×

கொள்ளிடம் பகுதியில் தூய்மைபெறும் கழிவுநீர் கால்வாய்


கொள்ளிடம்: கொள்ளிடம் பகுதியில் கழிவுநீர் கால்வாய் தூய்மை செய்யும் பணி நடைபெற்றது. மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே தெற்கு ராஜன் வாய்க்காலில் குத்தவக்கரை கிராமத்திற்கு அருகாமையில் கிளை வாய்க்காலாக பிரிந்து கொள்ளிடம் பகுதியில் சுமார் 500க்கும் மேற்பட்ட ஏக்கர் விளை நிலங்களுக்கு பாசன வசதி மற்றும் கொள்ளிடம் பாரத் நகர் பூசை நகர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள குடியிருப்புகளுக்கு வடிகால் வசதியையும் ஏற்படுத்திவிட்டு, கொள்ளிடம் சோதனை சாவடி அருகே கொள்ளிடம் ஆற்றில் வடிகால் வாய்க்காலாக சென்று கலக்கிறது.

பின்னர் கொள்ளிடம் வடிகால் வாய்க்கால் சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்கு குடியிருப்புகள் அமைந்துள்ள இடத்தில் சாலை ஓரம் காண்கிரீட் வாய்க்காலாக அமைக்கப்பட்டுள்ளது. இது மிகவும் குறுகிய கால்வாயாக இருந்து வருவதால் தண்ணீர் எளிதில் சென்று வெளியேற முடியாத நிலையில் பிளாஸ்டிக் பொருட்கள் பாட்டில்கள் மற்றும் குப்பைகளால் பல இடங்களில் மூடப்பட்டு கிடந்தன. இதனால் சுகாதார கேடு ஏற்பட்டு சுற்றுப்புற சுகாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டு வந்தன.

இந்நிலையில் அப்பகுதியில் உள்ள குடியிருப்பு வாசிகளின் கோரிக்கையினை ஏற்று கொள்ளிடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு தூய்மை பணியாளர்கள் நேற்று சம்பவ இடத்திற்கு சென்று பூசை நகர் பகுதியில் காண்கிரீட் கால்வாயில் இருந்த குப்பைகள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை அகற்றினர். இதன் மூலம் தண்ணீர் வாய்க்காலில் தேங்காமல் சீராக வெளியேறி செல்ல நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியை சேர்ந்த குடியிருப்பு வாசிகள் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது.

The post கொள்ளிடம் பகுதியில் தூய்மைபெறும் கழிவுநீர் கால்வாய் appeared first on Dinakaran.

Tags : Kollidam ,Mayiladuthurai District ,South Rajan ,Kudhwakarai ,
× RELATED கொள்ளிடம் பகுதியில் 500 ஏக்கரில்...