×

நடுவக்கரை கிராமத்தில் அரசு வழங்கிய வீட்டு மனை இடம் தெரியாததால் மாமல்லபுரம் கடற்கரையில் குடிசைகள் அமைத்து வாழ்ந்து வரும் இருளர் மக்கள்:  அடிப்படை வசதிகள் இல்லாமல் வேதனை  கலெக்டர் நடவடிக்கை எடுக்க கோரிக்கை

மாமல்லபுரம், ஜூன் 7: திருக்கழுக்குன்றம் அருகே நடுவக்கரை கிராமத்தில் அரசு வழங்கிய வீட்டுமனை இடம் தெரியாததால், மாமல்லபுரத்தில் அடிப்படை வசதிகள் இன்றி 8 ஆண்டுகளாக கடற்கரையொட்டி தற்காலிக குடிசைகள் அமைத்து இருளர் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். மேலும், அரசு வழங்கிய வீட்டு மனை பட்டாவிற்கான இடத்தினை வருவாய் துறை அதிகாரிகள் எங்களை கூட்டி சென்று காண்பிக்காமல் அலைக்கழித்து வருகின்றனர் என குற்றம் சாட்டுகின்றனர். எனவே, இது குறித்து மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

மாமல்லபுரம் கடற்கரையொட்டி, 80க்கும் மேற்பட்ட இருளர் குடும்பங்களில் 200க்கும் மேற்பட்டோர் குடிநீர் வசதி, மின் இணைப்பு, வீடுகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாமல் தற்காலிக குடிசைகள் அமைத்து திறந்த வெளியில் வசித்து வருகின்றனர். இதனால், இங்குள்ள குழந்தைகள் பள்ளிகளில் படிப்பை தொடர முடியாமல் உள்ளனர். இங்குள்ள, இருளர் மக்கள் அடிப்படை தேவைகளுக்காக அரசிடமும், மாவட்ட நிர்வாகத்திடமும் பல்வேறு கோரிக்கைகள் தொடர்ந்து வைத்து வருகின்றனர். இருப்பினும், இவர்களுக்கு இதுநாள் வரை தொகுப்பு வீடு, மின்சார வசதி, குடிநீர் வசதி கனவாகவே உள்ளது. இங்குள்ள, இருளர்கள் கடற்கரைக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் கண்ட இடங்களில் வீசி விட்டு செல்லும் பிளாஸ்டிக் பைகள், தண்ணீர் பாட்டில்கள் ஆகியவற்றை சேகரித்து காயலான் கடையில் போட்டு, அதில் கிடைக்கும் வருமானத்தை வைத்து குடும்பம் நடத்துவதாக கூறப்படுகிறது.

இவர்களில், பெரும்பாலான குடும்பங்களுக்கு குடும்ப அட்டை, ஆதார் அட்டை மற்றும் வாக்காளர் அட்டை வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும், சொந்தமாக வீடுகள் இல்லாமல் கடற்கரையொட்டி தற்காலிக ஓலை குடிசை அமைத்து, பாதுகாப்பு இன்றி ஒண்டிக் குடித்தனம் செய்து வருகின்றனர். இங்குள்ள, இருளர்கள் தங்களுக்கு வீடு கட்டுவதற்கு தனியாக இடம் ஒதுக்கித் தந்து, அரசு மூலம் கிடைக்கும் தொகுப்பு வீடுகள் கட்டித்தர வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திற்கு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த கோரிக்கையை, ஏற்று 44 குடும்பங்களுக்கு மட்டும் திருக்கழுக்குன்றம் அடுத்த நடுவக்கரை கிராமத்தில் இரண்டரை சென்ட் பட்டா வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், வருவாய்த் துறையினர் எங்களை அழைத்துக் கொண்டு தங்களுக்கு வழங்கப்பட்ட இடத்தை இது நாள்வரை காட்டாமல் அலைக்கழிப்பதாக அவர்கள் வேதனையுடன் கூறுகின்றனர்.

