×

பிரதமர் மோடி தலைமையிலான அரசு இனிமேலாவது தமிழ்நாட்டிற்கும் தமிழக மக்களுக்கும் நல்லது செய்யுமா? :செல்லூர் ராஜு விமர்சனம்

சென்னை : தமிழ்நாட்டுக்கு மோடி அரசு செய்த துரோகங்கள் தெரியுமா என்ற காணொலியை அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு வெளியிட்டுள்ளார். மோடி அரசு செய்த துரோகங்கள் என்னென்ன தெரியுமா என்று பெண் ஒருவர் பேசும் வீடியோவை தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டார் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ. சமூக வலைதளங்களில் பரவி வரும் வீடியோவை தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்து பா.ஜ.க. அரசை செல்லூர் ராஜ விமர்சனம் செய்துள்ளார். கூட்டணி இருந்திருந்தால் அதிமுகவுக்கு வெற்றி கிடைத்திருக்கும் என்று பா.ஜ.க. ஆதரவு மனநிலையை வெளிப்படுத்தியதாக வேலுமணி மீது விமர்சனம் எழுந்த நிலையில், செல்லூர் ராஜு பாஜக எதிர்ப்பை உறுதிப்படுத்தினார். ஏற்கனவே ராகுல் காந்தி வீடியோவை பகிர்ந்து புகழாரம் சூட்டியிருந்தார் செல்லூர் ராஜூ. ராகுல் வீடியோ வெளியிட்டதற்கு எதிர்ப்பு எழுந்த பிறகே தனது பக்கத்தில் இருந்து அதனை நீக்கினார் செல்லூர் ராஜூ என்பது நினைவுக்கூரத்தக்கது.

இந்த நிலையில் செல்லூர் ராஜு வெளியிட்டுள்ள பதிவில், “புதிதாக பதவியேற்றுள்ள பிரதமர் மோடி ஜி தலைமையிலான அரசு இனிமேலாவது தமிழ்நாட்டிற்கும் தமிழக மக்களுக்கும் நல்லது செய்யுமா? பார்ப்போம்!!!,” எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும் அந்த பெண் பேசிய வீடியோவில், “மோடி ஆட்சி வந்த பிறகு தமிழ்நாட்டில் 1,300 பேர் வருமானவரித்துறை ஆய்வாளர்களாக பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர். ஆனால் அதில் ஒருத்தர் கூட தமிழர் கிடையாது. வருமானவரித்துறை கண்காணிப்பாளர்கள் என 172 பேருக்கு பணி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் அதில் ஒருத்தர் கூட தமிழர் கிடையாது. எஸ்பிஐ வங்கியில் 1,500 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைத்துள்ளது. ஆனால் அதில் ஒருத்தர் கூட தமிழர் கிடையாது.தெற்கு ரயில்வேயில் திருச்சி கோட்டத்தில் மட்டும் 1765 பேருக்கு பணி நியமனம் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் அதில் ஒருத்தர் கூட தமிழர் கிடையாது.திருச்சி பொன்மலை ரயில்வேயில் கிட்டத்தட்ட 3,800 பேருக்கு பணி வழங்கப்பட்டுள்ளது. அதில் 80% மக்கள் வட இந்தியர்கள் ஆவர். குரூப் டி தேர்வில் 2.5 லட்சம் தமிழர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன,” இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post பிரதமர் மோடி தலைமையிலான அரசு இனிமேலாவது தமிழ்நாட்டிற்கும் தமிழக மக்களுக்கும் நல்லது செய்யுமா? :செல்லூர் ராஜு விமர்சனம் appeared first on Dinakaran.

Tags : Modi ,Tamil Nadu ,Chennai ,Former ,AIADMK ,minister ,Sellur Raju ,Modi government ,Raju ,
× RELATED அனுமதி கோரி தமிழக அரசுக்கு கோப்புகளை...