பவானி,ஜூன்10: பவானி ஆற்றில் கூடுதுறை முதல் காலிங்கராயன் அணைக்கட்டு வரையில் ஆகாயத்தாமரை வளர்ந்து, தண்ணீரின் மேற்பரப்பை ஆக்கிரமித்துள்ளது.இதனால், ஆற்றில் நீரோட்டம் பாதிக்கப்படுவதோடு, அடர்ந்து வளர்ந்த ஆகாயத் தாமரைகளுக்கு மத்தியில் பரிசலில் சென்று மீனவர்கள் மீன்கள் பிடிக்க முடியாத நிலை ஏற்பட்டது. பவானி ஆற்றில் நீரோட்டம் இல்லாததால் ஆகாயத்தாமரைகள் வெளியேறாமல் தேங்குவதால், அடர்ந்து வளர்ந்து வந்தது.
மேலும், கரையோரப் பகுதிகளிலும் சிறு செடிகள், மரங்கள் வளர்ந்து புதர் போன்று காணப்பட்டது. இதனால், பவானி ஆற்றை முற்றிலும் ஆக்கிரமித்த ஆகாயத்தாமரைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து, நீர்வள ஆதாரத் துறை சார்பில் ஆற்றின் கரையோரங்களில் சுத்தம் செய்யவும், ஆகாயத்தாமரைகளை அகற்றவும் முடிவு செய்யப்பட்டது.
ராட்சத ஜேசிபி இயந்திரம் பவானி ஆற்றில் இறக்கப்பட்டு, கூடுதுறை முதல் கரையோரப் பகுதிகளில் அடர்ந்து வளர்ந்திருந்த புதர்கள் சுத்தம் செய்யப்பட்டு வருகிறது. மேலும், ஆற்றுக்குள் தண்ணீரில் தேங்கி நிற்கும் ஆகாய தாமரைகளை இழுத்து அகற்றும் பணியும் மேற்கொள்ளப்பட்டது. கூடுதுறை தொடங்கி பவானி பாலம், பழைய பஸ் நிலையம் வழியாக காலிங்கராயன் அணைக்கட்டு வரையில் ஆகாயத்தாமரைகள் அகற்றும் பணி தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என நீர்வள ஆதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் காலங்களில் ஆகாயத்தாமரைகள் பவானி பழைய பாலத்தின் வழியே வெளியேற முடியாமல் அடைத்துக் கொள்வதும், பின்னர் அதனை அகற்ற முடியாமல் சிரமப்படுவதும் தொடர்ந்து வருகிறது. இந்நிலை ஏற்படாமல் தவிர்க்கும் வகையில் முன்னெச்சரிக்கையாக ஆகாயத்தாமரைகள் அகற்றும் பணி தற்போது தொடங்கி உள்ளதற்கு பொதுமக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
The post பவானி ஆற்றினை ஆக்கிரமித்த ஆகாயத்தாமரைகள் அகற்றம் appeared first on Dinakaran.