×

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 32,571 பேர் குரூப் 4 தேர்வு எழுதினர்:  8,150 பேர் பங்கேற்கவில்லை தாமதமாக வந்த மாணவர்கள் விரட்டியடிப்பு

காஞ்சிபுரம், ஜூன் 10: காஞ்சிபுரம் மாவட்டத்தில் விண்ணப்பித்த 40,721 பேரில் 32,571 பேர் மட்டுமே குரூப் 4 தேர்வு எழுதியுள்ளனர். இதில் 8,150 பேர் தேர்வு எழுதவில்லை. தமிழ்நாடு முழுவதும் நேற்று குரூப் 4 தேர்வு நடைபெற்றது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் 40,721 பேர் தேர்வு எழுத விண்ணப்பித்திருந்தனர். இதில் நேற்று 32,571 பேர் மட்டுமே தேர்வு எழுதியுள்ளனர். 8,150 பேர் தேர்வு எழுதவில்லை. இந்தநிலையில் காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் அரசு சேக்கிழார் பள்ளி மையத்தில் நடைபெற்ற குரூப் 4 தேர்வை கலெக்டர் கலைச்செல்வி மோகன் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறியதாவது : தேர்வுக்கு 40,721 பேர் விண்ணப்பித்த நிலையில் வருகை புரிந்தவர்கள் 32,571 மட்டுமே ஆகும். மாவட்டத்தில் மொத்தம் 96 தேர்வு மையங்களில் 142 தேர்வு கூடங்களில் தேர்வு நடைபெற்று வருகிறது. இத்தேர்வினை கண்காணிக்கும் பொருட்டு துணை கலெக்டர்கள் நிலையில் கண்காணிப்பு அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், துணை கலெக்டர்கள் நிலையில் 6 பறக்கும் படை குழு அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு தேர்வு கூடத்தையும் தனித்தனியாக கண்காணிக்க 142 அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர் என்றார். இதில் காஞ்சிபுரம் சங்கரா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற குரூப் தேர்வில் ஒரு பெண் மணக்கோலத்தில் வந்து தேர்வு எழுதினார் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் காஞ்சிபுரத்தில் சென்னை – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை அருகில் உள்ள பில்லாபாங் பள்ளி தேர்வு மையத்தில் குரூப் 4 தேர்வு நடைபெற்றது. காலை 9.30 மணி முதல் மதியம் 2.30 வரை தேர்வு நடைபெற்றது. அந்த நுழைவுச் சீட்டுடன் இணைந்த 2-ம் பக்கத்தில், 8.30 மணிக்கே தேர்வு அறைக்கு வந்துவிட வேண்டும், 9 மணிவரை மட்டுமே அனுமதிக்கபடுவதற்கான சலுகை நேரம் வழங்கப்படும் என்று விதிமுறைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதில் பலர் முதல் பக்கத்தை மட்டுமே பிரிண்ட் எடுத்ததால் 2-ம் பக்கத்தில் இருந்த இந்த விதிமுறைகள் தெரியவில்லை. இந்நிலையில் காலை 9 மணிக்கு மிகச் சரியாக தேர்வு மையத்தின் கேட் அடைக்கப்பட்டது. இதனால் 9.01 க்கு வந்த தேர்வர்கள் தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்படவில்லை. எனவே, தேர்வு மையத்திற்கு 9 மணிக்கு மேல் சுமார் 20 இளைஞர்கள் வந்தனர். 9 மணிக்கே தேர்வு மையத்தின் கதவுகள் பூட்டப்பட்டதால் 9.01-ல் இருந்தே வந்தவர்கள் தேர்வு மையத்துக்குள் அனுமதிக்கப்படவில்லை. இதனால் வெளியில் காத்திருந்த சுமார் 20 பேர் 9.30 மணிக்குத்தானே தேர்வு நேரம் என்று காவல்துறையினரிடம் வாக்குவாதம் செய்தனர். மேலும் தேர்வு நடத்தும் அலுவலர்களிடம் தங்களை தேர்வு எழுத அனுமதிக்க ஏற்பாடு செய்யுமாறு, வேண்டுகோள் வைத்த இளைஞர்களை பாதுகாப்புக்கு வந்திருந்த போலீசார் விரட்டி அடித்தனர். இதனால் அப்பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.

செங்கல்பட்டில் 16,251 பேர் ஆப்சென்ட்
செங்கல்பட்டு மாவட்டத்தில் டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுத மொத்தம் 54 ஆயிரத்து 325 பேர் விண்ணப்பித்திருந்தனர். இந்நிலையில், செங்கல்பட்டு மாவட்டத்தில் செங்கல்பட்டு, மதுராந்தகம், திருப்போரூர், திருக்கழுக்குன்றம், செய்யூர், வண்டலூர், தாம்பரம், பல்லாவரம் உள்ளிட்ட 8 தாலுகாக்களில் உள்ள 185 மையங்களில் டிஎன்பிஎஸ்சி தேர்வு நேற்று நடைபெற்றது. செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகம் சார்பில் தேர்வு மையங்களுக்குச் செல்ல சிறப்பு பேருந்து வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மேலும், தேர்வு மையங்கள் வாரியாக போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். 47 மொபைல் யூனிட்டுகள் அடங்கிய அதிகாரிகள் தேர்வு மையங்களில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். செங்கல்பட்டு வித்யாசாகர் மகளிர் கல்லூரியில் நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி தேர்வை சப்-கலெக்டர் நாராயண சர்மா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். செங்கல்பட்டு மாவட்டத்தில் டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுத மொத்தம் 54 ஆயிரத்து 325 பேர் விண்ணப்பித்திருந்தனர். இதில், 40 ஆயிரத்து 74 பேர் தேர்வு எழுதினர். 16 ஆயிரத்து 251 பேர் தேர்வில் பங்கேற்கவில்லை.

கண்ணீருடன் திரும்பினர்
காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் தேர்வர்கள் வெளியில் காத்திருந்த நிலையில், திடீரென்று அங்கு ரோந்து வாகனத்தில் வந்த போலீசார், தேர்வுக்கே தாமதமாக வந்த நீங்கள் அரசு ஊழியர்களாகி என்ன செய்யப்போகிறீர்கள்? நேரம் முடிந்துவிட்டது, அனைவரும் வெளியே செல்லுங்கள் என்று மிரட்டும் தொனியில் கூறினர். இதனால் ஆத்திரம் அடைந்த தேர்வர்கள், காவல்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஆத்திரமடைந்த போலீசார், தேர்வர்களை லத்தியைக் காட்டி, அங்கிருந்து விரட்டி அடித்தனர். இதையடுத்து, தேர்வெழுத வந்த பெண்கள் உள்ளிட்ட பலரும் கண்ணீருடன் அங்கிருந்து திரும்பிச் சென்றனர்.

The post காஞ்சிபுரம் மாவட்டத்தில் 32,571 பேர் குரூப் 4 தேர்வு எழுதினர்:  8,150 பேர் பங்கேற்கவில்லை தாமதமாக வந்த மாணவர்கள் விரட்டியடிப்பு appeared first on Dinakaran.

Tags : Kanchipuram district ,Kanchipuram ,Tamilnadu ,Kanchipuram district… ,Dinakaran ,
× RELATED இன்னுயிர் காப்போம் திட்டம் மூலம் ரூ.3.80...