×

ஜனாதிபதி மாளிகையில் கோலாகல விழா பிரதமராக மோடி பதவியேற்றார்: 30 கேபினட் அமைச்சர்கள், 5 பேருக்கு தனிப்பொறுப்பு

* 36 பேர் இணை அமைச்சர்கள், 32 பேர் கழற்றி விடப்பட்டனர், பாஜவுக்கு 61; கூட்டணி கட்சிகளுக்கு 11, தமிழகத்துக்கு ஓரிடம் மட்டும்

புதுடெல்லி: ஜனாதிபதி மாளிகையில் நேற்று கோலாகலமாக நடந்த பதவி ஏற்பு விழாவில், தொடர்ந்து 3வது முறையாக மோடி பிரதமராக பதவி ஏற்றுக் கொண்டார். அவரைத் தொடர்ந்து, 30 கேபினட் அமைச்சர்களும், தனி பொறுப்புடன் கூடிய 5 இணை அமைச்சர்களும், 36 இணை அமைச்சர்களும் பதவி ஏற்றனர். தமிழ்நாட்டில் இருந்து எல்.முருகன் மட்டுமே மீண்டும் அமைச்சரவையில் சேர்க்கப்பட்டுள்ளார். அமைச்சரவையில் பிரதமர் மோடி உட்பட பாஜவை சேர்ந்த 61 பேரும், கூட்டணி கட்சிகள் சார்பில் 11 பேரும் இடம் பெற்றுள்ளனர். முந்தைய பாஜ ஆட்சியில் அமைச்சர்களாக இருந்த 32 பேருக்கு இம்முறை வாய்ப்பு வழங்கப்படவில்லை.

3வது முறையாக ஆட்சி: நாட்டின் 18வது மக்களவை தேர்தலில் பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 293 இடங்களிலும், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அடங்கிய இந்தியா கூட்டணி 234 இடங்களிலும், சுயேச்சைகள் 16 இடங்களிலம் வெற்றி பெற்றன. கடந்த 2 மக்களவை தேர்தலிலும், தனிப்பெரும்பான்மைக்கு தேவையான 272 தொகுதிகளுக்கும் அதிகமாக அசுர பலத்துடன் வென்ற பாஜ இம்முறை 240 இடங்களை மட்டுமே கூட்டணி கட்சிகள் தயவுடன் 3வது முறையாக ஆட்சியை பிடித்தது.

இதைத் தொடர்ந்து பிரதமர் மோடி தலைமையிலான புதிய அமைச்சரவை பதவி ஏற்பு விழா டெல்லியில் ஜனாதிபதி மாளிகையில் நேற்று கோலாகலமாக நடந்தது. 9,000 விருந்தினர்கள்: விழாவில், துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர், பாஜ மூத்த தலைவர்கள் அமித்ஷா, ராஜ்நாத் சிங், கட்சியின் தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா, கூட்டணி கட்சியை சேர்ந்த தெலுங்கு தேசம் தலைவர் சந்திரபாபு, ஐக்கிய ஜனதா தள தலைவரும் பீகார் முதல்வருமான நிதிஷ் குமார் மற்றும் திரைத்துறை பிரபலங்கள், தொழிலதிபர்கள், மத தலைவர்கள், அண்டை நாடுகளின் தலைவர்கள் என 9,000 பேர் பங்கேற்றனர்.

விழாவை எதிர்க்கட்சிகள் புறக்கணித்த நிலையில், இந்தியா கூட்டணி சார்பாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே பங்கேற்றார். பதவி ஏற்பு விழாவையொட்டி, பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும், ஜனாதிபதி மாளிகை வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. மோடி பதவி ஏற்பு: இரவு 7.23 மணிக்கு விழாவை ஜனாதிபதி திரவுபதி முர்மு தொடங்கி வைத்தார். முதல் நபராக மோடி தொடர்ந்து 3வது முறையாக பிரதமராக பதவி ஏற்றார். அவருக்கு ஜனாதிபதி முர்மு பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.

