×

பாஜவுக்கு ஒளிமயமான எதிர்காலம் என மோடி பேசியிருப்பது மிகச்சிறந்த கற்பனை: செல்வப்பெருந்தகை காட்டம்

சென்னை: காங்கிரஸ் கட்சியை பலப்படுத்த ஜூன் 11ம்தேதி தமிழக காங்கிரஸ் கட்சியின் பொதுக்குழு கூடுகிறது என்றும், இந்தியாவிலேயே பாஜ காலூன்ற முடியாத மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது என்றும் செல்வப்பெருந்தகை கூறினார். தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான, காங்கிரஸ் உள்ளிட்ட இந்தியா கூட்டணி நாற்பதும் நமதே என்று கூறியபடி 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்று மீண்டும் சாதனை படைத்திருக்கிறோம். தமிழகத்தில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளில் 222 தொகுதிகளில் மற்ற கூட்டணி கட்சிகளை விட இந்தியா கூட்டணி அதிக வாக்குகளை பெற்றிருக்கிறது. அதேபோல, 32 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட 192 சட்டமன்ற தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி அதிக வாக்குகளை பெற்றுள்ளது.

இந்தியா கூட்டணியை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக 7 இடங்களிலும், பாஜ கூட்டணியோடு சேர்த்து, 20 இடங்களிலும் டெபாசிட் தொகையை பறிகொடுத்துள்ளன. தமிழகத்தில் 9 இடங்களில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சியின் வாக்கு சதவிகிதத்தை 23 இடங்களில் போட்டியிட்ட பாஜகவோடு ஒப்பிட்டு பேசுவது அரசியல் அறியாமையின் வெளிப்பாடாகும். இந்நிலையில் தமிழகத்தில் பாஜவுக்கு ஒளிமயமான எதிர்காலம் இருப்பதாக மோடி பேசியிருப்பது மிகச் சிறந்த கற்பனையாகும். நடந்து முடிந்த தேர்தலில் வெற்றி பெற்றதை மகிழ்ச்சியோடு கொண்டாடும் வகையிலும், காங்கிரஸ் கட்சியின் அடிப்படை கட்டமைப்புகளை எதிர்காலத்தில் எப்படி அமைப்பது என்பது குறித்து விவாதிக்கவும் தமிழ்நாடு காங்கிரஸ் பொதுக்குழு கூட்டம் சென்னை தேனாம்பேட்டை காமராஜர் அரங்கத்தில் ஜூன் 11ம் தேதி காலை 10 மணிக்கு நடைபெறும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

The post பாஜவுக்கு ஒளிமயமான எதிர்காலம் என மோடி பேசியிருப்பது மிகச்சிறந்த கற்பனை: செல்வப்பெருந்தகை காட்டம் appeared first on Dinakaran.

Tags : Modi ,Bajau ,CHENNAI ,Selvaperunthakai ,Tamil Nadu Congress Party General Committee ,Congress Party ,Tamil Nadu ,India ,BJP ,Congress ,President ,Selvaperunthakai Kattam ,
× RELATED கங்கை மாதா என்னை மடியில் ஏந்திக் கொண்டார் : பிரதமர் மோடி