×

தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 2,049 வழக்குகளுக்கு உடனடி சமரச தீர்வு ₹10.85 கோடி உரியவர்களுக்கு வழங்கப்பட்டது திருவண்ணாமலை மாவட்டத்தில்

திருவண்ணாமலை, ஜூன் 9: திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று நடந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தில், 2,049 வழக்குகளுக்கு சமரசம் ஏற்படுத்தப்பட்டு, ₹10.85 கோடிக்கு தீர்வு காணப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
நீதிமன்றங்களில் நடைபெறும் வழக்குகளில், சமரச தீர்வுக்கு தகுதி வாய்ந்த மற்றும் இருதரப்பினரும் ஏற்கும் வகையில் தீர்வு காண்பதற்கான வழக்குகள் மட்டும் லோக் அதாலத் எனப்படும் தேசிய மக்கள் நீதிமன்றத்தின் மூலம் விசாரிக்கப்பட்டு உடனடி தீர்வு காணப்படுகிறது. அதன்படி, தமிழ்நாடு முழுவதும் நேற்று மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு உத்தரவின்படி லோக் அதாலத் எனப்படும் தேசிய மக்கள் நீதிமன்றம் நடந்தது. அதேபோல், திருவண்ணாமலை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில், திருவண்ணாமலை மாவட்ட நீதிமன்றத்தில் செயல்படும் மாற்று தீர்வு மையத்தில் நேற்று தேசிய மக்கள் நீதிமன்றம் நடந்தது. அதேபோல், ஆரணி, செய்யாறு, வந்தவாசி, செங்கம், போளூர், தண்டராம்பட்டு, கலசபாக்கம் உள்ளிட்ட மொத்தம் 7 இடங்களில் தேசிய மக்கள் நீதிமன்றம் நடந்தது.

திருவண்ணாமலை மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் நடந்த தேசிய மக்கள் நீதிமன்றத்துக்கு, முதன்மை மாவட்ட அமர்வு நீதிபதி மதுசூதனன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். அதில், தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் ஜெயசூர்யா, மாவட்ட மகிளா கோர்ட் நீதிபதி சுஜாதா, போக்சோ வழக்குகளுக்கான சிறப்பு கோர்ட் நீதிபதி பார்த்தசாரதி, முதன்மை சார்பு நீதிபதி முகமது ரியாஸ், முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிபதி சக்திவேல் மற்றும் வழக்கறிஞர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு வழக்குகளுக்கு தீர்வு கண்டனர்.

அப்போது, மோட்டார் வாகன விபத்து இழப்பீடு, வங்கி சார்ந்த வழக்குகள், சிவில் வழக்குகள், காசோலை வழக்குகள் உள்ளிட்ட வழக்குகளுக்கு சமரச தீர்வு காணப்பட்டன. அதன்படி, மாவட்டம் முழுவதும் நேற்று நடந்த மக்கள் நீதிமன்றத்தின் மூலம், மொத்தம் 3,545 வழக்குகள் விசாரணைக்கு ஏற்கப்பட்டன. அதில், சமரச தீர்வுக்கு உடன்பட்டதன் அடிப்படையில், வங்கிகள் தொடர்பான 371 வழக்குகள் மற்றும் விபத்து காப்பீடு உள்ளிட்ட நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள 1,678 வழக்குகள் உட்பட மொத்தம் 2,049 வழக்குகளுக்கு நேற்று ஒரே நாளில் உடனடியாக சமரசம் ஏற்படுத்தப்பட்டது. அதன்மூலம், ₹10.85 கோடி வசூலிக்கப்பட்டு, வழக்குகளுக்கு உரியவர்களிடம் வழங்கப்பட்டு தீர்வு ஏற்படுத்தப்பட்டது, முன்னதாக, லோக் அதாலத் நிகழ்வின் தொடக்கமாக நீதிமன்ற வளாகத்தில் மாவட்ட நீதிபதி மதுசூதனன் மரக்கன்றுகளை நட்டு தொடங்கி வைத்தார்.

The post தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 2,049 வழக்குகளுக்கு உடனடி சமரச தீர்வு ₹10.85 கோடி உரியவர்களுக்கு வழங்கப்பட்டது திருவண்ணாமலை மாவட்டத்தில் appeared first on Dinakaran.

Tags : National People's Court ,Tiruvannamalai district ,Tiruvannamalai ,Dinakaran ,
× RELATED அவமதிப்பு வழக்கில் திருவண்ணாமலை ஆட்சியர் ஆஜராக ஐகோர்ட் ஆணை..!!