×

தமிழகத்தில் நாளை குரூப் 4 தேர்வு 6,244 பதவிகளுக்கு 20 லட்சம் பேர் போட்டி: செல்போன், மோதிரம் அணிந்து செல்ல தடை மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு

சென்னை: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) குரூப்-4 பதவிகளில்வரும் கிராம நிர்வாக அலுவலர்- 108, இளநிலை உதவியாளர்-2,604, தட்டச்சர்- 1,705, சுருக்கெழுத்து தட்டச்சர்- 445, தனி உதவியாளர், கிளர்க்- 3, தனி செயலாளர்- 4, இளநிலை நிர்வாகி- 41, வரவேற்பாளர்- 1, பால் பதிவாளர்- 15, ஆய்வக உதவியாளர்- 25, பில் கலெக்டர்- 66, தொழிற்சாலை மூத்த உதவியாளர்- 49, வன பாதுகாவலர், காவலர்- 1,177, இளநிலை ஆய்வாளர்- 1 ஆகிய 6244 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை கடந்த ஜனவரி 30ம் தேதி வெளியிட்டது. பிப்ரவரி 28ம் தேதி வரை விண்ணப்பிக்க கால அவகாசம் வழங்கப்பட்டது. இத்தேர்வுக்கு 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்று இருந்தால் போதும். ஆனால் பட்டதாரிகள், முதுநிலை பட்டதாரிகள், பொறியியல் பட்டதாரிகள், எம்ஃபில் முடித்தவர்கள் என உயர்கல்வி தகுதி பெற்றவர்களும் போட்டி போட்டு விண்ணப்பித்தனர். 6,244 பணியிடங்களுக்கு சுமார் 20 லட்சத்துக்கும் அதிகமானோர் விண்ணப்பித்துள்ளதாக கூறப்படுகிறது.

இப்பதவிகளுக்கான எழுத்து தேர்வு நாளை நடக்கிறது. காலை 9.30 மணிக்கு தொடங்கும் தேர்வு மதியம் 12.30 மணி வரை நடக்கிறது. தேர்வு எழுதுபவர்கள் காலை 8.30 மணிக்கே தேர்வு நடைபெறும் இடங்களுக்கு வர வேண்டும். காலை 8.59 மணிக்குள் தேர்வு அறைக்குள் இருக்க வேண்டும். 9 மணிக்கு பிறகு வரக்கூடிய தேர்வர்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள். பிற்பகல் 12.30 மணிக்கு தேர்வு முடிந்தாலும், 12.45 மணி வரை இருக்க வேண்டும் என்று கட்டாய உத்தரவை டிஎன்பிஎஸ்சி விடுத்துள்ளது. இத்தேர்வில், பொது தமிழ் பகுதியில் இருந்து 100 கேள்விகள், பொது அறிவு மற்றும் நுண்ணறிவு திறன் பகுதிகளில் இருந்து 100 கேள்விகள் என மொத்தம் 200 கேள்விகள் இடம்பெறும். ஒரு கேள்விக்கு ஒன்றரை மதிப்பெண் வீதம் மொத்தம் 300 மதிப்பெண்கள் வழங்கப்படும். 38 மாவட்டங்களில் 316 தாலுகாக்களில் இந்த தேர்வு நடைபெறுகிறது. மொத்தம் 7,689 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. அனைத்து இடங்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் தேர்வர்களுக்கு பல கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளது. தேர்வுக்கூடம் மற்றும் அறைகளுக்கு தரவி, கைக்கடிகாரம், மோதிரம் மற்றும் ஏனைய மின்னணு சாதனங்கள், மின்னணு அல்லாத பதிவு கருவிகள், புத்தகங்கள், குறிப்புகள், கைப்பை, பதிவு செய்யும் தனிக்கருவிகளாகவோ, மோதிரம் அல்லது கைக்கடிகாரத்தின் இணைப்பாகவோ கொண்டு வரக்கூடாது. அவ்வாறான பொருட்களை வைத்திருந்தால் தேர்வு எழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள். அவர்களது விடைத்தாள் செல்லாததாக்கப்படும். தேர்வு எழுதுவதில் இருந்து விலக்கி வைக்கப்படுவார்கள். தேவை ஏற்பட்டால் அவ்விடத்திலேயே முழு சோதனைக்கு உட்படுத்தப்படுவர். அனுமதிக்கப்பட்ட எழுது பொருட்களான பேனா தவிர வண்ண எழுது கோல், பென்சில், புத்தகங்கள், குறிப்புகள், தனித்தாள்கள், கணித மற்றும் வரைப்பட கருவிகள், மடக்கை அட்டவணை, படியெடுக்கப்பட்ட வரைபடம், காட்சி வில்லைகள், பாடப்புத்தகங்கள், பொது குறிப்பு தாள்கள் ஆகியவற்றை கொண்டு வரக்கூடாது.

மேலும் கைப்பேசி உள்ளிட்ட தடை செய்யப்பட்ட பொருட்களை தேர்வு கூடத்திற்கு கொண்டுவர வேண்டாம். தேர்வு எழுதும் அறையில் மற்ற விண்ணப்பதாரர்களுடைய விடைத்தாள்களில் இருந்து பார்த்து எழுதுதல் மற்றும் ஏதேனும் முறையற்ற உதவிகளை பெறவோ அல்லது ெபற முயற்சிக்கவோ அத்தகைய முறையற்ற உதவிகளை தரவோ, தர முயற்சிக்கவோ கூடாது. மேலும் தேர்வர், தவறான நடவடிக்கையிலோ அல்லது தேர்வினை சீர்குலைக்கும் நோக்கத்திலோ, பணியில் அமர்த்தப்பட்டுள்ள அலுவலர், பணியாளர்களை தாக்கும் முயற்சியிலோ ஈடுபட கூடாது. அத்தகைய செயல்கள் கடுமையான தவறாக கருதப்படும். அத்தேர்வர்கள் தண்டனைக்கு உட்படுத்தப்படுவர். விதிமுறைகளை மீறும் பட்சத்தில் விதிமுறைகளின்படி தண்டனை விதிக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 

The post தமிழகத்தில் நாளை குரூப் 4 தேர்வு 6,244 பதவிகளுக்கு 20 லட்சம் பேர் போட்டி: செல்போன், மோதிரம் அணிந்து செல்ல தடை மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,CHENNAI ,Tamil Nadu Public Service Commission ,TNPSC ,
× RELATED திருப்பூர் மாணவி முதலிடம்