×

தீப்பெட்டி தோற்றத்தில் பிஸ்கட் சின்னம் ஓட்டு கேட்காமலே 14,796 வாக்குகள் பெற்ற சுயேச்சை: திருச்சி தொகுதியில் ருசிகரம்

திருச்சி: திருச்சி தொகுதியில் தீப்பெட்டி தோற்றத்தில் இருந்த பிஸ்கட் சின்ன குழப்பத்தால் ஓட்டு கேட்காமலே 14,796 வாக்குகளை சுயேச்சை வேட்பாளர் பெற்றார். திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிட்ட மதிமுக வேட்பாளர் துரை வைகோ வெற்றி பெற்றார். அதே நேரத்தில் வாக்கு எண்ணிக்கையின் போது ஒவ்வொரு சுற்றிலும் சுயேச்சை வேட்பாளர் என்.செல்வராஜ் என்பவர் அனைவரது கவனத்தையும் ஈர்த்து வந்தார்.

காரணம், ஒவ்வொரு சுற்றிலும் அவர் 700க்கும் அதிகமான வாக்குகளை பெற்றார். இதில் பத்மஸ்ரீ விருது பெற்ற தாமோதரன் உள்ளிட்ட சில முக்கிய சுயேச்சை வேட்பாளர்களும் இருந்த நிலையில் செல்வராஜ் மட்டும் ஒவ்வொரு சுற்றிலும் கூடுதலான வாக்குகள் பெற்று வந்தது அனைவருக்கும் வியப்பை ஏற்படுத்தியது. இவருக்கு மட்டும் மக்கள் மத்தியில் இவ்வளவு செல்வாக்கா என அனைவரும் குழப்பத்தில் இருந்தனர். தேர்தலில் எந்த பிரசாரமும் செய்யாமலே மொத்தம் 14,796 வாக்குகள் செல்வராஜ் பெற்றார்.

குறைந்தபட்சம் திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதியில் 1,788 வாக்குகளும், அதிகபட்சமாக புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் 3,279 வாக்குகளும் பெற்றிருந்தார். இறுதியில் செல்வராஜுக்கு 5வது இடம் கிடைத்தது. இவருக்கு தேர்தல் ஆணையம் பிஸ்கட் சின்னம் ஒதுக்கியிருந்தது. மதிமுக சார்பில் போட்டியிட்ட துரை வைகோவுக்கு தீப்பெட்டி சின்னம் ஒதுக்கப்பட்டது. 2 சின்னமும் செவ்வக வடிவில் இருந்தன.

தீக்குச்சியை தவிர்த்து பார்த்தால் ஒரே மாதிரியாக இருக்கும். இதனால் இந்த சின்னம் குழப்பத்தில் அவருக்கு கூடுதல் வாக்கு கிடைத்திருக்கலாம் என மதிமுக வின் வாக்கு எண்ணிக்கை முகவர்கள் தெரிவித்தனர். சுயேச்சை வேட்பாளர்களில் அதிக வாக்குகள் பெற்ற செல்வராஜ், நிதி நிறுவன ஊழியர். இவர் வேட்பு மனு தாக்கல் செய்ததை தனது உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு மட்டுமே பகிர்ந்தார். ஆனால் தேர்தல் பிரசாரமும் செய்யவில்லை. வீடு, வீடாக ஓட்டும் கேட்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

The post தீப்பெட்டி தோற்றத்தில் பிஸ்கட் சின்னம் ஓட்டு கேட்காமலே 14,796 வாக்குகள் பெற்ற சுயேச்சை: திருச்சி தொகுதியில் ருசிகரம் appeared first on Dinakaran.

Tags : Trichy ,Durai Vaiko ,DMK ,DMK alliance ,Trichy parliamentary seat ,Dinakaran ,
× RELATED தேர்தல் ஆணையம் நேர்மையாக...