×

சாலைகளில் சுற்றிதிரிந்த 74 மாடுகள் பிடிபட்டன 34 மாடுகளின் உரிமையாளரிடம் ₹68 ஆயிரம் அபராதம் வசூல்: தாம்பரம் மாநகராட்சி நடவடிக்கை

தாம்பரம், ஜூன் 9: தாம்பரம் மாநகராட்சி பகுதி சாலைகளில் சுற்றிதிரிந்த 74 மாடுகள் பிடிக்கப்பட்டு, 34 மாடுகளின் உரிமையாளர்களுக்கு ₹68 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கும் இடையூறு ஏற்படுத்தும் வகையில் சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் மாநகராட்சி ஊழியர்களால் பிடிக்கப்பட்டு, அதன் உரிமையாளர்கள் மீது அபராதத்துடன் கூடிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி, சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகள் பிடிக்கப்பட்டு, அதன் உரிமையாளர்களுக்கு பிடிக்கப்பட்ட மாடுகளை 2 நாட்களுக்கு பராமரிக்கும் செலவினத்துடன் அபராத தொகையாக ₹2 ஆயிரம் விதிக்கப்படுகிறது.

இந்நிலையில் தாம்பரம் மாநகராட்சியின் 5 மண்டலங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் 10.3.2024 முதல் 30.5.2024 வரை மாநகராட்சி ஊழியர்கள் நடத்திய சோதனையில், சாலையில் சுற்றித் திரிந்த 74 மாடுகள் பிடிக்கப்பட்டு, 34 மாடுகளின் உரிமையாளர்களுக்கு ₹68 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 40 மாடுகள், காட்டாங்கொளத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கொண்டமங்களம் ஊராட்சியில் உள்ள பராமரிப்பு மையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன. பிடிபட்ட மாடுகளை விடுவித்து செல்ல மாடுகளின் உரிமையாளர்கள் நகர் நல அலுவலர், சுகாதார ஆய்வாளர் மற்றும் மாடு வளர்ப்பவர்களின் வீடு அல்லது மாடு பிடிபட்ட எல்லைக்குட்பட்ட காவல் ஆய்வாளரின் பரிந்துரை கையொப்பத்தை பெற்று சமர்ப்பிக்க வேண்டும்.

மேலும், இனிவரும் காலங்களில் தாம்பரம் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட சாலைகள் மற்றும் வீதிகளில் சுற்றி திரியும் மாடுகள் கொண்டமங்களம் ஊராட்சியில் உள்ள பராமரிப்பு மையத்தில் ஒப்படைக்கப்படும். மாடு உரிமையாளர்கள் மாடுகளை திரும்பபெற நாள் ஒன்றிற்கு ₹2000, தீவண செலவு ₹250 என மொத்தம் ₹2,250 அபராதம் செலுத்த வேண்டும். எனவே, மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மாடுகளின் உரிமையாளர்கள், தங்கள் மாடுகளை பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறாக தெருக்கள் மற்றும் சாலைகளில் சுற்றித்திரிய விடாமல் முறையாக பராமரித்துக்கொள்ள தாம்பரம் மாநகராட்சி சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

The post சாலைகளில் சுற்றிதிரிந்த 74 மாடுகள் பிடிபட்டன 34 மாடுகளின் உரிமையாளரிடம் ₹68 ஆயிரம் அபராதம் வசூல்: தாம்பரம் மாநகராட்சி நடவடிக்கை appeared first on Dinakaran.

Tags : Tambaram Corporation ,Tambaram ,Tambaram Municipal Corporation ,Dinakaran ,
× RELATED தாம்பரம் மாநகராட்சி பகுதியில்...