பிரதமர் மோடியை தொடர்ந்து, ராஜ்நாத் சிங், அமித்ஷா, நிதின் கட்கரி உள்ளிட்டோர் ஒன்றிய அமைச்சர்களாக பதவி ஏற்றுக் கொண்டனர். நிர்மலா சீதாராமன், ஜெய்சங்கர் என முந்தைய பாஜ ஆட்சியில் ஒன்றிய அமைச்சர்களாக இருந்த 39 பேர் மீண்டும் அமைச்சர்களாக பதவி ஏற்றுக் கொண்டனர். அணிவகுத்த மாஜி முதல்வர்கள்: கடந்த 2020ம் ஆண்டு முதல் பாஜ தேசிய தலைவராக இருந்த ஜெ.பி.நட்டா இம்முறை அமைச்சராக பதவி ஏற்றுக் கொண்டார்.

இதுதவிர, மபியின் முன்னாள் முதல்வரும் 18 ஆண்டுகள் முதல்வராக பதவி வகித்தவருமான சிவராஜ் சிங் சவுகான் முதல் முறையாக ஒன்றிய அமைச்சராக பதவி ஏற்றார். இதே போல, அரியானா மாநில முன்னாள் முதல்வரான மனோகர்லால் கட்டார், அசாம் மாநில முன்னாள் முதல்வர் சர்பானந்தா சோனோவால், பாஜ கூட்டணியில் அங்கம் வகிக்கும் மஜத தலைவரும் கர்நாடக முன்னாள் முதல்வருமான குமாரசாமி, பீகார் முன்னாள் முதல்வரான இந்துஸ்தான் அவாமி மோர்ச்சா கட்சி தலைவர் ஜிதன் ராம் மஞ்சி ஆகியோரும் அமைச்சர்களாக பதவி ஏற்றனர்.

தமிழகத்தில் ஏமாற்றம்: இம்முறை மக்களவை தேர்தலில் பிரதமர் மோடி தமிழ்நாட்டிற்கு அதிக முக்கியத்துவம் அளித்தார். தேர்தல் பிரசாரத்திற்காக பலமுறை தமிழ்நாட்டிற்கு வந்து சென்றார். இதனால், தமிழ்நாட்டில் பாஜ இம்முறை வரலாறு காணாத வெற்றி பெறும் என மோடியும், அமித்ஷாவும் மீண்டும் மீண்டும் கூறி வந்தனர். ஆனால், அப்படிப்பட்ட எந்த அதிசயமும் நடக்கவில்லை. தமிழ்நாடு, புதுச்சேரி சேர்த்து 40 இடங்களையும் திமுக கூட்டணி மகத்தான வெற்றி பெற்றது.

ஆனாலும் கூட தமிழ்நாட்டில் இருந்து அண்ணாமலை, தமிழிசை சவுந்தரராஜன் உள்ளிட்டோருக்கு அமைச்சரவையில் இடம் தர பாஜ மேலிடம் முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகின. ஒரே அமைச்சர்: அதற்கேற்றார் போல் அண்ணாமலை, தமிழிசைக்கு பதவி ஏற்பு விழாவுக்கு அழைப்பு அனுப்பப்பட்டது. ஆனால், அவர்களுக்கு எந்த பதவியும் வழங்கப்படவில்லை. ஏற்கனவே அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த எல்.முருகன் மட்டுமே மீண்டும் இணை அமைச்சராக பொறுப்பேற்றார்.

