×

பொன்னேரி அருகே மனைவியின் தகாத உறவுக்கு உதவிய மாமியார் கொலை; மருமகன் கைது

பொன்னேரி: பொன்னேரி அருகே தனது மனைவியின் கள்ளத்தொடர்புக்கு உதவிய மாமியார் நேற்றிரவு கத்தியால் சரமாரி குத்தி படுகொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, மாமியாரை கத்தியால் குத்திய மருமகனை கைது செய்து விசாரிக்கின்றனர். பொன்னேரி அருகே ஆரம்பாக்கம், பெருமாள் கோவில் தெரு சேர்ந்தவர் மதியழகன். இவருக்கு மனைவி லதா (45), மகள் சௌமியா (25), மகன் மணிகண்டன் (20) மகன் ஆகியோர் உள்ளனர். இதற்கிடையே லதாவின் தம்பி விவேக் (30) என்பவருக்கு, கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் மகள் சௌம்யாவை திருமணம் செய்து வைத்துள்ளனர். எனினும், இதுவரை சௌம்யாவுக்கு குழந்தை இல்லை. இதைத் தொடர்ந்து, கடந்த ஒரு வருடத்துக்கு முன் பொன்னேரி அருகே பள்ளம் பகுதியில் சௌம்யாவும் அவரது கணவர் விவேக்கும் குடியேறியுள்ளனர்.

பொன்னேரி, ஹரிஹரன் பஜாரில் உள்ள துணிக்கடையில் சௌம்யா வேலை பார்த்து வந்துள்ளார். அப்போது துணிக்கடையில் வேலைபார்த்த கள்ளக்குறிச்சியை சேர்ந்த மணி (30) என்ற வாலிபருடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டு, கடந்த ஒரு வாரத்துக்கு முன் மணியுடன் சௌம்யா தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்து தகவலறிந்தும் விவேக்கின் மாமியாரும் அக்காவுமான லதா கண்டுகொள்ளாமல் இருந்துள்ளார். எனினும், தனது மனைவி சௌம்யாவை கடந்த ஒரு வாரமாக காணாமல் போனதால், அவரை பல்வேறு இடங்களில் விவேக் தேடியுள்ளார். எனினும் அவர் கிடைக்கவில்லை. இந்நிலையில், நேற்றிரவு விவேக், தனது மாமியார் வீடுக்கு சென்றுள்ளார். அங்கு மாமியார் லதா, தனது மனைவி சௌம்யாவுடன் செல்போன் வீடியோகாலில் பேசிக்கொண்டிருப்பது விவேக்குக்கு தெரியவந்தது.

இதுகுறித்து மாமியார் லதாவிடம் விவேக் கேட்டதற்கு, இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறியது. இதில் ஆத்திரமான விவேக், தனது இடுப்பில் மறைத்து வைத்திருந்த கத்தியால் மாமியார் லதாவை சரமாரி குத்தியுள்ளார். மாமியார் லதாவின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்தனர். இதை பார்த்ததும் மருமகன் விவேக் தப்பி ஓடிவிட்டார். பின்னர், படுகாயம் அடைந்த லதாவை மீட்டு, பொன்னேரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அழைத்து சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், வரும் வழியிலேயே லதா இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இதுகுறித்து தகவலறிந்ததும் பொன்னேரி போலீசார் விரைந்து வந்தனர்.

அங்கு லதாவின் சடலத்தை கைப்பற்றி, அதே மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து பொன்னேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து, மாமியாரை குத்தி படுகொலை செய்துவிட்டு தலைமறைவான மருமகன் விவேக் குறித்து தீவிரமாக விசாரித்தனர். இதைத் தொடர்ந்து, நேற்று நள்ளிரவு தனது வீட்டுக்குள் பதுங்கியிருந்த மருமகன் விவேக்கை கைது செய்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.

The post பொன்னேரி அருகே மனைவியின் தகாத உறவுக்கு உதவிய மாமியார் கொலை; மருமகன் கைது appeared first on Dinakaran.

Tags : Ponneri ,Perumal ,
× RELATED இலவச வீட்டு மனை பட்டா வழங்கிட...