சென்னை: மானிய கோரிக்கை மீதான விவாதம் நடத்த தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டம் ஜூன் 24ம் தேதி தொடங்கப்படும் என சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார். 2024ம் ஆண்டின் முதல் தமிழக சட்டப்பேரவை கூட்டம் கடந்த பிப்ரவரி மாதம் 12ம் தேதி நடைபெற்றது. இந்த ஆண்டின் முதல் கூட்டம் என்பதால் கவர்னர் ஆர்.என்.ரவி உரையாற்றினார். கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது தொடர்ந்து 3 நாட்கள் விவாதம் நடைபெற்றது. இதற்கு அமைச்சர்கள் பதிலுரை அளித்தனர்.
அதைத்தொடர்ந்து 2024-2025ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட் பிப்ரவரி 19ம் தேதியும், வேளாண்மை பட்ஜெட் பிப்ரவரி 20ம் தேதி சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. இதன் மீது நடைபெற்ற விவாதங்களுக்கு அமைச்சர்கள் பதில் அளித்தனர். இதில் சில சட்ட மசோதாக்களும் நிறைவேற்றப்பட்டது. அதன்பின் பிப்ரவரி 22ம் தேதி நடைபெற்ற விவாதத்துக்கு பிறகு தமிழக சட்டப்பேரவை கூட்டம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில், நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறும் என்று கடந்த மார்ச் 16ம் தேதி இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி தமிழகத்தில் ஏப்ரல் 19ம் தேதி 39 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடந்து முடிந்தது. ஆனாலும் 7 கட்ட தேர்தல் நடந்து முடிந்ததும், கடந்த 4ம் தேதிதான் வாக்கு எண்ணும் பணிகள் நடந்து முடிந்தது. இந்த நிலையில் 2024-2025ம் ஆண்டிற்கான மானியகோரிக்கை மீதான விவாதத்தை நடத்தும் வகையில் வரும் ஜூன் 24ம் தேதி தமிழ்நாடு சட்டப்பேரவை கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சென்னை, தலைமை செயலகத்தில் தமிழக சட்டப்பேரவை தலைவர் மு.அப்பாவு நிருபர்களிடம் கூறியதாவது: 2024-205ம் ஆண்டிற்கான வரவு-செலவு திட்டத்திற்கான பொதுவிவாதம் முடிவுற்று வாக்கெடுப்பு நடைபெற்று முடிந்தது. இதன் பின்னர், நடத்த வேண்டிய மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெறவில்லை.
எனவே, வரும் 24ம் தேதி சென்னை தலைமைச்செயலகத்தில் உள்ள சட்டமன்ற பேரவை மண்டபத்தில் காலை 10 மணியளவில் சட்டமன்ற கூட்டம் நடத்தப்படும். அதன்படி, எத்தனை நாட்கள் மானிய கோரிக்கை மீதான விவாதம் நடத்தப்பட வேண்டும், எந்தெந்த தேதியில் எந்தெந்த மானிய கோரிக்கைகள் நடத்த வேண்டும் என்பன குறித்து ஜூன் 24ம் தேதிக்கு முன்பாக சட்டப்பேரவை அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் கூடி முடிவு எடுக்கப்படும்.
The post சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு சட்டப்பேரவை ஜூன் 24ல் கூடுகிறது appeared first on Dinakaran.