×

திருக்கோயில்கள் சார்பில் நடத்தப்படும் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு கல்லூரி வளாக நேர்காணல் (Campus Interview) மூலம் முக்கிய தொழில் நிறுவனங்களுக்கு தேர்வு

சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படி, இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டிலுள்ள திருக்கோயில்கள் சார்பில் நடத்தப்படும் 9 கல்லூரிகள் மற்றும் ஒரு பல்வகை தொழில்நுட்ப கல்லூரியில் இறுதியாண்டு பயிலும் மாணவர்களுக்காக 51 முக்கிய தொழில் நிறுவனங்கள் மூலம் நடத்திய கல்லூரி வளாக நேர்காணலில் (Campus Interview) 1,894 மாணவ, மாணவியர் தேர்வு செய்யப்பட்டு பணி நியமனம் பெற்றுள்ளனர்.

இந்து சமய அறநிலையத்துறையானது திருக்கோயில்களில் திருப்பணிகள் மேற்கொண்டு குடமுழுக்குகள் நடத்துதல், திருக்குளங்கள் மற்றும் திருத்தேர்களை சீரமைத்தல், திருக்கோயில் சொத்துக்களை ஆக்கிரமிப்பிலிருந்து மீட்டெடுத்து பாதுகாத்தல், பக்தர்களுக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்தி வழங்குதல் போன்ற பணிகளை மேற்கொண்டு வருவதோடு, அறப்பணிகளாக கல்வி மற்றும் தொண்டு நிறுவனங்களையும் நிறுவி சமூக மேம்பாட்டிற்கு அரும்பணியாற்றி வருகிறது. திருக்கோயில்கள் சார்பில் 25 பள்ளிகளும், ஒரு பல்வகை தொழில்நுட்ப கல்லூரி உட்பட 10 கல்லூரிகளும், திருமடங்களின் சார்பில் 7 பள்ளிகளும் நடத்தப்பட்டு வருகின்றன.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையிலான அரசு பொறுப்பேற்றப்பின், திருக்கோயில்கள் சார்பில் நடத்தப்பட்டு வரும் பள்ளி மற்றும் கல்லூரிகளில் புதிய வகுப்பறை கட்டடங்கள், ஆய்வகங்கள், கழிப்பிட வசதிகள், விளையாட்டு மைதானம் போன்ற ஒருங்கிணைந்த மேம்பாட்டு பணிகளுக்காக ரூ.78.66 கோடி மதிப்பீட்டில் 127 பணிகள் எடுத்துக் கொள்ளப்பட்டு, அதில் 74 பணிகள் நிறைவுப்பெற்றுள்ளன.

திருக்கோயில் சார்பில் நடத்தப்படும் 10 கல்லூரிகளில் இறுதியாண்டு பயிலும் மாணவர்களுக்காக ICICI bank, Foxconn India Pvt. Ltd., Delphi TVS Technologies, Brakes India Pvt. Ltd., TVS Motors Pvt. Ltd., Sutherland Technologies, Appollo Hospitals, CRI Pumps Pvt. Ltd., VI-Tech Ltd., MMC Infotech Pvt. Ltd., CRI Pumps Pvt. Ltd., Autosense Pvt. Ltd., CRI Pumps Pvt. Ltd., Mudhra Fine blanc Pvt. Ltd., VVDN Technology Pvt. Ltd., Vertical Solutions Pvt. Ltd., Premier Fine linens Pvt. Ltd., Gainup Industries Pvt. Ltd., Drive Management Services, MRG Enterprises Pvt. Ltd.,Venpa Staffing Servives Pvt. Ltd., SSB Technology CRI Pumps Pvt. Ltd., Cedder Business Solution, Aqua Sub Engineering, J S Auto Cast Foundry India Pvt. Ltd., உள்ளிட்ட 51 முக்கிய நிறுவனங்கள் மூலம் கல்லூரி வளாக நேர்காணல் (Campus Interview) நடத்திட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இந்நேர்காணல் மூலம் 1,894 மாணவ, மாணவியர் தேர்வு செய்யப்பட்டு பணி நியமன ஆணைகளை பெற்றுள்ளனர்.

சென்னை, கொளத்தூர், அருள்மிகு கபாலீஸ்வரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 141 மாணவர்களும், நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு, அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 34 மாணவர்களும், திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரன், அருள்மிகு பழனி ஆண்டவர் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 25 மாணவிகளும், பழனி, சின்னக்கலையம்புத்தூர், அருள்மிகு பழனி ஆண்டவர் மகளிர் கலைக் கல்லூரியில் 556 மாணவர்களும்,, மயிலாடுதுறை மாவட்டம், மேலையூர், பூம்புகார் கல்லூரியில் 107 மாணவர்களும்,, தென்காசி மாவட்டம், குற்றாலம், ஸ்ரீ பராசக்தி மகளிர் கல்லூரியில் 641 மாணவர்களும், தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம், அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 111 மாணவர்களும், திண்டுக்கல் மாவட்டம், பழனி, அருள்மிகு பழனி ஆண்டவர் கலை மற்றும் பண்பாட்டுக் கல்லூரியில் 16 மாணவர்களும், அருள்மிகு பழனி ஆண்டவர் பாலிடெக்னிக் கல்லூரியில் 197 மாணவர்களும், கன்னியாகுமரி மாவட்டம், குழித்துறை, ஸ்ரீ தேவிகுமரி மகளிர் கல்லூரியில் 66 மாணவர்களும் பணி நியமன ஆணைகளை பெற்றுள்ளனர்.

ஏழை, எளிய குடும்பத்தைச் சேர்ந்த மாணவ, மாணவியர் உயர்கல்வி வரை பயிலும் வாய்ப்பினை உருவாக்கி வழங்கி வருவதோடு, அவர்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்திடும் வகையில் முக்கிய தொழில் நிறுவனங்களின் மூலம் பணி வாய்ப்பினையும் உருவாக்கி தந்து, சமூக, பொருளாதார வளர்ச்சிக்கு உறுதுணையாய் இந்து சமய அறநிலையத்துறையும் திகழ்கிறது என்பதற்கு இதுவே சான்றாக அமைந்துள்ளது.

The post திருக்கோயில்கள் சார்பில் நடத்தப்படும் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு கல்லூரி வளாக நேர்காணல் (Campus Interview) மூலம் முக்கிய தொழில் நிறுவனங்களுக்கு தேர்வு appeared first on Dinakaran.

Tags : Chennai ,Chief Minister ,Tamil Nadu ,K. ,Stalin ,Hindu Religious Institute ,
× RELATED தந்தையர் தினம் முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து