×

நாட்டு மக்கள் அடியோடு நிராகரித்த பின்னரும் பொய்யான வரலாற்றை எழுத காபந்து பிரதமரான மோடி முயற்சி : காங்கிரஸ் தாக்கு

டெல்லி : நாட்டு மக்கள் அடியோடு நிராகரித்த பின்னரும் பொய்யான வரலாற்றை எழுத காபந்து பிரதமரான மோடி முயற்சிப்பதாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டி உள்ளது. காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், ஜவஹர்லால் நேரு 1951ம் ஆண்டு 364 தொகுதிகளிலும் 1957ம் ஆண்டு தேர்தலில் 371 தொகுதிகளிலும் 1962ம் ஆண்டு தேர்தலில் 361 தொகுதிகளிலும் வெற்றி பெற்று பெரும்பான்மை பலத்துடன் பிரதமரானதாக குறிப்பிட்டுள்ளார். ஆனால் தற்போது 240 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ள மோடி, மக்களின் தீர்ப்பை நாசமாக்க முயற்சிப்பதாக குற்றம் சாட்டி உள்ளார்.

மேலும் கடந்த 1989ம் ஆண்டு தேர்தல் முடிவில் காங்கிரஸ் கட்சி 197 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக வந்தது. அப்போதைய காங்கிரஸ் தலைவர் ராஜீவ் காந்தி நினைத்து இருந்தால் ஆட்சி அமைக்க உரிமை கோரி இருக்கலாம். ஆனால் அவர் கண்ணியமும் தார்மீகமும் கருதி அதை செய்யவில்லை என்றும் ஜெய்ராம் ரமேஷ் மற்றொரு பதிவில் குறிப்பிட்டு உள்ளார். பாஜகவுக்கு ஆதரவு அளித்துள்ள ஐக்கிய ஜனதா தளத் தலைவர் நிதிஷ் குமார், பீகாருக்கு சிறப்பு அந்தஸ்து வேண்டும் என்றும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்றும் நிபந்தனை விதிப்பதாக தகவல் வெளியாகி உள்ள நிலையில், சாதிவாரி கணக்கெடுப்புக்கு எதிரான முந்தைய நிலைப்பாட்டில் மோடி உறுதியாக இருப்பாரா என்றும் ஜெய்ராம் ரமேஷ் கேள்வி எழுப்பியுள்ளார்.

The post நாட்டு மக்கள் அடியோடு நிராகரித்த பின்னரும் பொய்யான வரலாற்றை எழுத காபந்து பிரதமரான மோடி முயற்சி : காங்கிரஸ் தாக்கு appeared first on Dinakaran.

Tags : Modi ,Congress ,Delhi ,Congress party ,General Secretary ,Jairam Ramesh ,Jawaharlal Nehru ,
× RELATED நாடாளுமன்றக் கூட்டத்தொடரை சுமூகமாக...