அமைச்சரவையில் தமிழகத்திற்கு பிரதிநிதித்துவம் அளிக்கும் வகையில் அவருக்கு மட்டுமே மீண்டும் பதவி தரப்பட்டுள்ளது. 72 அமைச்சர்கள்: இதுதவிர, பாஜ கூட்டணி கட்சிகள் சார்பில் நிதிஷ் குமாருக்கு மிகவும் நெருக்கமானவரான ஐக்கிய ஜனதா தளத்தின் ராஜிவ் ரஞ்சன் லாலன், தெலுங்கு தேசம் கட்சியின் ராம் மோகன் நாயுடு, லோக் ஜனசக்தி தலைவர் சிராக் பஸ்வான் ஆகியோர் கேபினட் அமைச்சர்களாகவும், சிவசேனா ஷிண்டே அணியின் பிரதாப்ராவ் ஜாதவ், ஆர்எல்டி தலைவர் ஜெயந்த் சவுத்ரி உள்ளிட்டோர் தனி பொறுப்பு இணை அமைச்சர்களாகவும், கேரளாவில் பாஜவுக்கு வெற்றி தேடித்தந்த திருச்சூர் எம்பியான நடிகர் சுரேஷ் கோபி இணை அமைச்சராகவும் பதவியேற்றனர்.

மொத்தம் 72 அமைச்சர்களுடன் பிரதமர் மோடியின் பதவி ஏற்பு விழா இரவு 10 மணிக்கு நிறைவடைந்தது. இதையடுத்து பல்வேறு சிறப்பு விருந்தினர்களுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு இரவு விருந்து அளித்தார். இன்னும் 9 பேர் பாக்கி கடந்த முறை அமைச்சர்களாக இருந்தவர்களில் 32 பேருக்கு இம்முறை வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. 72 அமைச்சர்களில் பாஜவைச் சேர்ந்தவர்கள் பிரதமர் மோடி உட்பட 61 பேர்.

கூட்டணி கட்சிகளுக்கு 11 அமைச்சர் பதவி தரப்பட்டுள்ளது. மக்களவையின் மொத்த உறுப்பினர்களில் 15 சதவீதம் அதாவது 81 என்பதே அமைச்சரவையின் உச்சபட்ச பலமாகும். எனவே இன்னும் 9 அமைச்சர்களை சேர்க்க முடியும் என்பதால், அதிருப்தியில் இருக்கும் கூட்டணி கட்சிகளை சமாளிக்க அந்த பதவிகள் பயன்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மோடி தலைமையில் பாஜ கூட்டணி அரசு 3வது முறையாக பதவியேற்றதைத் தொடர்ந்து பல மாநிலங்களிலும் பாஜ தொண்டர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடினர்.

* கேபினட் அமைச்சர்கள்
1. ராஜ்நாத் சிங்
2. அமித்ஷா
3. நிதின் கட்கரி
4. ஜெ.பி.நட்டா
5. சிவராஜ் சிங் சவுகான்
6. நிர்மலா சீதாராமன்
7. ஜெய்சங்கர்
8. மனோகர் லால் கட்டார்
9. குமாரசாமி
10. பியூஸ் கோயல்
11. தர்மேந்திர பிரதான்
12. ஜிதன் ராம் மஞ்சி
13. லாலன் சிங்
14. சர்பானந்தா சோனோவால்
15. வீரேந்திர குமார்
16. ராம் மோகன் நாயுடு
17. பிரகலாத் ஜோஷி
18. ஜூயல் ஓரம்
19. கிரிராஜ் சிங்
20. அஸ்வினி வைஷ்ணவ்
21. ஜோதிராதித்யா சிந்தியா
22. பூபேந்தர் யாதவ்
23. கஜேந்திர சிங் செகாவத்
24. அன்னபூர்ணா தேவி
25. கிரண் ரிஜிஜூ
26. ஹர்தீப் சிங் பூரி
27. மன்சுக் மாண்டவியா
28. கிசன் ரெட்டி
29. சிராக் பஸ்வான்
30. சி.ஆர்.பாட்டீல்

* இணை அமைச்சர்கள் (தனி பொறுப்பு)
31. ராவ் இந்திரஜித் சிங்
32. ஜிதேந்திர சிங்
33. அர்ஜூன் சிங் மேக்வால்
34. பிரதாப் ராவ் யாதவ்
35. ஜெயந்த் சவுத்ரி

