×

தனது வீட்டு மாடியில் இருந்து பக்கத்து வீட்டு மாடிக்கு எகிறி குதித்த பெண் பலி: அயனாவரத்தில் சோகம்


பெரம்பூர்: அயனாவரத்தில் தனது வீட்டு மாடியில் காயவைத்திருந்த துணியை எடுத்துவிட்டு பக்கத்து வீட்டு மாடியில் எகிறி குதித்த பெண் தவறிவிழுந்து பலியானார். சென்னை அயனாவரம் வெள்ளாளர் தெரு பகுதியில் வசித்து வருபவர் சீனிவாசராவ் (56). ஐசிஎப்பில் இன்ஜினியராக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி ஸ்ரீதேவி (52). இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். ஸ்ரீதேவி, நேற்று மாலை 4 மணி அளவில் வீட்டின் 2வது மாடியில் காயவைத்திருந்த துணியை மழை வந்ததால் அவசர அவசரமாக எடுத்துள்ளார்.

இவரது வீட்டிலிருந்து பக்கத்தில் உள்ள உறவினர் வீட்டு மாடிக்கு ஒரு அடியில் எகிறி குதித்துசெல்லலாம். இதனால் அடிக்கடி எகிறி குதித்து உறவினர் மாடிக்கு செல்வது வழக்கம். நேற்றும் துணியை எடுத்துவிட்டு பக்கத்து வீட்டிற்கு மாடிக்கு ஸ்ரீதேவி எகிறி குதித்து செல்ல முயன்றுள்ளார். அப்போது அவர் அணிந்திருந்த நைட்டி காலில் சிக்கியதால் நிலைதடுமாறி 2 கட்டிடங்களுக்கும் இடையே விழுந்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்தனர். பின்னர், 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்து ஸ்ரீதேவியை மீட்டு ஐசிஎப் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் அயனாவரம் இன்ஸ்பெக்டர் பரணிநாதன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து ஸ்ரீதேவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அயனாவரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

 

The post தனது வீட்டு மாடியில் இருந்து பக்கத்து வீட்டு மாடிக்கு எகிறி குதித்த பெண் பலி: அயனாவரத்தில் சோகம் appeared first on Dinakaran.

Tags : Ayanavara ,PERAMPUR ,AYANAVARAT ,Sinivasrao ,Ayanavaram Velja Street ,Chennai ,ICF ,
× RELATED பெண் காவலரிடம் தகராறு செய்தவர் கைது