×

தமிழிசை பற்ற வைத்த நெருப்பு பற்றி எரிகிறது அண்ணாமலைக்கு எதிர்ப்பு வலுக்கிறது: கட்சிக்குள் ஆதாரத்துடன் எதிர்ப்பு தெரிவிக்கும் மற்றொரு தலைவரால் பரபரப்பு

சென்னை: பாஜ படுதோல்விக்கு கூட்டணியில் இருந்து வெளியேறியதுதான் காரணம் என்று தமிழிசை கூறிய கருத்தைத் தொடர்ந்து அண்ணாமலைக்கு கட்சிக்குள் எதிர்ப்பு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. மேலும் ஒரு தலைவர் எதிர்ப்பு தெரிவித்து டிவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாடு முழுவதும் 7 கட்டங்களாக மக்களவை தேர்தல் நடத்தப்பட்டன. இத்தேர்தலில் பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கும், காங்கிரஸ், திமுக, சமாஜ்வாதி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அங்கம் வகிக்கும் இந்தியா கூட்டணிக்கும் இடையே நேரடி போட்டி நிலவியது.

பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 292 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இந்தியா கூட்டணி 234 தொகுதிகளில் வெற்றி பெற்றது. குறிப்பாக தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 39 தொகுதிகளில் பாஜ ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உள்ள 40 தொகுதிகளிலும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஆகிய கட்சிகள் மெகா வெற்றியை பதிவு செய்தன.

அனைத்து தொகுதிகளிலும் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவுக்கு பின்னடைவு பெற்றுள்ளது. குறிப்பாக, அதிமுக தமிழ்நாட்டில் போட்டியிட்ட 32 தொகுதிகளில் 7 தொகுதிகளில் டெபாசிட் இழந்துள்ளது. அதே போல், இந்த முறை தமிழகத்தில் பாஜ நிச்சயம் அதிக எம்பி சீட்டுகளை வெல்லும் என பிரசாரம் செய்து வந்த அண்ணாமலை தலைமையிலான தமிழக பாஜகவும் அனைத்து தொகுதிகளிலும் தோல்வியை கண்டது. பாஜ மற்றும் கூட்டணிக் கட்சிகள் சார்பில் 21 இடங்களில் டெபாசிட்டை பறி கொடுத்துள்ளனர்.

இந்நிலையில், தமிழகத்தில் பாஜ தோல்வி அடைந்ததற்கு அண்ணாமலை மட்டுமே காரணம், அண்ணாமலை தமிழக பாஜவை தவறாக வழிநடத்துகிறார் என விமர்சனம் எழுந்து வருகிறது. குறிப்பாக, சொந்த கட்சியினரான தமிழிசை மற்றும் எஸ்.வி.சேகர் உட்பட பலரும் விமர்சித்து வருகின்றனர். அதிலும், பாஜவின் கோட்டை என எதிர்பார்க்கப்பட்ட கோவை தொகுதியில் தான் அண்ணாமலை, கோட்டை விட்டுள்ளார்.

கடந்த 10 ஆண்டுகளின் புள்ளி விவரத்தின் படி, 2014ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் திமுக, அதிமுக இல்லாமல் தேமுதிக, பாமக, மதிமுக ஆகிய கட்சிகளை உள்ளடக்கிய கூட்டணியை பாஜ அமைத்தது. அந்தத் தேர்தலில் பாஜ சார்பில் கோவையில் போட்டியிட்ட சி.பி.ராதாகிருஷ்ணன், 3,89,701 வாக்குகளைப் பெற்றார். அடுத்த 10 ஆண்டுகளில் சி.பி,ராதாகிருஷ்ணனைக் காட்டிலும் அதிகமாக அண்ணாமலை மொத்தம் 4,50,132 வாக்குகளைப் பெற்றுள்ளார்.

வாக்குகள் எண்ணிக்கை அடிப்படையில் பார்த்தால் அண்ணாமலை பாஜகவுக்கு அதிக வாக்குகளைப் பெற்றுக் கொடுத்துள்ளார் என்பது போல் தெரிகிறது. ஆனால், கடந்த 10 ஆண்டுகளில் கோவை தொகுதியில் அதிகரித்த வாக்காளர் எண்ணிக்கை, பதிவான வாக்குகள் ஆகியவற்றையும் கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம். எனவே, வாக்கு சதவீதத்தை கணக்கிட்டு பார்த்தால் தற்போது அண்ணாமலை மொத்தம் பதிவான வாக்குகளில் 32.79 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளார்.

ஆனால், 2014ஆம் ஆண்டு சி.பி.ராதாகிருஷ்ணனோ கோவை தொகுதியில் மொத்தம் பதிவான வாக்குகளில் 33.6 சதவீத வாக்குகளைப் பெற்றிருந்தார். அண்ணாமலையை விட சி.பி.ராதாகிருஷ்ணன் அதிக வாக்குகளை பெற்றிருப்பதாகத்தான் கருத முடியும். மேலும் சி.பி.ராதாகிருஷ்ணன் 46 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். ஆனால் அண்ணாமலை 1.60 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் தோற்றுள்ளார்.

இது ஒரு புறம் என்றால், மறுபுறம் பாஜவின் வாக்கு வங்கியே மொத்தமாக தமிழகத்தில் சரிந்துள்ளது. 2014 தேர்தலை விட இப்போது வாக்கு சதவிதம் குறைந்துள்ளது. அதுவும் 18.8% லிருந்து தற்போது 18.2% குறைந்துள்ளது. கடந்த 2014ல் 9 இடங்களில் போட்டியிட்ட தமிழக பாஜ வெறும் 5.56% பெற்றது. தற்போது 23 தொகுதிகளில் போட்டியிட்டு 11.24% வாக்கு பெற்றுள்ளனர். இதை வைத்து மட்டும் பார்த்தால் பாஜ தமிழகத்தில் வளர்ந்துள்ளது என்பதை எடுத்துக் கொள்ளகூடாது.

மாறாக கடந்த 10 ஆண்டுகளின் விகித அடிப்படையில் 2014ம் ஆண்டு செயல்திறனை சமன் செய்ய பாஜ சுமார் 14.25% வாக்கு பெற்றிருக்க வேண்டும். இப்படி தமிழகத்தில் லேசாக தாமரை முளைக்க கூட விடாமல் அண்ணாமலை தடுத்து விட்டார் என்று பாஜ மூத்த தலைவர் கல்யாணராமன் டிவிட்டர் பதிவில் குற்றம்சாட்டியுள்ளார். மேலும் தமிழிசைக்கு ஆதரவாக மேலும் பல தலைவர்கள் அவரை தொடர்பு கொண்டு பேசி வருகின்றனர். இதனால் அண்ணாமலைக்கு எதிராக தமிழக பாஜவில் கலகம் உருவாகியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post தமிழிசை பற்ற வைத்த நெருப்பு பற்றி எரிகிறது அண்ணாமலைக்கு எதிர்ப்பு வலுக்கிறது: கட்சிக்குள் ஆதாரத்துடன் எதிர்ப்பு தெரிவிக்கும் மற்றொரு தலைவரால் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,Annamalai ,Tamilisai ,BJP ,Twitter ,Dinakaran ,
× RELATED மக்களவை தேர்தல் தோல்வியில் வெடித்த...