×

1,283 பள்ளிகளில் ஆதார் பதிவு முகாம், 1.40லட்சம் மாணவர்களுக்கு விலையில்லா பாடபுத்தகங்கள் கலெக்டர், மேயர் தொடங்கி வைத்தனர் வேலூர் மாவட்டத்தில்

வேலூர், ஜூன் 11: வேலூர் மாவட்டத்தில் 1,283 பள்ளிகளில் மாணவ, மாணவிகளுக்கு அந்தந்த பள்ளியிலேயே ஆதார் பதிவு செய்யும் முகாம் மற்றும் விலையில்லா பாடபுத்தகங்களை வழங்கி கலெக்டர், மேயர் நேற்று நிகழ்ச்சியை தொடங்கி வைத்தனர். வேலூர் மாவட்டத்தில் 2024-25ஆம் கல்வி ஆண்டிற்கான பள்ளிகள் நேற்று திறக்கப்பட்டதை தொடர்ந்து மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா புத்தகங்கள் வழங்கும் நிகழ்ச்சி மற்றும் ஆதார் பதிவு சிறப்பு முகாம் கொணவட்டம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நேற்று தொடங்கியது. நிகழ்ச்சிக்கு கலெக்டர் சுப்புலட்சுமி தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். மேயர் சுஜாதா, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மணிமொழி, தாசில்தார் கோபி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த முகாம்களின் மூலம் மாவட்டத்தில் உள்ள 604 தொடக்க பள்ளிகள், 175 நடுநிலைப்பள்ளிகள், 73 உயர்நிலைப்பள்ளிகள், 85 மேல்நிலைப்பள்ளிகள் மற்றும் 346 தனியார் பள்ளிகள் என மொத்தம் 1,283 பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு ஆதார் பதிவு மேற்கொள்ள 14 எல்காட் பணியாளர்கள் மற்றும் பயிற்சி பெற்ற இல்லம் தேடிக் கல்வி தன்னார்வலர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

மேலும் 2024-25 ஆம் ஆண்டிற்கான கல்வி வகுப்புகள் நேற்று மீண்டும் திறக்கப்பட்டது. இதையடுத்து வேலூர் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் 85 மேல்நிலைப் பள்ளிகள், 73 உயர்நிலைப்பள்ளிகள், 175 நடுநிலைப்பள்ளிகள், 604 தொடக்கப்பள்ளிகள் மற்றும் 5 சுய நிதி (தமிழ் வழி) பள்ளிகள் என மொத்தம் 942 பள்ளிகளில் பயிலும் 1,40,000 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா பாட புத்தகங்கள் மற்றும் குறிப்பேடுகள் நேற்று முதல் வழங்கப்பட்டு வருகிறது. நிகழ்ச்சியில் மாவட்ட கல்வி அலுவலர்கள் தயாளன், பழனி, தனலட்சுமி, ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி உதவி திட்ட அலுவலர் திரு. மகாலிங்கம், பள்ளி தலைமை ஆசிரியர் வெங்கடேசன்(பொறுப்பு) உட்பட பலர் உடனிருந்தனர்.

The post 1,283 பள்ளிகளில் ஆதார் பதிவு முகாம், 1.40லட்சம் மாணவர்களுக்கு விலையில்லா பாடபுத்தகங்கள் கலெக்டர், மேயர் தொடங்கி வைத்தனர் வேலூர் மாவட்டத்தில் appeared first on Dinakaran.

Tags : Collector, Mayor ,Vellore district ,Vellore ,Collector ,Mayor ,Aadhaar ,Dinakaran ,
× RELATED மகசூல் அதிகரிக்க டிஏபி உரத்திற்கு...