×

கோடை வெயில் முடிந்து மழைக்காலம் தொடங்குவதால் கொசுக்கள் உற்பத்தியை தடுப்பதற்கான வழிமுறைகள்: காஞ்சிபுரம் கலெக்டர் தகவல்

காஞ்சிபுரம், ஜூன் 9: காஞ்சிபுரம் பகுதிகளில் கழிவுநீர் தேங்கும் இடங்களில் கொசு உற்பத்தியை தடுப்பதற்கான வழிமுறைகள் குறித்து கலெக்டர் கலைச்செல்வி மோகன் தெரிவித்துள்ளார். காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி மோகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மாலை வேளை வந்துவிட்டாலே முதல் வேலையாக கதவு, ஜன்னல்களை அடைப்பதுதான் மக்களின் வழக்கமாக உள்ளது. மாலை 5 மணிக்கு மூடி 7 மணி வரை அடைத்து விட்டால் கொசு வராது என்ற நம்பிக்கையுடன் கதவு, ஜன்னலை அடைத்து விடுகிறார்கள். அதனை வெறும் நம்பிக்கைதானே என்று புறந்தள்ளிவிட முடியாது.

அதில் உண்மையும் இருக்கத்தான் செய்கிறது. பொதுவாக மக்கள் கொசு என்றாலே எல்லாம் ஒரே விதம் என்று நினைக்கிறார்கள். ஆனால் மாலை வேளையில் காணப்படும் கொசுக்களும், மற்ற நேரத்தில் கடிக்கும் கொசுக்களும் வெவ்வேறானவைதான். மாலை நேர கொசுக்கள் மற்ற நேரங்களில் காணப்படும் கொசுக்களைவிட அளவில் சற்று பெரியதாக காணப்படும். அளவு மட்டுமல்ல அவைகள் கடித்தால் ஏற்படக்கூடிய வலியும் அதிகமாக இருக்கும். அப்போது அவைகள் பரப்பும் நோய்களும் அதிகமாக இருக்குமா? என்ற சந்தேகம் எல்லோருக்கும் ஏற்படக்கூடும்.

ஆனால் ஆச்சர்யப்படுத்தும் பதில் என்னவென்றால் “இந்த வகை கொசுக்கள் எந்த நோயையும் பரப்பாது” என்பதுதான். இந்த பெரிய அளவிலான கொசுக்களின் தன்மைகள் மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மாவட்ட சுகாதார அலுவலர் த.ரா.செந்தில் கீழ்கண்ட விவரங்களை தெரிவித்துள்ளார். நோயே பரப்பாத இந்த பெரிய சைஸ் கொசுக்களின் பெயர் “ஆர்மிஜிரஸ்” என்பதாகும். அந்த ஆர்மிஜிரஸ் கொசுக்கள் ஓட்டை உடைசல் இல்லாமல் செப்டிக் டேங்க் நன்றாக இருந்தாலும், செப்டிக் டேங்கின் காற்று போக்கியின் வழியே உட்சென்று முட்டையிட்டு பெருகுபவையாகும்.

எனவே, பொதுமக்கள் தங்கள் வீடுகளில் உள்ள செப்டிக் டேங்கில் ஓட்டைகளோ, சிலாப்பில் உடைப்போ இருந்தால் சிமென்ட் கொண்டு அடைப்பது கொசு உற்பத்திக்கு எதிரான முதல் தடுப்பு நடவடிக்கையாகும். இரண்டாவது தடுப்பு நடவடிக்கை செப்டிக் டேங்கின் காற்று போக்கியின் திறந்த முனையை வீட்டில் உள்ள சாக்குப்பை, சிமென்ட் பை, துணி, நைலான் வலை, துருப்பிடிக்காத இரும்பிலான கொசுவலை போன்றவற்றால் இறுகக் கட்ட வேண்டும். இதில் கவனிக்க வேண்டிய அம்சம் என்னவென்றால், உள்ளே இருந்து காற்று வெளிவர வேண்டும். ஆனால் வெளியிலிருந்து கொசு உள்ளே போகக்கூடாது.

செப்டிக் டேங்க் மட்டுமல்லாமல், கழிவுநீர் தேங்கி நிற்பதும் இக்கொசுக்கள் உருவாக வழி வகுக்கும். வீட்டுத் தோட்டம் அமைத்து, இக்கழிவு நீரை முறையாக பயன்படுத்துவதும் சிறந்த முறை ஆகும். அகற்றப்பட முடியாத வகையில் கழிவுநீர் தேங்கி நிற்கும்போது தற்காலிக முறையாக அவற்றின் மீது மண்ணெண்ணெய் அல்லது இதர எண்ணெய்களை ஊற்றி கொசு உருவாவதை தடுக்கலாம். இருப்பினும் வீட்டை சுற்றி கழிவுநீர் தேங்காமல் தவிர்ப்பதே சிறந்தது. மேற்கண்ட தடுப்பு நடவடிக்கைகளை உடனே வீடுகளில் செயல்படுத்தினால், ஆர்மிஜிரஸ் கொசுக்களின் உற்பத்தியை தடுக்க முடியும். மேற்கண்ட தடுப்பு நடவடிக்கைகளை ஒவ்வொருவரும் மற்றவர்களுக்கு தெரிவிப்பதும், பரப்புவதும் சமூகத்திற்கு பயனுள்ளதாக இருக்கும். இப்பணியை மக்கள் தங்கள் வீடுகளில் மட்டுமல்லாது, அண்டை அயலாருடன் இணைந்து தெரு, பகுதி, நகரம் மற்றும் தாங்கள் வேலை செய்யும் இடங்கள் என அனைத்து இடங்களுக்கும் இந்த தடுப்பு நடவடிக்கைகளை விரிவுப்படுத்த வேண்டும். இவ்வாறு கலெக்டர் கேட்டுக்கொண்டுள்ளார்.

ஆர்மிஜிரஸ் கொசுக்களின் பிறப்பிடம்
ஆர்மிஜிரஸ் கொசுக்களின் பிரத்யேக தன்மைகளை தெரிந்து கொள்வதே அவை உருவாவதை தடுத்துக்கொள்ளும் முதல் வழியாகும். வீடுகளே இக்கொசுக்களின் முதன்மை உற்பத்தி இடங்களாகும். அதுவும், குறிப்பாக சொன்னால் ‘செப்டிக் டேங்க்’ தான் இக்கொசுக்களின் தலைமை பிறப்பிடம். செப்டிக் டேங்கில் ஓட்டையோ, உடைப்போ இருந்தால் அதன் வழியே உட்சென்று ஆயிரக்கணக்கான முட்டைகள் இட்டு ஆர்மிஜிரஸ் கொசுக்கள் தனது சந்ததியை பெருக்கி விடுகின்றன.

The post கோடை வெயில் முடிந்து மழைக்காலம் தொடங்குவதால் கொசுக்கள் உற்பத்தியை தடுப்பதற்கான வழிமுறைகள்: காஞ்சிபுரம் கலெக்டர் தகவல் appeared first on Dinakaran.

Tags : Kanchipuram ,Collector ,Kalachelvi Mohan ,Kanchipuram Collector ,Dinakaran ,
× RELATED இன்னுயிர் காப்போம் திட்டம் மூலம் ரூ.3.80...