×

ஜம்மு-காஷ்மீரில் பக்தர்கள் மீது தீவிரவாத தாக்குதல்: காங்கிரஸ் தலைவர்கள் கடும் கண்டனம்!

டெல்லி: காஷ்மீரில் நடந்த தீவிரவாத தாக்குதலுக்கு காங்கிரஸ் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். ஜம்மு காஷ்மீரின் ரியாசி மாவட்டத்தில் உள்ள ஷிவ்கோரி சிவன் கோயிலுக்கு சென்ற பக்தர்கள் ஒரு பேருந்தில் கத்ரா பகுதிக்கு திரும்பி கொண்டிருந்தனர். நேற்று மாலை 6.15 மணிக்கு போனி பகுதியில் உள்ள டெரியாத் என்ற கிராமத்துக்கு அருகே சென்று கொண்டிருந்த பேருந்து மீது தீவிரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தினர். எதிர்பாராத இந்த தாக்குதலால் டிரைவர் நிலைகுலைந்தார்.

இதனால் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் அருகிலிருந்த பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் பஸ்சில் இருந்த பக்தர்கள் 10 பேர் பலியாகினர். 33 பேர் படுகாயமடைந்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறையினர் உள்ளூர்வாசிகளின் உதவியுடன் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் சேர்த்துள்ளனர். அவர்களில் சிலர் கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என அஞ்சப்படுகிறது.

இதுகுறித்து ராகுல் காந்தி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்; ஜம்மு காஷ்மீர் மாநிலம் ரியாசி மாவட்டத்தில் உள்ள சிவகோடி கோவிலில் இருந்து பக்தர்கள் சென்ற பேருந்து மீது பயங்கரவாதிகள் நடத்திய கோழைத்தனமான தாக்குதல் மிகவும் வருத்தமளிக்கிறது. இந்த வெட்கக்கேடான சம்பவம் ஜம்மு காஷ்மீரில் கவலைக்கிடமான பாதுகாப்புச் சூழலை விளக்கும் உண்மையான படம். அவரை இழந்து வாடும் குடும்பத்தினர் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதுடன், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டும் என்று நம்புகிறேன். பயங்கரவாதத்திற்கு எதிராக ஒட்டுமொத்த நாடும் ஒன்றுபட்டு நிற்கிறது என கூறினார்.

மல்லிகார்ஜுன கார்கே தனது எக்ஸ் சமூக வலைத்தளப்பதிவில், “பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அவரது தேசிய ஜனநாயக கூட்டணி (NDA) அரசு பதவிப் பிரமாணம் செய்து கொண்டும், பல நாடுகளின் தலைவர்கள் நாட்டில் இருக்கும் போது கூட, பக்தர் களை ஏற்றிச் சென்ற பேருந்து மீது நடத்தப்பட்ட கொடூரமான பயங்கரவாதத் தாக்குதலில் 10 இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர். மக்கள் மீது நடத்தப்பட்ட இந்த கொடூரமான பயங்கரவாத தாக்குதலை சந்தேகத்திற்கு இடமின்றி கண்டிக்கிறோம். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எங்களது ஆழ்ந்த அனுதாபங்கள் மற்றும் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறோம்.

பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசும், அதிகாரிகளும் உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும். மூன்று வாரங்களுக்கு முன்பு, பஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது, மேலும் ஜம்மு – காஷ்மீரில் பல பயங்கரவாத சம்பவங்கள் தடையின்றி தொடர்கின்றன. மோடி (இப்போது தேசிய ஜனநாயக கூட்டணி அரசு) அரசாங்கத்தால் அமைதி மற்றும் இயல்புநிலையை கொண்டு வருவதற்கான அனைத்து பிரசாரங்களும் வெற்றுத்தனமாக ஒலிக்கின்றன. பயங்கரவாதத்திற்கு எதிராக இந்தியா ஒன்றுபட்டு நிற்கிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.

The post ஜம்மு-காஷ்மீரில் பக்தர்கள் மீது தீவிரவாத தாக்குதல்: காங்கிரஸ் தலைவர்கள் கடும் கண்டனம்! appeared first on Dinakaran.

Tags : Extremist ,Jammu ,Congress ,Delhi ,Kashmir ,Shivgori ,Shivan Temple ,Jammu and Kashmir ,Riazi district ,Katra ,Jammu and ,Dinakaran ,
× RELATED ஜம்மு காஷ்மீரில் தொடர்ந்து 4 நாட்களாக...