×

பல்வேறு முறைகேடுகளுடன் நடந்து முடிந்த நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்: உச்ச நீதிமன்றத்தில் மாணவர்கள் தரப்பில் மனு

புதுடெல்லி: பல்வேறு முறைகேடுகளுடன் நடந்து முடிந்த நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி மாணவர்கள் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நடப்பு ஆண்டுக்கான நீட் தேர்வு கடந்த மே 5ம் தேதி நடத்தி முடிக்கப்பட்டது. இந்த தேர்வில் இயற்பியல் மட்டுமே சற்று கடினமாக இருந்ததாகவும் மற்ற பாடங்கள் எளிதாக இருந்ததாகவும் மாணவர்கள் தெரிவித்திருந்தனர். இந்த நிலையில் தேர்வு முடிந்த ஓரிரு நாட்களிலேயே நீட் தேர்வுக்கான வினாத்தாள் கசிந்ததாக இணையதளத்தில் தகவல்கள் வெளியாகின.

இந்த தகவல்களை மறுத்த தேசிய தேர்வு முகமை சமூக ஊடக பதிவுகள் எல்லாமே அடிப்படை ஆதாரமற்றவை என தெரிவித்திருந்தது. ஒவ்வொரு கேள்வித்தாளுக்கும் கணக்கு வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் பீகார், ராஜஸ்தான், டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் நீட் தேர்வு வினாத்தாள்கள் கசிந்து முறைகேடு நடந்துள்ளதாக குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் நீட் தேர்வு எழுதிய மாணவர்கள் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அதில்,‘‘நடப்பாண்டுக்கான நீட் தேர்வு மே.5ம் தேதி நடத்தப்பட்டது.

அதில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளது. குறிப்பாக சட்டத்துக்கு புறம்பாக வினாத்தாள் தேர்வுக்கு முன்பே கசிந்துள்ளது. அதேபோன்று கருணை மதிப்பெண் என்ற பெயரில் தேசிய தேர்வு முகமை மாணவர்களுக்கு சரியான மதிப்பெண்களை வழங்காமல், முறைகேடான மதிப்பெண்களை வழங்கியுள்ளது. குறிப்பாக நீட் வினாத்தாள் கசிந்த ராஜஸ்தான் மாநிலத்தில் மட்டும் சுமார் 11 மாணவர்கள் 720 மதிப்பெண்களை பெற்றுள்ளனர். இது மிகப்பெரிய சந்தேகத்தை எழுப்பியுள்ளது. எனவே இத்தனை முறைகேடுகளுடன் நடந்த நடப்பாண்டு நீட் தேர்வை ரத்து செய்து விட்டு, புதிய அட்டவணையின் அடிப்படையில் நீட் தேர்வை மீண்டும் நடத்த வேண்டும்.

இதுகுறித்து தேசிய தேர்வு முகமைக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க வேண்டும்” என்று வலியுறுத்தி உள்ளனர். இந்த மனு விரைவில் உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் இதே கோரிக்கையை கொண்ட மனுக்களை முன்னதாக விசாரித்த உச்ச நீதிமன்றம், நீட் தேர்வு முடிவுகளை வெளியிட தடையில்லை என்றும், பிரதான வழக்கு ஜூலை மாதம் விசாரிக்கப்படும் என்றும் கடந்த 3ம் தேதி தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கதாகும்.

* ஒன்றிய அரசு பதிலளிக்க வேண்டும்
காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி கூறுகையில், ‘‘நீட் தேர்வு முறைக்கு எதிராக தொடர்ந்து கண்டனம் தெரிவிக்கப்படுகிறது. நீட் தேர்வு முடிவுகளில் முறைகேடு நடந்துள்ளதாக மாணவர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். லட்சக்கணக்கான மாணவர்களின் குரலை ஒன்றிய அரசு புறக்கணிப்பது ஏன். குறிப்பாக ஒரே பயிற்சி மையத்தை சேர்ந்த ஆறு மாணவர்கள் முழு மதிப்பெண்கள் பெற்று இருப்பது என்பது பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் நடந்து முடிந்த நீட் தேர்வில் பல்வேறு முறைகேடுகள் நடந்தது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. தேர்வு முடிவுகள் வெளியான பிறகு நாடு முழுவதும் ஏராளமான மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டதாக வெளிவரும் செய்திகள் வருத்தத்தையும், அதிர்ச்சியையும் தருகிறது. நீட் தேர்வு முடிவுகள் குறித்து மாணவர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு ஒன்றிய அரசு உரிய பதிலளிக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

நீட் குறித்து மாணவர்கள் எழுப்பும் 5 சந்தேகங்கள்
1. முடிவு அறிவிக்கும் தேதி: முடிவுகள் ஜூன் 14ம் தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டது. இருப்பினும், அவை 10 நாட்களுக்கு முன்னதாக, தேர்தல் முடிவுகள் வெளியான அதே நாளில் அறிவிக்கப்பட்டன.
2. முன்னோடியில்லாத எண்ணிக்கையிலான சரியான மதிப்பெண்கள்: கடந்த ஆண்டு 2 மாணவர்கள் மட்டுமே முழு மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். இந்த ஆண்டு, 67 மாணவர்கள் அகில இந்திய அளவில் முதல் ரேங்க் பெற்றுள்ளனர், இது 2000% அதிகரிப்பு.
3. சந்தேகத்திற்கிடமான ரோல் எண் வரிசை: முடிவுகள் பட்டியலில், 62வது முதல் 69வது இடம் வரை உள்ள மாணவர்களின் பட்டியல் எண்கள் ஒன்றுக்கொன்று மிக நெருக்கமாக உள்ளன. இந்த நிகழ்வு சாதாரண சூழ்நிலையில் சாத்தியமற்றது.
4. கருணை மதிப்பெண்: சில மாணவர்கள் 718 அல்லது 719 மதிப்பெண்களைப் பெற்றனர், இது நீட்டில் சாத்தியமற்றது. ஒவ்வொரு கேள்விக்கும் 4 மதிப்பெண்கள் உண்டு, தவறான பதிலுக்கு 1 மதிப்பெண் கழிக்கப்படும். நீட் வரலாற்றில் முதல் முறையாக குறிப்பிட்ட சில மையங்களில் கேள்வி தாள்கள் தாமதமாக வழங்கப்பட்டதால் இந்த மாணவர்கள் கருணை மதிப்பெண்களைப் பெற்றதாக தேசிய தேர்வு முகமை கூறியது.
5. வினாத்தாள் கசிவு: தேர்வுக்கு ஒரு நாள் முன்பு, நீட் வினா தாள் கசிவு மற்றும் 35 விண்ணப்பதாரர்களுக்கு கேள்விகள் மற்றும் பதில்களை வழங்கியது தொடர்பாக 13 பேரை பாட்னா போலீசார் கைது செய்தனர்.

The post பல்வேறு முறைகேடுகளுடன் நடந்து முடிந்த நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்: உச்ச நீதிமன்றத்தில் மாணவர்கள் தரப்பில் மனு appeared first on Dinakaran.

Tags : Supreme Court ,New Delhi ,Dinakaran ,
× RELATED நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக...