×

பரந்தூர் புதிய விமான நிலையத்திற்கு நிலம் எடுப்பதற்கான அறிவிப்பு வெளியானது: 30 நாட்களுக்குள் ஆட்சேபனை தெரிவிக்கலாம்

சென்னை: பரந்தூர் புதிய விமான நிலையத்திற்கு நிலம் எடுப்பதற்கான முதல் நிலை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 30 நாட்களுக்குள் ஆட்சேபனைகளை தெரிவிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி மச்சேந்திரநாதன் தலைமையில் தமிழக அரசு அமைத்த குழு, பரந்தூரை சுற்றியுள்ள கிராமங்களை ஆய்வு செய்து அறிக்கை அளித்தது. அதன் அடிப்படையில், பரந்தூர் விமான நிலையத்துக்கு தேவையான 5,746 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த தமிழக தொழில் துறை அனுமதி அளித்துள்ளது. இதற்கான அரசாணை கடந்த ஆண்டு வெளியிடப்பட்டது.

இந்த திட்டத்துக்காக 5,746 ஏக்கர் நிலம் தேவைப்படுவதாகவும், இதற்கு தனியார் பட்டா நிலம் 3,774 ஏக்கர், அரசு நிலம் 1,972 ஏக்கர் கையகப்படுத்தப்படுவதாகவும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. தனியாரிடம் இருந்து கையகப்படுத்தும் நிலத்துக்கு, ஏற்கனவே அரசால் அறிவிக்கப்பட்ட வழிகாட்டுதல்படி ரூ.1,822.45 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என்று கணக்கிட்டு நிலம் எடுப்புக்காக சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலர், சிறப்பு துணை ஆட்சியர், சிறப்பு வட்டாட்சியர், துணை வட்டாட்சியர் உட்பட 326 பேர் நியமிக்கப்பட்டனர். இந்நிலையில், பரந்தூர் புதிய விமான நிலையம் அமைக்க நில எடுப்புக்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசின் தொழில், முதலீட்டு மற்றும் ஊக்குவிப்பு துறை தொடர்ந்து வெளியிட்டு வருகிறது.

இதன்படி, காஞ்சிபுரம் மாவட்டம் பெரும்புதூர் வட்டத்தில் உள்ள எடையார்பாக்கம் கிராமத்தில் 59 ஹெக்டேர் நிலத்தை எடுப்பதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. நிலம் குறித்து பாத்தியதை உள்ளவர்கள் தங்களின் கோரிக்கை மற்றும் ஆட்சேபனைகளை 30 நாட்களுக்குள் தெரிவிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. தனி மாவட்ட வருவாய் அலுவலர், புதிய பசுமைவெளி விமான நிலைய திட்டம், மண்டலம் 2, பிளாட் எண் – 59 மற்றும் 75, ரோஜாம்பாள் சுப்பிரமணிய முதலியார் தெரு, காரை கிராமம் காஞ்சிபுரம் மாவட்டம் என்ற முகவரியில் எழுத்து மூலமாக அளிக்கலாம். ஆட்சேபனைகள் மீது ஜூலை 22 மற்றும் 23, 30ம் தேதி விசாரணை மேற்கொள்ளப்படும். ஏற்கனவே இதுபோன்று, காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பொடவூர் கிராம், அக்கமாபுரம், சிறுவள்ளூர் உள்ள நிலத்தை எடுப்பதற்கான அறிவிப்பும் வெளியிடப்பட்டு இருந்தது. மேலும், பரந்தூர் புதிய விமான நிலையம் அமைக்க சுற்றுச்சூழல் அனுமதி கோரி தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகம் மத்திய, மாநில அரசுகளிடம் விண்ணப்பித்துள்ளது.

The post பரந்தூர் புதிய விமான நிலையத்திற்கு நிலம் எடுப்பதற்கான அறிவிப்பு வெளியானது: 30 நாட்களுக்குள் ஆட்சேபனை தெரிவிக்கலாம் appeared first on Dinakaran.

Tags : Parantur ,Airport ,CHENNAI ,Tamil Nadu government ,IAS ,Machendranathan ,Paranthur ,Paranthur New Airport ,Dinakaran ,
× RELATED மேலாளர் அறைக்கு வந்த மர்ம தொலைபேசி...