×

பிறப்பு, இறப்பு பதிவுச் சான்றுகளை பெற நிபந்தனைகள்: பதிவுத்துறை உத்தரவு

சென்னை: பதிவுத்துறையில் ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட பிறப்பு, இறப்பு சான்றிதழ்களை பெற புதிய நிபந்தனைகளை விதித்து பதிவுத்துறை உத்தரவிட்டுள்ளது. ஊரகப் பகுதிகளில் பிறப்பு, இறப்பு விவரங்களை, சார் பதிவாளர் அலுவலகங்களில் பதிவு செய்யும் வழக்கம் இருந்தது. தற்போது, மருத்துவமனை வாயிலாக இந்த விவரங்கள் பெறப்பட்டு, உள்ளாட்சி அமைப்புகளில் பதிவு செய்யப்படுகின்றன.

ஆனாலும், சார் பதிவாளர் அலுவலகங்களில் பதிவு செய்யப்பட்ட பிறப்பு, இறப்பு விவரங்களின் நகல்கள், பல்வேறு நிலைகளில் மக்களுக்கு தேவைப்படுகின்றன. இது தொடர்பான நகல்கள் தேவைப்படுவோர், எழுத்துப்பூர்வமாக விண்ணப்பித்து பெறலாம். இதுபோன்ற விவரங்களை பெற, பதிவுத்துறை புதிய நிபந்தனைகளை விதித்துள்ளது. இதுகுறித்து பதிவுத்துறை பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது: என்ன காரணத்துக்காக சான்றிதழ்களை கேட்கிறார் என்பதை மனுவில் தெரிவிக்க வேண்டும்.

குறிப்பாக, யாருடைய பிறப்பு, இறப்பு விவரங்களை கேட்கிறாரோ, அவருக்கு இன்னார் இந்த உறவு முறை என்பதை தெரிவிக்க வேண்டும். மனுவில், இந்த விவரங்கள் முறையாக குறிப்பிடப்பட்டுள்ளனவா என்பதை சார் பதிவாளர்கள் ஆய்வு செய்ய வேண்டும். மனுதாரரின் ஆதார் உள்ளிட்ட அடையாள ஆவணங்களையும் சரிபார்க்க வேண்டும். ஏற்கனவே இது தொடர்பாக உத்தரவுகள் இருந்தாலும், இந்த விஷயத்தில் சார் பதிவாளர்கள் அலட்சியம் காட்டுவதாக புகார்கள் வந்துள்ளன. இந்த நிபந்தனைகளை முறையாக கடைப்பிடிக்க வேண்டியது அவசியம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post பிறப்பு, இறப்பு பதிவுச் சான்றுகளை பெற நிபந்தனைகள்: பதிவுத்துறை உத்தரவு appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,Dinakaran ,
× RELATED போலி ஐடி மூலம் மெயில் அனுப்பிய மர்ம...