்த்த வாய்ப்பு ஏற்படும். உத்திரமேரூர் அருகே 5 கிமீ தொலைவில், திருப்புலிவனம் கிராமத்தில் சிப்காட் அமைக்கப்பட்டால் உத்திரமேரூர் தாலுகாவில் வசிப்போர், அங்கேயே இயங்கும் தொழிற்சாலைகளில் பணியாற்ற முடியும். நீண்ட தூரம் பயணிக்க வேண்டிய அவசியம் இருக்காது என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

சிப்காட் அமைப்பதற்கான கருத்துருவை மாவட்ட நிர்வாகம் தயாரித்து வருகிறது. காஞ்சிபுரம் மாவட்டத்தில், ஏற்கனவே இயங்கும் சிப்காட் தொழிற்சாலைகள் வாயிலாக, அரசுக்கு ஆண்டுதோறும் 1,000 கோடி ரூபாய்க்கு மேல் வருவாய் கிடைக்கிறது. இந்நிலையில், உத்திரமேரூர் அருகே மேலும் ஒரு சிப்காட் தொழிற்பூங்கா அமைக்கப்பட்டால், அரசுக்கும் கூடுதல் வருவாய் கிடைப்பதோடு, அங்குள்ள கிராம மக்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்க அதிகளவு வாய்ப்புகள் கிடைக்கும். இதுகுறித்து, வருவாய்த்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், திருப்புலிவனம் அருகே சிப்காட் அமைக்க நிலம் கையகப்படுத்தி தர சிப்காட் நிறுவனம் கேட்டுள்ளது. சிப்காட் அமைப்பது பற்றி அரசு தான் முடிவு செய்யும்’ என்றார்.

* விவசாயிகள் பாதிக்காமல் செயல்படுத்தப்படும்: எம்எல்ஏ சுந்தர்
உத்திரமேரூர் எம்எல்ஏ க.சுந்தர் தெரிவித்ததாவது: அரசுக்கு சொந்தமான நிலம், திருப்புலிவனம் பகுதியில் 500 ஏக்கர் வரை உள்ளது. இதனால், அங்கு சிப்காட் அமைந்தால் நல்லது என நினைக்கிறோம். உத்திரமேரூர் மக்கள் மாங்கால், ஒரகடம் போன்ற இடங்களில் உள்ள தொழிற்சாலைக்கு நீண்ட துாரம் பயணிக்கின்றனர். அதுபோன்ற அலைச்சல் இத்திட்டத்தால் குறையும், மருதம் கிராம மக்கள் இது சம்பந்தமாக என்னை வந்து பார்த்தார்கள். விவசாயிகள் பாதிக்காத வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்படும்.

தொழில் ரீதியாக உத்திரமேரூர் தாலுகா பின்தங்கியிருப்பதாக 30 ஆண்டுகளுக்கு முன்பாக, சட்டசபையில் கோரிக்கை விடுத்தேன். அப்போதைய முதல்வர் கருணாநிதியின் இந்த தாலுகாவை தொழில்ரீதியாக பின்தங்கிய தாலுகாவாக அறிவித்தார். அதன் தாக்கம் தான், தொழிற்சாலைகள் இப்போது வருவதற்கு காரணம். கிராமங்கள்தான் இந்தியாவின் முதுகெலும்பு என்றார் தேசத்தந்தை மகாத்மா காந்தியடிகள். அதன் அடிப்படையில் தொழிற்பேட்டைகள் கிராமங்களை நோக்கி செல்வதால் உள்ளூர் இலைஞர்களுக்கான வேலைவாய்ப்பு பெருகுவதோடு தொழில் வளமும் பெருகும். இந்தியாவிற்கே முன்னோடியாக தமிழகம் தொழில் வளர்ச்சியில் முன்னேற்ற பாதையில் செல்வதற்கு அச்சாரமாக விளங்கும்’ என்றார்.

The post வேலைக்காக பல ஊர்களுக்கு அலையும் உள்ளூர் தொழிலாளர்கள் நிம்மதி: உத்திரமேரூரில் விரைவில் சிப்காட் தொழிற்சாலை appeared first on Dinakaran.

Tags : Chipcotton factory ,Uttramerur ,Kanchipuram ,Chipcotton ,factory ,Uttaramerur ,Tamil Nadu ,Kanchipuram district ,
× RELATED மழைநீர் அகற்றும் பணியில் காஞ்சிபுரம் எம்எல்ஏ, மேயர்