×

ஆதிதிராவிடர் நலத்துறை பெயர் மாற்றம் குறித்து ஆய்வு நடத்திய குழு பரிந்துரைக்கவில்லை: உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்

சென்னை: ஆதி திராவிடர் நலத்துறையின் பெயரை மாற்றம் செய்வது குறித்து ஆய்வு செய்த குழு பெயர் மாற்றம் செய்ய பரிந்துரைக்கவில்லை என்று தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் விளக்கம் அளித்துள்ளது. தமிழகத்தில் 76 இனங்கள் பட்டியல் இனத்தவர்கள் என்று கண்டறியப்பட்டு அவர்களுக்காக ஆதிதிராவிடர் நலத்துறை ஏற்படுத்தப்பட்டது. இந்த ஆதிதிராவிடர் நலத்துறையின் பெயரை பட்டியல் சாதிகள் நலத்துறை என்று அறிவிக்க கோரி சென்னையை சேர்ந்த மாரிமுத்து என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். மனுவில், பட்டியல் இனத்தவர்களுக்கான நலத்துறையின் பெயர் தவறாக மொழிபெயர்ப்பு செய்யப்பட்டிருப்பதாகவும், ஆதி திராவிடர் என்பது பட்டியலினங்களில் உள்ள 76 இனங்களில் ஒன்று என்றும் தெரிவிக்கப்பட்டது.

இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி ஆர்.மகாதேவன் மற்றும் நீதிபதி முகமது சபிக் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசு தரப்பில் ஆஜரான அரசு பிளீடர் எட்வின் பிரபாகர், பெயர் மாற்றம் செய்வது குறித்து ஆய்வு செய்ய குழு அமைக்கப்பட்டது. அந்த குழு ஆய்வு செய்த போது, பெயர் மாற்றம் செய்வது தொடர்பாக எந்த பரிந்துரையும் வழங்கவில்லை என்றார். அதற்கு மனுதாரர் தரப்பு வழக்கறிஞர், துறைகளின் மொழிபெயர்ப்பு சரியானதாக இருக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது என்றார். வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த விவகாரம் சாதாரண விஷயமல்ல. பல விவாதங்கள் இது சம்பந்தமாக நடந்து வருகிறது என்று குறிப்பிட்டு, விசாரணையை 2 வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.

The post ஆதிதிராவிடர் நலத்துறை பெயர் மாற்றம் குறித்து ஆய்வு நடத்திய குழு பரிந்துரைக்கவில்லை: உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல் appeared first on Dinakaran.

Tags : Adi Dravidar Welfare Department ,Tamil Nadu government ,High Court ,CHENNAI ,Madras High Court ,Tamil Nadu ,Tamilnadu government ,
× RELATED ஆதி திராவிடர் நலத்துறையின் பெயரை...