×

தமிழ்நாடு பாஜகவில் வெடிக்கும் உட்கட்சி பூசல்.. பொய் சொல்வது அண்ணாமலை ரத்தத்திலேயே ஊறிவிட்டதாக கல்யாணராமன் சாடல்!!

சென்னை : மக்களவை தேர்தல் தோல்வியால் தமிழ்நாடு பாஜகவில் அடுத்தடுத்து உட்கட்சி கோஷ்டி பூசல் வெடித்து வருகிறது. முன்னாள் பாஜக மாநில தலைவர் தமிழிசை, அண்ணாமலை வார் ரூம் ஆட்களை எச்சரித்த நிலையில் மற்றொரு மாநில நிர்வாகியும் தற்போது புகார் கூறுகிறார். அண்ணாமலை, அவரது ஆதரவாளர்கள் மீது கட்சியின் அறிவுசார் பிரிவு மாநில தலைவர் கல்யாணராமன் சரமாரி புகார் தெரிவித்துள்ளார். தேர்தல் தோல்வி தொடர்பாக பாஜக நிர்வாகிகள் விவாதிக்க வாய்ப்பு மறுக்கப்படுவதாக எக்ஸ் தளத்தில் கல்யாணராமன் குற்றம் சாட்டி உள்ளார். மேலும் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “தேர்தல் தோல்வி தொடர்பாக தமிழிசை, அதிமுக முன்னாள் அமைச்சர் வேலுமணி கூறியது சரியானது.

2014-ல் 18.8% வாக்குகள் பெற்றுள்ள நிலையில் தற்போதைய தேர்தலில் பாஜக 18.2% வாக்குகளை மட்டுமே பெற்றுள்ளது. பாஜகவின் வாக்கு சதவீதம் சரிந்தபோதும் கட்சியின் தேசிய தலைமையை அண்ணாமலை தவறாக வழிநடத்தி வருகிறார். 2014-ல் பொன்.ராதா தலைமையில் பாஜக தேர்தலை சந்தித்தபோது 9 இடங்களில் போட்டியிட்டு 2 இடங்களில் மட்டுமே பாஜக டெபாசிட் இழந்தது. தற்போது அண்ணாமலை தலைமையில் 23 இடங்களில் போட்டியிட்டு 11 இடங்களில் டெபாசிட் இழந்தது. 2014-ல் 42,000 வாக்கு வித்தியாசத்தில் சி.பி.ராதாகிருஷ்ணன் தோல்வி, அண்ணாமலை அதைவிட 3 மடங்கு அதிக வித்தியாசத்தில் தோல்வி அடைந்துள்ளார்.

போலீஸ் அதிகாரியாக 6 ஆண்டு மட்டுமே பணிபுரிந்த அண்ணாமலை 10 ஆண்டு பணிபுரிந்ததாக பொய்யான தகவல் கூறுகிறார். பொய் சொல்வது அண்ணாமலை ரத்தத்திலேயே ஊறிவிட்டது. பெரிய தலைவராக காட்டிக்கொள்ளவே எடப்பாடிக்கு எதிரான அரசியலை அண்ணாமலை செய்கிறார். அண்ணாமலையை முன்னிலைப்படுத்த, பிற பாஜக தலைவர்களை சிறுமைப்படுத்த 2 வார் ரூம்கள் செயல்படுகின்றன. அண்ணாமலை வார் ரூமை நிர்வகிப்போரில் ஒருவர் ED வழக்குகளில் தொடர்புடையோரை மிரட்டி பணம் பறித்து வருகிறார். தங்கக் கடத்தல்காரர்கள், ரூ.1,000 கோடிக்கு மேல் மோசடி செய்தோரிடம் வார் ரூம் மூலம் பணம் பறிக்கின்றனர்,”இவ்வாறு தெரிவித்தார்.

கல்யாணராமன் புகாருக்கு அண்ணாமலை ஆதரவாளர்கள் பதிலளித்து வருவதால் எக்ஸ் தளத்தில் பாஜகவினரிடையே மோதல் வெடித்துள்ளது. பாஜகவினர் பொதுவெளியில் சொந்தக் கட்சி பற்றி விமர்சிக்க வேண்டாம் என அண்ணாமலை ஆதரவாளர் எஸ்.ஜி.சூர்யா வேண்டுகோள் விடுத்துள்ளார். தேர்தல் தோல்வியால் ஏற்கனவே நொந்து போயுள்ள நிலையில் பொதுவெளியில் கட்சியை பற்றி வேண்டாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

The post தமிழ்நாடு பாஜகவில் வெடிக்கும் உட்கட்சி பூசல்.. பொய் சொல்வது அண்ணாமலை ரத்தத்திலேயே ஊறிவிட்டதாக கல்யாணராமன் சாடல்!! appeared first on Dinakaran.

Tags : Tamilnadu ,BJP ,Kalyanaraman ,Annamalai ,Chennai ,Lok Sabha elections ,Tamil Nadu ,president ,Tamilisai ,
× RELATED பாஜவில் ரவுடிகளை சேர்த்ததாக அண்ணாமலை...