×

மீனவர்கள் எச்சரிக்கையை அலட்சியம் செய்து அதிமுக ஆட்சியில் ரூ.15 கோடியில் கட்டிய ஜெட்டிப்பாலம் இடிந்தது: சில மாதங்கள் மட்டுமே பயன்படுத்திய அவலம்

ராமேஸ்வரம், ஜூன் 9: தனுஷ்கோடியில் அதிமுக ஆட்சிக் காலத்தில் ரூ.15 கோடியில் கட்டிய ஜெட்டிப்பாலத்தின் ஒரு பகுதி, கடல் சீற்றத்தால் தகர்ந்து தண்ணீரில் மூழ்கியது. இதனால் ரூ.15 கோடி வீணானதாக மீனவர்கள், பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். ராமேஸ்வரம் அருகே தனுஷ்கோடி துறைமுகம் முகுந்தராயர் சத்திரம் கடற்கரை பகுதியில், மீனவர்கள் தங்கள் படகுகளை நிறுத்துவதற்காக கடந்த 2015ல், அதிமுக ஆட்சியில் ரூ.15 கோடி செலவில் ‘டி’ வடிவ ஜெட்டிப்பாலம் கட்டப்பட்டது. இப்பாலம் 70 அடி அகலம், 70 அடி நீளத்தில் அமைக்கப்பட்டது.

இந்த பாலத்தை கட்டும்போது, 70 அடி நீளத்தை கடலுக்குள் அளவீடாக வைத்துக் கட்டினர். இது சரியாக கடலில் இருந்து வரும் அலைகள் பிரிந்து கரையேறும் இடத்தில் முடிவதாக மீனவர்கள் புகார் தெரிவித்தனர். இதனால் பாலத்தின் தூண்கள் வலுவிழந்து கீழே சாய்ந்துவிடும் என மீனவர்கள் எச்சரித்தனர். இந்த எச்சரிக்கையை அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை. இந்த பாலத்தை சில மாதங்கள் மட்டுமே மீனவர்கள் பயன்படுத்தினர். பாலத்தின் கடைசி பகுதி ஆட்டம் கண்டதால், பயன்படுத்தாமல் விட்டு விட்டனர். நாளடைவில் சுற்றுலாப்பயணிகள் செல்பி எடுக்க மட்டும் ஜெட்டிப் பாலம் பயன்பட்டது.

கடந்தாண்டு பாலத்தின் ஒரு பகுதி சரிந்தது. இதனால், சுற்றுலாப்பயணிகள் செல்லாத வகையில் தடுப்புகள் அமைக்கப்பட்டன. கடந்த சில நாட்களாக மன்னார் வளைகுடா கடல் பகுதியில் பலத்த காற்று வீசுவதால், தனுஷ்கோடி தென்கடல் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. இதனால், ஜெட்டிப் பாலத்தின் ஒரு பகுதி தூண்கள் சரிந்து, பாலத்தின் ஒரு பகுதி கடலில் மூழ்கியது. வரும் நாட்களில் பாலம் முழுவதும் கடலில் மூழ்கும் அபாயம் உள்ளது. அதிமுக ஆட்சியில் மீனவர்களின் எச்சரிக்கையை உதாசீனம் செய்து கட்டப்பட்ட ஜெட்டிப்பாலம் கடலில் மூழ்கி வருவதால் ரூ.15 கோடி வீணானதாக மீனவர்கள், பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

The post மீனவர்கள் எச்சரிக்கையை அலட்சியம் செய்து அதிமுக ஆட்சியில் ரூ.15 கோடியில் கட்டிய ஜெட்டிப்பாலம் இடிந்தது: சில மாதங்கள் மட்டுமே பயன்படுத்திய அவலம் appeared first on Dinakaran.

Tags : AIADMK ,Rameswaram ,Dhanushkodi ,Dhanushkodi port ,ADMK government ,Dinakaran ,
× RELATED இந்திய – இலங்கை கடல் எல்லையில்...