எனவே, மாவட்ட கலெக்டர் அருண்ராஜ் உடனடியாக தலையிட்டு தங்களுக்கு வழங்கப்பட்ட பட்டா இடத்தை நேரில் அழைத்துச் சென்று காட்டி அரசு மூலம் தொகுப்பு வீடுகள் கட்டித் தந்து குடிநீர், மின்சாரம், சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து கொடுத்து தங்களின் வாழ்க்கையில் ஒளி ஏற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து இருளர் மக்கள் கூறுகையில், ‘இங்குள்ள பலர் மரம் வெட்டும் வேலைக்கு சென்று விடுகின்றனர். சிலர் வயிற்றுப் பசியை போக்க கடற்கரையில் பிளாஸ்டிக் பை, தண்ணீர் பாட்டில் ஆகியவற்றை சேகரிக்கின்றனர். நாங்கள் பிற வேலைக்குச் சென்று அங்கு சாப்பாடு கொடுத்தாலும், ஊதியம் கொடுத்தாலும் அருகில் வந்து யாரும் கொடுக்க மாட்டார்கள். கீழ் வகுப்பை சேர்ந்த மக்கள் என்று எங்களை ஒதுக்குகின்றனர். இதுபோன்ற, நிகழ்வுகளால் மன ரீதியாக பாதிக்கப்படுகிறோம். நாங்கள், மழைக்குக் கூட பள்ளிகளுக்கு அருகில் ஒதுங்கியது இல்லை. பெற்றோர்‌ எங்களை பள்ளியில் சேர்க்காமலேயே விட்டு விட்டனர். அதனால், தான் இந்த நிலையில் உள்ளோம். இங்குள்ள, பலருக்கு திருமணமாகி அருகருகே ஓலை குடிசை அமைத்து வசிக்கின்றனர்.

இந்த நிலை, தங்களது குழந்தைகளுக்கும் வந்து விடுமோ என்ற பயம் மனதில் ஓடிக் கொண்டிருக்கிறது. எங்களுக்கென்று, சொந்தமாக தனி வீடு கிடையாது. ஓலைக் குடிசையில் தான் 8 ஆண்டுகளாக காலம் ஓடுகிறது. அரசாங்கம், மூலமாகவோ அல்லது மாவட்ட நிர்வாகம் மூலமாகவோ எங்களுக்கு எந்த உதவியும் கிடைக்கவில்லை. தேர்தல் நேரங்களில் மட்டும் அரசியல் கட்சியினர் ஓட்டு கேட்டு வருவார்கள். அப்போது, வீடு கட்டித் தருவதாகவும், பிள்ளைகளின் படிப்பிற்கு உதவுவதாகவும் வாக்குறுதி அளிப்பார்கள். அதை நம்பி நாங்களும் எந்த சின்னத்தில் வாக்களிக்கச் சொல்கிறார்களோ, அந்த சின்னத்தில் வாக்களிப்போம். ஆனால், தேர்தல் முடிந்து வெற்றி பெற்ற பிறகு நாங்கள் வசிக்கும் பகுதியை கடந்து செல்லும்போது, திரும்பிக் கூட பார்க்க மாட்டார்கள். அவர்களை, எதிர்த்து கேள்வி கேட்கும் அளவிற்கு எங்களுக்குச் சமுதாய ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் பலம் கிடையாது. எந்த சூழ்நிலையிலும் அடிபணிந்து வாழும் அவல நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்’ என்றனர். இங்குள்ள, இருளர் மக்கள் அடிப்படை தேவைகளுக்காக அரசிடமும், மாவட்ட நிர்வாகத்திடமும் பல்வேறு கோரிக்கைகள் தொடர்ந்து வைத்து வருகின்றனர். இருப்பினும், இவர்களுக்கு இதுநாள் வரை தொகுப்பு வீடு, மின்சார வசதி, குடிநீர் வசதி கனவாகவே உள்ளது.

The post நடுவக்கரை கிராமத்தில் அரசு வழங்கிய வீட்டு மனை இடம் தெரியாததால் மாமல்லபுரம் கடற்கரையில் குடிசைகள் அமைத்து வாழ்ந்து வரும் இருளர் மக்கள்:  அடிப்படை வசதிகள் இல்லாமல் வேதனை  கலெக்டர் நடவடிக்கை எடுக்க கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Mamallapuram beach ,Madhukarai ,Mamallapuram ,Thirukkalukkunram ,
× RELATED மாமல்லபுரம் கடலில் 5 ஆண்டுகளில்...