×

காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற குழு தலைவராக சோனியா காந்தி ஒருமனதாக மீண்டும் தேர்வு: நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் முடிவு

டெல்லி: நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள் கடந்த 4ம் தேதி எண்ணப்பட்டன. இதில் தேசிய ஜனநாயக கூட்டணி 292 இடங்களிலும், இந்தியா கூட்டணி 234 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. அதே சமயம் பாஜக தனியாக 240 தொகுதிகளை கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உள்ளது. காங்கிரஸ் கட்சி 99 இடங்களை கைப்பற்றி 2வது பெரிய கட்சியாகவும், சமாஜ்வாடி கட்சி 37 தொகுதிகளை கைப்பற்றி 3-வது பெரிய கட்சியாகவும் உள்ளன.தேர்தல் முடிவுகள் குறித்து ஆலோசிப்பதற்காக டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமையகத்தில் காங்கிரஸ் செயற்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் நடைபெற்ற இந்த செயற்குழு கூட்டத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, மூத்த எம்.பி.க்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

இந்த செயற்குழு கூட்டத்தில் நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவராக ராகுல் காந்தியை நியமிக்க கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக தகவல் வெளியானது. இந்த நிலையில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட காங்கிரஸ் கட்சியின் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நாடாளுமன்றத்தின் மைய கட்டிடத்தில் நடைபெற்றது. இந்த நிலையில் இந்த கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற குழு தலைவராக சோனியா காந்தி ஒருமனதாக மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். சோனியா காந்தியின் பெயரை காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே முன்மொழிந்தார். கவுரவ் கோகாய், தாரிக் அன்வர் உள்ளிட்டோர் கார்கே முன்மொழிந்ததை வழிமொழிந்தனர். இதையடுத்து காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற குழு தலைவராக சோனியா காந்தி தேர்வு செய்யப்பட்டார்.

The post காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற குழு தலைவராக சோனியா காந்தி ஒருமனதாக மீண்டும் தேர்வு: நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் முடிவு appeared first on Dinakaran.

Tags : Sonia Gandhi ,parliamentary committee ,Congress party ,Delhi ,Lok Sabha elections ,National Democratic Alliance ,India Alliance ,BJP ,Dinakaran ,
× RELATED வங்க தேச பிரதமர் ஹசீனாவுடன் சோனியா...