×

பார்க்கிங் பகுதிகளுக்கு புதிய டெண்டர் விடும் வரை மெரினா, பெசன்ட் நகர், பாண்டி பஜாரில் கட்டணம் இன்றி வாகனங்கள் நிறுத்தலாம்: மாநகராட்சி அதிகாரி தகவல்

சென்னை, ஜூன் 9: புதிய டெண்டர் விடும் வரை மெரினா, பெசன்ட் நகர் கடற்கரை, பாண்டிபஜாரில் பொதுமக்கள் இலவசமாக வாகனங்களை நிறுத்திக் கொள்ளலாம், என மாநகராட்சி அறிவித்துள்ளது. சென்னை மாநகராட்சி வருவாயை அதிகரிக்கும் பொருட்டு ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ், ஸ்மார்ட் வாகன நிறுத்தங்கள் மெரினா கடற்கரை, பெசன்ட் நகர் கடற்கரை, தி.நகர் உள்ளிட்ட 170க்கும் மேற்பட்ட இடங்களில் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு நிறுத்தப்படும் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்க, ஒப்பந்த அடிப்படையில் டூர்க் மீடியா சர்வீஸ் பிரைவேட் லிமிடெட் மற்றும் எஸ்எஸ் டெக் நிறுவனத்துக்கு மாநகராட்சி அனுமதி வழங்கி இருந்தது.

இங்கு, இருசக்கர வாகனங்களுக்கு 1 மணி நேரத்துக்கு ₹5, நான்கு சக்கர வாகனங்களுக்கு ₹20 வீதம் கட்டணம் வசூலிக்கவும் மாநகராட்சி உத்தரவிட்டு இருந்தது. இந்த கட்டணத்தை விட அதிகமாக வசூலிப்பதை தடுக்க, வாகன நிறுத்த செயல்பாடுகளை பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் ஸ்மார்ட் வாகன நிறுத்தங்கள் செயல்படும் பகுதிகளில் 25 மீட்டர் இடைவெளியில் அறிவிப்பு பலகையை வைக்கப்பட்டு இருந்தது. அதில், வாகன நிறுத்த கட்டண விவரம் மற்றும் அதிக கட்டண வசூல் தொடர்பான புகார் தெரிவிக்க, கட்டண வசூல் கண்காணிப்பாளர் மற்றும் மாநகராட்சியின் உரிமம் பெற்ற ஆய்வாளர் ஆகியோரின் தொடர்பு எண்களை குறிப்பிட மாநகராட்சி உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், மெரினா கடற்கரை சர்வீஸ் சாலையில் உள்ள வாகன நிறுத்த பகுதிக்கான ஒப்பந்தம் முடிந்த நிலையில், ஒப்பந்த நிறுவன ஊழியர்கள் விதிமீறி கட்டணம் வசூலித்து வந்தனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு மெரினா கடற்கரை வந்த ஆந்திராவை சேர்ந்த கார் ஓட்டுநரிடம் ₹300 கட்டணம் கேட்டுள்ளனர். அவர் தர மறுக்கவே, அவரை தாக்கியுள்ளனர். இதில் காயமடைந்த ஓட்டுநர் புகார் தராத நிலையில், தாக்கிய நபர் மீது பொது அமைதிக்கு பாதிப்பு ஏற்படுத்தியதாக வழக்கு பதிய போலீசார் திட்டமிட்டுள்ளனர். மெரினா கடற்கரையில் அண்மைக் காலமாக விதிகளை மீறி பேருந்து, வேன்களுக்கு ₹400 வரையும், கார்களுக்கு ₹100 முதல் ₹300 வரையும், 2 சக்கர வாகனங்களுக்கு ₹30 வரையும் கட்டணம் வசூலித்ததாகவும், அதற்கு ரசீதும் கொடுப்பதில்லை எனவும் பொதுமக்கள் குற்றம்சாட்டி வந்தனர்.

மாநகராட்சி அறிவுறுத்தியவாறு, கட்டண வசூல் தொடர்பான அறிவிப்பு பலகை மெரினா வாகன நிறுத்துமிடம் எங்கும் ஒரு இடத்தில் கூட வைக்கப்படவே இல்லை. இதனால் தனியார் நிறுவனத்திற்கு வழங்கிய ஒப்பந்தத்தை சென்னை மாநகராட்சி ரத்து செய்தது. ஆனால், அந்நிறுவனம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, மாநகராட்சியின் ஒப்பந்த ரத்துக்கு தடை பெற்று, மீண்டும் அடாவடி வசூலில் ஈடுபட்டு வந்தது. தொடர்ந்து நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வந்த நிலையில், ‘தனியார் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது செல்லும் என சமீபத்தில் நீதிமன்றம் சாதகமாக தீர்ப்பு வழங்கியுள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

எனவே, வாகன நிறுத்தத்திற்கு மறு டெண்டர் விடும் வரை மெரினா, பெசன்ட் நகர் கடற்கரை, பாண்டி பஜார் உள்ளிட்ட சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட எல்லைகளில் உள்ள வாகன நிறுத்த பகுதிகளில் ெபாதுமக்கள் கட்டணம் செலுத்த வேண்டாம். புதிய டெண்டர் விடும்வரை மெரினா, பெசன்ட் நகர் கடற்கரை, பாண்டிபஜாரில் இலவசமாக வாகனங்களை பொது மக்கள் நிறுத்தி கொள்ளலாம். இதை மீறி, ரவுடிகளை வைத்து சிலர் மிரட்டி கட்டணம் கேட்டால், சம்பந்தப்பட்ட நபர்கள் குறித்து போலீசில் புகார் அளிக்கலாம். மெரினாவில் அதுபோன்று கட்டணம் வசூலித்தவர்கள் குறித்து அண்ணா சதுக்கம் போலீசில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது என சென்னை மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post பார்க்கிங் பகுதிகளுக்கு புதிய டெண்டர் விடும் வரை மெரினா, பெசன்ட் நகர், பாண்டி பஜாரில் கட்டணம் இன்றி வாகனங்கள் நிறுத்தலாம்: மாநகராட்சி அதிகாரி தகவல் appeared first on Dinakaran.

Tags : Marina ,Besant Nagar ,Pandi Bazar ,Chennai ,Marina, ,Besant Nagar Beach ,Bandibazar ,Chennai Corporation ,Smart City ,Bandi Bazaar ,Dinakaran ,
× RELATED புதிய டெண்டர் விடும் வரை மெரினா,...