×

அண்ணாமலையார் கோயிலில் ஏராளமான பக்தர்கள் திரண்டனர் 3 மணி நேரம் வரிசையில் காத்திருந்து தரிசனம் கோடை விடுமுறை நிறைவு

திருவண்ணாமலை, ஜூன் 10: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், கோடை விடுமுறையின் கடைசி தினமான நேற்று பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. அதனால், 3 மணி நேரம் வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர். திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு வருகை தரும் பக்தர்களின் எண்ணிக்கை கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்து வருகிறது. பவுர்ணமி மற்றும் விசேஷ நாட்களில் மட்டுமே பக்தர்கள் வருகை அதிகரித்து இருந்த நிலைமாறி, வார இறுதி நாட்களிலும், தொடர் விடுமுறைகளிலும் ஏராளமான பக்தர்கள் தரிசனக்காக வருகின்றனர். குறிப்பாக, இதுவரை எப்போதும் இல்லாத அளவில் இந்த ஆண்டு கோடை விடுமுறை தொடங்கியதில் இருந்து அண்ணாமலையார் கோயிலில் கூட்டம் அலைமோதியது. வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் தரிசனத்துக்காக திரண்டனர். கடந்த ஏப்ரல் மற்றும் மே மாத பவுர்ணமி நாட்களில் வரலாறு காணாத அளவில் பக்தர்கள் திரண்டனர்.

இந்நிலையில், கோடை விடுமுறையின் கடைசி நாளான நேற்று அண்ணாமலையார் கோயிலில் தரிசனத்திற்காக கூட்டம் அலைமோதியது. அதன்படி, அதிகாலையில் இருந்தே பொது தரிசன வரிசை மற்றும் ₹50 கட்டண தரிசன வரிசையில் கூட்டம் அலைமோதியது. அதனால், நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் தரிசனம் செய்தனர். மேலும், தரிசன வரிசை வெளிப்பிரகாரம் வரை நீண்டிருந்தது. எனவே, தரிசன வரிசையில் சுமார் 3 மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. தரிசனத்துக்காக வரிசையில் காத்திருந்த பக்தர்களுக்கு கோயில் நிர்வாகம் சார்பில் குளிர்ந்த மோர் மற்றும் நாள்தோறும் பிரசாதம் வழங்கும் திட்டத்தின் கீழ் லட்டு வழங்கப்பட்டது. கடந்த சில நாட்களுக்கு பிறகு, நேற்று வெயிலின் தாக்கம் சற்று அதிகரித்து காணப்பட்டது. ஆனாலும், அதையும் பொருட்படுத்தாமல் தரிசன வரிசையில் பக்தர்கள் காத்திருந்து தரிசனம் செய்தனர்.

The post அண்ணாமலையார் கோயிலில் ஏராளமான பக்தர்கள் திரண்டனர் 3 மணி நேரம் வரிசையில் காத்திருந்து தரிசனம் கோடை விடுமுறை நிறைவு appeared first on Dinakaran.

Tags : Annamalaiyar temple ,Tiruvannamalai ,Thiruvannamalai ,Annamalaiyar ,Temple ,
× RELATED (திமலை) அண்ணாமலையார் கோயிலில்...