×

தேர்தல் நடத்தை விதிகள் வாபஸ் எதிரொலி வழக்கமான பணிகளை தொடங்கியது தமிழக அரசு

சென்னை: தமிழகத்தில் 82 நாட்கள் அமலில் இருந்த நாடாளுமன்ற தேர்தல் நடத்தை விதிகள் நேற்று முன்தினம் வாபஸ் பெறப்பட்டது. இதையடுத்து, தமிழக அரசு நேற்று தனது வழக்கமான பணிகளை தொடங்கியது. தமிழகம் உள்பட நாடு முழுவதும் நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிப்பு கடந்த மார்ச் 16ம் தேதி வெளியிடப்பட்டது. இதையடுத்து தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வந்தன. இதன் காரணமாக, தமிழக அரசு சார்பில் புதிய அறிவிப்புகள், ஒப்பந்தப்புள்ளிகள் கோரல், விழாக்கள் நடத்துவது போன்ற பணிகள் நடைபெறவில்லை.

அத்துடன் அமைச்சர்கள் தங்களது வீடுகளில் இருந்து அலுவலகத்துக்கு செல்வதற்கு மட்டுமே தேசியக்கொடி கட்டிய வாகனங்களில் பயணிக்க வேண்டுமெனவும், அரசு சார்ந்த கட்டிடங்களில் தங்குவதற்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. தமிழகத்தில் நிகழ்ந்த பல்வேறு விபத்துகள், இயற்கை பேரிடர் நிகழ்வுகளில் பாதிக்கப்பட்டோருக்கு தேர்தல் நடத்தை விதிகள் காரணமாக நிவாரணத் தொகை அளிக்கப்படாத நிலை ஏற்பட்டது.

இறந்தவர்களின் குடும்பங்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் சார்பில் இரங்கல் மட்டுமே தெரிவிக்கப்பட்டது. தேர்தல் அறிவிக்கை வெளியிடப்பட்ட தினத்தில் இருந்து, நடத்தை விதிகள் வாபஸ் பெறும் காலம் வரையிலான 82 நாட்களில் ஒருசில நாட்கள் மட்டுமே தலைமை செயலகத்துக்கு வந்து முதல்வரால் அரசு பணிகளை மேற்கொள்ள முடிந்தது. தமிழகத்தில் வாக்குப்பதிவு முடிவடைந்து, வாக்கு எண்ணிக்கைக்கு 45 நாட்கள் இருந்தபோதும் தேர்தல் நடத்தை விதிகள் காரணமாக அரசு பணிகளை மேற்கொள்ள முடியாத நிலை அமைச்சர்களுக்கு ஏற்பட்டது.

வாக்கு எண்ணிக்கை நிறைவடைந்து தேர்தல் நடத்தை விதிகள் நேற்று முன்தினம் மாலையுடன் விலக்கிக் கொள்ளப்படுவதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதையடுத்து நேற்று முதல் தலைமை செயலகத்தில் அமைச்சர்கள், அரசு துறை அதிகாரிகள் வழக்கமான பணிகளை மேற்கொள்ள தொடங்கினர். அரசின் திட்டங்களில் புதிய பயனாளிகள் சேர்ப்பு, மகளிர் உரிமைத்தொகை, புதிய குடும்ப அட்டைகள் போன்ற அத்தியாவசிய பணிகளை தமிழக அரசு விரைவுபடுத்த உள்ளது.

The post தேர்தல் நடத்தை விதிகள் வாபஸ் எதிரொலி வழக்கமான பணிகளை தொடங்கியது தமிழக அரசு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu government ,CHENNAI ,Tamil Nadu ,
× RELATED அனுமதி கோரி தமிழக அரசுக்கு கோப்புகளை...