×

நிர்வாண நிலையில் கை, கால்கள் கட்டப்பட்டு கர்ப்பிணி அடித்து படுகொலை; மழைநீர் கால்வாயில் சடலம் வீச்சு

பூந்தமல்லி, ஜூன் 9: பெரும்புதூர் அருகே கழிவுநீர் கால்வாயில் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் கர்ப்பிணியின் சடலம் மீட்கப்பட்டது. நிர்வாண நிலையில் மீட்கப்பட்டதால் அவர் பாலியல் தொந்தரவு கொடுக்கப்பட்டு, அடித்துக் கொலை செய்யப்பட்டாரா என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பெரும்புதூர் அடுத்த சுங்குவார்சத்திரம் பஜார் அருகில் உள்ள திருமங்கலம் பகுதியில் கடந்த 2 நாட்களாக மழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள கழிவுநீர் கால்வாய்களில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதில் பள்ளத் தெருவில் உள்ள கழிவுநீர் கால்வாயில் கழிவுநீர் செல்ல முடியாதபடி அடைப்பு ஏற்பட்டு இருந்தது. இதனால் நேற்று முன்தினம் அப்பகுதி மக்கள் கால்வாய் அடைப்பை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது கால்வாயில் ஒரு பெண்ணின் கால் தென்பட்டதை கண்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனே இதுகுறித்து சுங்குவார்சத்திரம் காவல் நிலையத்தில் பொதுமக்கள் தகவல் கொடுத்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார் கழிவுநீர் கால்வாய் மீது அமைக்கப்பட்டிருந்த சிமென்ட் கான்கிரீட் சிலாப் மூடியை உடைத்து அகற்றியபோது, அங்கு பெண் சடலம் இருந்தது. அதை மீட்டனர். அப்போது உடலில் துணி இல்லாமல் நிர்வாண நிலையில், இருந்த அப்பெண்ணின் கை, கால்கள் கட்டப்பட்டிருந்தன.

இதனையடுத்து சடலத்தை பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்து போலீசார் விசாரணை நடத்தினர். அதில், அந்த பெண் சுங்குவார்சத்திரம் அடுத்த மதுரமங்கலம் பகுதியைச் சேர்ந்த முருகன் (40) என்பவரது மனைவி தேவி (34) என்பது தெரிய வந்தது. முருகன் சுங்குவார்சத்திரம் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். தேவி, சுங்குவார்சத்திரம் பகுதியில் பாலாஜி என்பவரின் வீட்டில் எம்பிராய்டிங் வேலை செய்து வந்துள்ளார். ஏற்கனவே 6 வயதில் ஒரு மகன் உள்ள நிலையில் தேவி இரண்டாவதாக கர்ப்பமானார். அவர் தற்போது 3 மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். கடந்த வியாழக்கிழமை வேலைக்குச் சென்ற அவர் வீடு திரும்பவில்லை. அவரை உறவினர்கள் எங்கு தேடியும் கிடைக்காததால் சுங்குவார்சத்திரம் காவல் நிலையத்தில் ஏற்கனவே புகார் அளித்துள்ளனர்.

தேவியில் உடலில் காயங்கள் உள்ளன. எனவே அவர் கொலை செய்யப்பட்டிருப்பது போலீசாரின் விசாரணையில் உறுதியானது. மேலும் கை, கால்கள் கட்டப்பட்டு நிர்வாண நிலையில் அவரது உடல் மீட்கப்பட்டதால் அவர் பாலியல் தொந்தரவு கொடுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகமும் போலீசாருக்கு எழுந்துள்ளது. அவரை கொலை செய்துவிட்டு கழிவுநீர் கால்வாயில் சடலத்தை வீசிச் சென்றவர்கள் யார் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளையும் ஆய்வு செய்து வருகின்றனர்.

The post நிர்வாண நிலையில் கை, கால்கள் கட்டப்பட்டு கர்ப்பிணி அடித்து படுகொலை; மழைநீர் கால்வாயில் சடலம் வீச்சு appeared first on Dinakaran.

Tags : Poontamalli ,Perumbudur ,Dinakaran ,
× RELATED பெரும்புதூர் அருகே பரபரப்பு தீப்பற்றி எரிந்த கார் நாசம்