×

ஆட்சியர் அலுவலகத்தில் ஜீப் கண்ணாடி உடைப்பு கடலூரில் பரபரப்பு

கடலூர், ஜூன் 10:கடலூர்-புதுச்சேரி மாநில எல்லை அருகே கஸ்டம்ஸ் சாலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அமைந்துள்ளது. ஆட்சியர் அலுவலகத்துக்கு தினந்தோறும் ஏராளமான பொதுமக்கள் வந்து செல்கின்றனர். குறிப்பாக திங்கட்கிழமைகளில் குறை கேட்பு நாள் கூட்டத்தில் ஏராளமான பொதுமக்கள் மனு அளிக்க வருவர். இந்நிலையில் ஆட்சியர் அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அரசு வாகனமான ஜீப் கண்ணாடி மற்றும் மாவட்ட ஆட்சியர் அறைக்கு வெளியே வைக்கப்பட்டிருந்த ஆட்சியர் அருண் தம்புராஜின் பெயர் பலகை மற்றும் கோட்டாட்சியர் அலுவலகத்தில் வெளியே வைக்கப்பட்டிருந்த பெயர் பலகை உள்ளிட்டவைகளை உடைத்து சேதப்படுத்தப்பட்டிருந்தது.

நேற்று இதனை பார்த்த அலுவலக ஊழியர்கள், ஆட்சியர் அலுவலக வாயிலில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசாருக்கு தகவல் அளித்தனர். தகவல் அறிந்த கடலூர் புதுநகர் போலீசார், ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் ஜீப் கண்ணாடி மற்றும் ஆட்சியரின் பெயர் பலகை உள்ளிட்டவைகளை அடித்து நொறுக்கிய மர்ம நபர்கள் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தடயவியல் மற்றும் கைரேகை நிபுணர்களும் ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து தடயங்கள் மற்றும் கைரேகைகளை சேகரித்தனர். மேலும் ஆட்சியர் அலுவலகத்தில் பதிவாகியுள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அதில் ஆட்சியர் அலுவலகத்தில் புகுந்து ஜீப் கண்ணாடியை உடைத்து, ஆட்சியர் அறைக்கு வெளியே இருந்த பெயர் பலகையை சேதப்படுத்தியது சொக்கன்கொல்லை பகுதியை சேர்ந்த விஏஓ பாலசண்முகம்(35) என்பவது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post ஆட்சியர் அலுவலகத்தில் ஜீப் கண்ணாடி உடைப்பு கடலூரில் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Cuddalore ,Customs Road ,Cuddalore-Puducherry ,Grievance Day ,Jeep ,
× RELATED கடலூர் மாவட்டம் மருங்கூர் அகழாய்வில்...