×

டி.களத்தூரில் குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்

 

பாடாலூர், ஜூன் 8: பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா டி.களத்தூர் ஊராட்சி 6 வார்டில் சுமார் 50க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு, ஊராட்சி சார்பில் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் கடந்த சில நாட்களாக வீட்டு இணைப்பில் சீரான குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது. குறைந்த மின் அழுத்தம் காரணமாக மேல்நிலை நீர் தேக்க தொட்டிக்கு தண்ணீர் ஏற்ற முடியாத காரணத்தால் குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும், உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் நேற்று காலை காலி குடங்களுடன் டி.களத்தூர்- திருச்சி செல்லும் சாலையில் டி.களத்தூர் ஊராட்சி அலுவலகம் முன் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அவ்வழியாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதையறிந்த ஆலத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் சேகர் மற்றும் பாடாலூர் போலீசார் விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். விரைவில் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டது. இதை ஏற்று பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். அதன்பிறகு 1 மணி நேரம் கழித்து மீண்டும் அந்த வழியே போக்குவரத்து தொடங்கியது.

The post டி.களத்தூரில் குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல் appeared first on Dinakaran.

Tags : D. Kalathur ,Padalur ,T. Kalathur panchayat ,Aladhur taluka ,Perambalur district ,Panchayat ,
× RELATED பாடாலூர் அருகே பைக்கில் இருந்து விழுந்து செவிலியர் பலி