* இணை அமைச்சர்கள்
36. ஜிதின் பிரசாதா
37. ஸ்ரீபத் யஸ்ஸோ நாயக்
38. பங்கஜ் சவுத்ரி
39. கிரிஷன் பால்
40. ராம்தாஸ் அலுவாலே
41. ராம்நாத் தாக்கூர்
42. நித்யானந்த் ராய்
43. அனுபிரியா படேல்
44. வி.சோமண்ணா
45. பெம்மசானி சந்திரசேகர்
46. எஸ்.பி.சிங் பாகேல்
47. சோபா கரண்டலேஜ்
48. கீர்த்தி வர்தன் சிங்
49. பி.எல்.வர்மா
50. சாந்தனு தாகூர்
51. சுரேஷ் கோபி
52. எல்.முருகன்
53. அஜய் தாம்டா
54. பண்டி சஞ்சய் குமார்
55. கமலேஷ் பஸ்வான்
56. பாகிரத் சவுத்ரி
57. ரன்வீத் சிங்
58. சதிஷ் துபே
59. சஞ்சய் சேத்
60. துர்கா தாஸ் உய்கி
61. ரக்‌ஷா காட்சே
62. சுகந்தா மஜூம்தர்
63. சாவித்ரி தாகூர்
64. தோகான் சாஹூ
65. ராஜ் பூஷண் சவுத்ரி
66. பிஆர்எஸ் வர்மா
67. ஹர்ஷ் மல்ஹோத்ரா
68. நிமுபென் பம்பானியா
69. முரளிதர் மோஹோல்
70. ஜார்ஜ் குரியன்
71. பபித்ரா மார்கிரிடா

* ராஜ்நாத் சிங்
உபி.யின் முன்னாள் முதல்வர். கடந்த அரசில் பாதுகாப்பு அமைச்சர். ஏற்கனவே உள்துறை அமைச்சராக இருந்துள்ளார்.பாஜ கட்சியின் அகில இந்திய தலைவர் பதவியை வகித்துள்ளார்.

* அமித் ஷா
ஒன்றிய உள்துறை அமைச்சர். கடந்த 2014 முதல் 2020 வரை பாஜ தலைவராக இருந்தார். குஜராத் மாநிலம் காந்தி நகர் தொகுதியில் இருந்து இரண்டாவது முறையாக எம்பியாக தேர்வாகி உள்ளார்.

* நிதின் கட்கரி
மோடி தலைமையிலான அமைச்சரவையில் சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சராக உள்ளார். பாஜ தலைவராகவும் இருந்துள்ள கட்கரி, மகாராஷ்டிராவில் பாஜ-சிவசேனா கூட்டணி அரசில் பொதுப்பணித்துறை அமைச்சர் பதவி வகித்துள்ளார்.

* ஜே.பி.நட்டா
பாஜ அகில இந்திய தலைவர். ஒன்றிய அரசில் ஒன்றிய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சர் பொறுப்பு வகித்துள்ளார். இமாச்சல் பிரதேசத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

* நிர்மலா சீதாராமன்
கடந்த 2008ல் பாஜவில் சேர்ந்தார். 2014 வரை கட்சியின் செய்தி தொடர்பாளர்.கர்நாடகாவில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். பாதுகாப்பு துறை, நிதித்துறை அமைச்சர் பொறுப்பு வகித்துள்ளார்.

* எஸ்.ஜெய்சங்கர்
முன்னாள் வெளியுறவு துறை அதிகாரி. சிங்கப்பூர்,சீனா,அமெரிக்கா நாடுகளின் இந்திய தூதராக பணியாற்றினார். கடந்த ஆட்சியில் வெளியுறவு துறை அமைச்சராக இருந்தார்.

* பியூஷ் கோயல்
மகாராஷ்டிரா மாநிலம் மும்பை வடக்கு தொகுதியில் இருந்து மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பியூஷ் கோயல் மோடி அரசில் வர்த்தகம் மற்றும் தொழில் துறை, ஜவுளி அமைச்சராக இருந்துள்ளார்.

