×

சென்னை விமான நிலையத்தில் முகம் அடையாளம் காணும் புது தொழில்நுட்பம் அறிமுகம்: இனி காத்திருப்பு நேரம் குறையும்

சென்னை: சென்னை விமான நிலையத்தில் முகத்தை அடையாளம் காணும் டிஜியாத்ரா தொழில்நுட்பம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய வசதி மூலம் காத்திருப்பு நேரம் குறையும் என கூறப்படுகிறது. விமான பயணிகளின் முழு பயண செயல்முறையையும் காகிதமற்றதாக்குவதற்காக கடந்த 2022 டிசம்பரில் டிஜியாத்ரா திட்டம் துவங்கப்பட்டது. அதாவது பயணிகள் விமான நிலையத்திற்குள் நுழைவதில் இருந்து பாதுகாப்பு வழியில் செக் இன் செய்து உள்ளே சென்று விமானத்தில் ஏறும் போதும், பொருட்களை சரிபார்க்கும் போதும் தங்களது முகத்தை காட்டினால் போதும்.

மேலும் பயணிகள் பாஸ்போர்ட், ஆதார் அட்டை அல்லது பிற ஆவணங்களை அதிகாரிகளிடம் காட்ட வேண்டிய அவசியம் இல்லை. பல்வேறு விமான நிலையங்களிலும் கடந்த ஆண்டு முதல் இந்த டிஜியாத்ரா வசதி கொண்டுவரப்பட்டதால், பல லட்சம் விமானப் பயணிகள் பயன் அடைந்துள்ளனர். ஏற்கனவே 14 விமான நிலையங்களில் இந்த வசதி உள்ளது. இந்த மாதம் மேலும் 14 விமான நிலையங்களில் இந்த வசதி அறிமுகப்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

அதன்படி சென்னை விமான நிலையத்திலும் இந்த தொழில்நுட்பம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து விமான நிலைய ஆணைய அதிகாரிகள் கூறியதாவது: சென்னை விமான நிலையத்தில் டிஜியாத்ரா தொழில்நுட்பம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கடந்த மார்ச் மாதத்திலேயே இதற்கான சோதனைகள் நடத்தப்பட்டு மார்ச் இறுதியில் டிஜியாத்ரா அறிமுகப்படுத்தப்பட இருந்தது. ஆனால், விமானப் போக்குவரத்து பாதுகாப்பு அமைப்பு ஒப்புதல் தர தாமதமானதால், திட்டம் நிறுத்திவைக்கப்பட்டது.

இந்த திட்டத்தின் மூலம், முகத்தை அடையாளம் காணும் தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்படும். இதனால், விமான நிலையத்துக்குள் பாதுகாப்பு சோதனை மற்றும் பயணிகளின் அடையாளத்தை சோதனை செய்தல் உள்ளிட்டவற்றின் நேரம் குறையும். இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்த விரும்புவோர் டிஜியாத்ரா செயலியை பதிவிறக்கம் செய்து பதிவு செய்ய வேண்டும். பயணிகள் தங்கள் பெயர், தொலைபேசி எண் மற்றும் ஆதார் விவரங்களை பதிவு செய்ய வேண்டும்.

அதன் பிறகு, பயணத்திற்கு முன் அவர்களின் விமான விவரங்களையும், தங்களை படம் எடுத்தும் பதிவேற்றம் செய்ய வேண்டும். பயணிகள் விமான நிலையத்தை அடைந்ததும், அந்த செயலி மூலம் உருவாக்கப்பட்ட கியூ ஆர் குறியீட்டை இ-கேட் வாயிலில் காட்ட வேண்டும். மேலும் அங்குள்ள கேமராவும் அவர்களின் புகைப்படத்தை எடுக்கும்.

அதேபோல், பாதுகாப்பு சோதனை மற்றும் போர்டிங் முன், அவர்கள் முகத்தை ஸ்கேன் செய்த பிறகு எளிதாக கடந்து செல்ல முடியும். டிஜியாத்ரா பயணிகளுக்கு தனி இ-கேட் இருக்கும். இந்த திட்டத்தால் விமான பயணிகளின் காத்திருப்பு நேரம் குறையும். இந்த வசதியை பயன்படுத்த பயணிகள் கட்டாயபடுத்த மாட்டோம். விருப்பமுள்ள பயணிகள் இதை பயன்படுத்தலாம். இந்த தொழில்நுட்பம் உள்ள விமான நிலையங்களில் 50 சதவீத பயணிகள் இந்த டிஜியாத்ராவை பயன்படுத்துகிறார்கள். இவ்வாறு அவர்கள் கூறினர்.

The post சென்னை விமான நிலையத்தில் முகம் அடையாளம் காணும் புது தொழில்நுட்பம் அறிமுகம்: இனி காத்திருப்பு நேரம் குறையும் appeared first on Dinakaran.

Tags : Chennai airport ,Chennai ,Digiatra ,Dinakaran ,
× RELATED மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்: உச்சகட்ட பாதுகாப்பில் சென்னை விமான நிலையம்