×

ஆப்கானிஸ்தான் அணியிடம் மண்ணை கவ்வியது நியூசிலாந்து: 75 ரன்னில் ஆல் அவுட்


கயானா: ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஐசிசி உலக கோப்பை டி20 தொடரின் சி பிரிவு லீக் ஆட்டத்தில், 75 ரன்னில் சுருண்ட நியூசிலாந்து அணி 84 ரன் வித்தியாசத்தில் மண்ணைக் கவ்வியது. கயானா, புராவிடன்ஸ் அரங்கில் நடந்த இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பந்துவீசியது. ரஹ்மானுல்லா குர்பாஸ், இப்ராகிம் ஸத்ரன் இணைந்து ஆப்கான் இன்னிங்சை தொடங்கினர். பொறுப்புடன் விளையாடிய இருவரும் முதல் விக்கெட்டுக்கு 14.2 ஓவரில் 103 ரன் சேர்த்து வலுவான அடித்தளம் அமைத்தனர். இப்ராகிம் 44 ரன் (41 பந்து, 3 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசி வெளியேற, அடுத்து வந்த அஸ்மதுல்லா உமர்ஸாய் அதிரடியாக 22 ரன் (13 பந்து, 1 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசி பெவிலியன் திரும்பினார். நபி 0, கேப்டன் ரஷித் கான் 6 ரன்னில் விக்கெட்டை பறிகொடுத்தனர்.

அபாரமாக விளையாடிய குர்பாஸ் 80 ரன் (56 பந்து, 5 பவுண்டரி, 5 சிக்சர்) விளாசி போல்ட் வேகத்தில் கிளீன் போல்டானார். குல்பாதின் நயிப் டக் அவுட்டாக, ஆப்கான் 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 159 ரன் குவித்தது. ஜனத், நஜிபுல்லா தலா 1 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். நியூசிலாந்து பந்துவீச்சில் போல்ட், ஹென்றி தலா 2 விக்கெட், பெர்குசன் 1 விக்கெட் வீழ்த்தினர். இதைத் தொடர்ந்து, 20 ஓவரில் 160 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அடுத்தடுத்து விக்கெட் சரிந்ததால், 15.2 ஓவரில் 75 ரன் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது. கிளென் பிலிப்ஸ் 18 ரன், மேட் ஹென்றி 12 ரன் எடுக்க, கேப்டன் கேன் வில்லியம்சன் (9) உள்பட மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் அணிவகுத்து ஏமாற்றமளித்தனர். ஆப்கான் பந்துவீச்சில் பஸல்லாக் பரூக்கி, ரஷித் கான் தலா 4 விக்கெட், முகமது நபி 2 விக்கெட் வீழ்த்தி அசத்தினர். குர்பாஸ் ஆட்ட நாயகன் விருது பெற்றார்.

இலங்கை அதிர்ச்சி: டி பிரிவில் வங்கதேச அணியுடன் நேற்று மோதிய இலங்கை அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் போராடி தோற்றது. டாலஸ் நகரில் நடந்த இப்போட்டியில் டாஸ் வென்ற வங்கதேசம் முதலில் பந்துவீச… இலங்கை 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 124 ரன் எடுத்தது. பதும் நிசங்கா 47, தனஞ்ஜெயா 21, அசலங்கா 19, மேத்யூஸ் 16 ரன் எடுக்க, மற்ற வீரர்கள் கணிசமாக ரன் எடுக்கத் தவறினர். வங்கதேச பந்துவீச்சில் முஸ்டாபிசுர் ரகுமான், ரிஷத் உசைன் தலா 3, டஸ்கின் அகமது 2, டன்சிம் சாகிப் 1 விக்கெட் வீழ்த்தினர். அடுத்து களமிறங்கிய வங்கதேசம் 19 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 125 ரன் எடுத்து வென்றது. தவ்ஹித் ஹ்ரிதய் 40 ரன் (20 பந்து, 1 பவுண்டரி, 4 சிக்சர்), லிட்டன் தாஸ் 36, மகமதுல்லா 16* ரன் எடுத்து வெற்றிக்கு உதவினர். இலங்கை பந்துவீச்சில் நுவன் துஷாரா 4, ஹசரங்கா 2, தனஞ்ஜெயா, பதிரணா தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

The post ஆப்கானிஸ்தான் அணியிடம் மண்ணை கவ்வியது நியூசிலாந்து: 75 ரன்னில் ஆல் அவுட் appeared first on Dinakaran.

Tags : New Zealand ,Afghanistan ,Guyana ,ICC World Cup T20 League C match ,Providence Arena, Guyana ,Dinakaran ,
× RELATED நியூசிலாந்து கேப்டன் பொறுப்பில் இருந்து கேன் வில்லியம்சன் விலகல்