* மனோகர் லால் கட்டார்
அரியானாவின் இரண்டு முறை முதல்வர். கர்னால் தொகுதியில் இருந்து முதல்முறையாக மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

* எச்.டி.குமாரசாமி
மதசார்பற்ற ஜனதா தள கட்சி தலைவர். கர்நாடக முன்னாள் முதல்வர். கர்நாடகாவில் உள்ள மண்டியாவில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். பலம் வாய்ந்த ஒக்கலிகர் வகுப்பை சேர்ந்தவர்.

* சிவ்ராஜ் சிங் சவுகான்
மபி மாநிலத்தில் நீண்ட காலம் முதல்வர் பதவியில் இருந்து சாதனை படைத்தவர். மபியில் உள்ள விதிஷா தொகுதியில் இருந்து எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்.

* தர்மேந்திர பிரதான் ஒடிசா மாநிலம் சம்பல்பூரில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். முந்தைய அரசில் கல்வி துறை அமைச்சர். அதற்கு முன்னர் பெட்ரோலிய துறை பொறுப்பு வகித்துள்ளார்.

* ஜிதன் ராம் மாஞ்சி
பீகார் முன்னாள் முதல்வரான இவர் இந்துஸ்தானி அவாம் மோர்ச்சா என்ற கட்சியின் தலைவர். தலித் வகுப்பை சேர்ந்தவர். பீகாரின் கயா தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

* லல்லன் சிங்
பீகார் முதல்வர் நிதிஷ்குமாருக்கு நெருக்கமானவர். ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் முன்னாள் தலைவர். முங்கேர் தொகுதியில் இருந்து எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

* சர்பானந்தா சோனவால்
அசாம் மாநில முன்னாள் முதல்வரான சர்பானந்த சோனோவால் முந்தைய அரசில் கப்பல்
போக்குவரத்து,துறைமுகம் மற்றும் நீர்வழித்துறை அமைச்சராக இருந்தார்.

* வீரேந்திர குமார்
மபி மாநிலம் டிகம்காரை சேர்ந்த இவர் 8 முறை எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர் முந்தைய அரசில் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சராக இருந்தார்.

* கிஞ்சரப்பு ராம் மோகன் நாயுடு
ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் தொகுதியில் இருந்து தெலுங்கு தேசம் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.மோடி அரசின் இளம் வயது அமைச்சரான(37) ராம் மோகனின் தந்தை தெலுங்கு தேசத்தின் மூத்த தலைவர் மறைந்த எர்ரன் நாயுடு.

* பிரகலாத் ஜோஷி கர்நாடக மாநிலம் தார்வாட் தொகுதியில் இருந்து தொடர்ந்து மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். முந்தைய அரசில் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சராக இருந்தார்.

* ஜூவல் ஓரம்
ஒடிசாவை சேர்ந்த பழங்குடி தலைவரான ஜூவல் ஓரம் சுந்தர்கர் தொகுதியில் இருந்து பாஜ சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

* கிரிராஜ் சிங் பீகார் மாநிலம் பெகுசராய் தொகுதி எம்பி. முந்தைய அரசில் அமைச்சராக இருந்துள்ளார்.

* அஸ்வினி வைஷ்ணவ்
ஒடிசா மாநிலத்தில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். தற்போது இவர் ரயில்வே அமைச்சராக உள்ளார்.

* ஜோதிராதித்ய சிந்தியா
மபியில் உள்ள குவாலியர் ராஜ குடும்பத்தை சேர்ந்தவர்.முன்பு காங்கிரசில் இருந்த ஜோதிராதித்யா சிந்தியா கடந்த 2020ல் பாஜவில் சேர்ந்து ஒன்றிய சிவில் விமான போக்குவரத்து துறை அமைச்சரானார். தற்போது குணா தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார்.

* பூபேந்தர் யாதவ்
ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர். கடந்த ஆட்சியில் சுற்றுசூழல் மற்றும் வனத்துறை அமைச்சர். தற்போது ஆல்வார் தொகுதியில் இருந்து வெற்றி பெற்றுள்ளார்.

* கஜேந்திர செகாவத் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜோத்பூர் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ராஜ்புத் வகுப்பை சேர்ந்த இவர் முந்தைய அரசில் ஒன்றிய நீர்வளத்துறை அமைச்சர் பொறுப்பு வகித்தார்.

* அன்னபூர்ணா தேவி ஜார்கண்ட் மாநிலம் கோடர்மா தொகுதியில் இருந்து 2வது முறை எம்பியாகி உள்ளார். கடந்த ஆட்சியில் கல்வி துறை இணை அமைச்சர் பொறுப்பு வகித்தார்.

* கிரண் ரிஜிஜூ
அருணாச்சல பிரதேசத்தை சேர்ந்தவர். இதற்கு முந்தைய ஆட்சியில் சட்டத்துறை மற்றும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சராக பொறுப்புகளில் இருந்தார்.

* ஹர்தீப் சிங் புரி
உபியில் இருந்து மாநிலங்களவை எம்பியானார். இதற்கு முன்பு வீட்டு வசதி மற்றும் நகர்புற வளர்ச்சி துறை அமைச்சராக இருந்தார்.

* மன்சுக் மண்டாவியா
குஜராத்தை சேர்ந்தவர். மோடி அரசில் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர்.

* கிஷன் ரெட்டி
செகந்திராபாத்தில் இருந்து மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதற்கு முந்தைய அரசில் சுற்றுலா அமைச்சராக இருந்தார்.

* சிராக் பஸ்வான்
மறைந்த முன்னாள் அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வானின் மகன் சிராக் பஸ்வான். பீகார் மாநிலம் ஹாஜிபூர் தொகுதியில் இருந்து எம்பியாகி உள்ளார். முதல் முறையாக அமைச்சராகிறார்.

* சி.ஆர்.பாட்டீல் குஜராத் மாநில பாஜ தலைவரான சி.ஆர். பாட்டீல் மாநிலத்தில் உள்ள நவ்சாரி தொகுதியில் இருந்து எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

* எல். முருகன்
ஒன்றிய அமைச்சராக பதவி ஏற்ற எல்.முருகன் (47) நாமக்கல் மாவட்டம் கோனூரில் பிறந்தவர். வழக்கறிஞரான இவர், சென்னையில் உள்ள டாக்டர் அம்பேத்கர் சட்டக் கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்துள்ளார். சென்னை பல்கலைக்கழகத்தில் சர்வதேச சட்டம் மற்றும் சர்வதேச நிறுவனங்களில் முதுகலைப் பட்டம் பெற்றார். அறிவுசார் சொத்துரிமையில் முதுகலைப் பட்டயப் பட்டயமும் பெற்றுள்ளார்.
கல்லூரி நாட்களில் ஏபிவிபியின் தீவிர உறுப்பினராக இருந்துள்ளார்.

மாநில மற்றும் தேசிய அளவில் பாஜவில் பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார். 2017ல், இந்திய அரசாங்கத்தின் அட்டவணைப்படுத்தப்பட்ட சாதிகளுக்கான தேசிய ஆணையத்தின் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டார். மார்ச் 2020ல் தமிழ்நாடு பாஜவின் மாநிலத் தலைவராக பொறுப்பு வகித்தார். 2021ல் தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் தாராபுரம் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.

ஒன்றிய அமைச்சராக இருந்த அவர், கடந்த மாதம் மத்திய பிரதேசத்திலிருந்து மாநிலங்களவை எம்பியாக தேர்வு செய்யப்பட்டார். நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற பொது தேர்தலில் நீலகிரி மக்களவைத் தொகுதியில் பாஜ வேட்பாளராக போட்டியிட்டு திமுக வேட்பாளர் ஆ.ராசாவிடம் 2 லட்சத்து 40 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். தற்போது மோடி தலைமையிலான புதிய அரசில் மீண்டும் ஒன்றிய அமைச்சராக பொறுப்பேற்றுள்ளார்.

* 33 பேர் புதுமுகங்கள்
மோடி அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளவர்களில் 33 பேர் புதுமுகங்கள். முன்னாள் முதல்வர்களான சிவ்ராஜ் சிங் சவுகான், மனோகர்லால் கட்டார், குமாரசாமி, கூட்டணி கட்சிகளை சேர்ந்த தெலுங்கு தேசத்தின் ராம் மோகன் நாயுடு, சந்திரசேகர் பெம்மனிசானி, ஐக்கிய ஜனதா தளத்தின் லல்லன் சிங், ராம்நாத் தாகூர், ஆர்எல்டியின் ஜெயந்த் சவுத்ரி, லோக் ஜனசக்தியின் சிராக் பஸ்வான் உள்ளிட்டோர் குறிப்பிடத்தக்க புதுமுகங்கள் ஆவர்.

*கழற்றி விடப்பட்டவர்கள்
முந்தைய பாஜ ஆட்சியில் அமைச்சராக இருந்த பலருக்கும் இம்முறை வாய்ப்பு வழங்கப்பட்ட நிலையில், சில அமைச்சர்கள் கழற்றி விடப்பட்டனர். இவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள்:

* தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சராக இருந்த அனுராக் தாக்கூர் இம்முறை கழற்றிவிடப்பட்டுள்ளார். இவர் மக்களவை தேர்தலில் இமாச்சலின் ஹமிர்பூர் தொகுதியில் 1,82,357 வாக்கு வித்தியாசத்தில் காங்கிரசின் சத்பால் ராய்சடாவை வென்றார். தொடர்ந்து 5வது முறையாக ஹமிர்பூரில் வெற்றி பெற்றும் அனுராக் தாக்கூருக்கு அமைச்சரவையில் இம்முறை இடமளிக்கப்படவில்லை.

* கடந்த 2014ல் பல்வேறு அமைச்சக பொறுப்புகளையும், 2019ல் பெண்கள் மற்றும் குழந்தைகள் விவகாரத்துறை அமைச்சராகவும் இருந்த ஸ்மிருதி இரானிக்கு இம்முறை வாய்ப்பளிக்கப்படவில்லை. அவர் உபியின் அமேதி தொகுதியில் காங்கிரசின் கே.எல்.சர்மாவிடம் 1,67,196 வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். ஆனாலும், ஸ்மிருதி இரானிக்கு மாநிலங்களவை எம்பி பதவி வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

* மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப இணை அமைச்சராக இருந்த ராஜீவ் சந்திரசேகருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. மாநிலங்களவை எம்பியாக இருந்த இவர் மக்களவை தேர்தலில் திருவனந்தபுரம் தொகுதியில் களமிறங்கி காங்கிரசின் சசிதரூரிடம் தோற்றார்.

* மீன்வளம், கால்நடை மற்றும் பால் வளத்துறை அமைச்சராக இருந்த பர்ஷோத்தம் ரூபாலா, மக்களவை தேர்தல் பிரசாரத்தின் போது ராஜ்புத் வம்சத்தினர் பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். இதனால் குஜராத்தில் பாஜவுக்கு கடும் சிக்கல் ஏற்பட்டது. ரூபாலாவை மாற்ற ராஜ்புத் சமூகத்தினர் கடும் போராட்டம் நடத்தினர். ஆனாலும், ரூபாலா 4,84,260 வாக்கு வித்தியாசத்தில் ராஜ்கோட் தொகுதியில் வென்றாலும், சர்ச்சைக்குரிய வகையில் பேசியதால் அவருக்கு அமைச்சரவையில் இடமளிக்கப்படவில்லை.

The post ஜனாதிபதி மாளிகையில் கோலாகல விழா பிரதமராக மோடி பதவியேற்றார்: 30 கேபினட் அமைச்சர்கள், 5 பேருக்கு தனிப்பொறுப்பு appeared first on Dinakaran.

Tags : Modi ,Kolagala Festival ,Presidential House ,Bajaj ,Tamil Nadu ,New Delhi ,Presidential Inauguration Ceremony ,PM ,Presidential Palace ,
× RELATED சுதந்திர இந்தியாவில் 3வது முறையாக பிரதமராக பதவியேற்கும் மோடி