ஊத்துக்கோட்டை, ஜூன் 6: பெரியபாளையம் அருகே சிவன், பார்வதி, நடராஜர் சிலைகள் கண்டெடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பெரியபாளையம் அருகே செம்பேடு கிராமத்தில் மிகவும் பழமை வாய்ந்த சிவன் கோயில் உள்ளது. இந்த கோயிலுக்கு கோபுரம் இல்லாததால் அப்பகுதி மக்கள் சிமென்ட் ஓடுகளால் மேற்கூரை அமைத்து சிவன் மற்றும் நந்தியை வழிபட்டு வந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை பிரதோஷம் என்பதால் கிராம மக்கள் சிவன் மற்றும் நந்திக்கு சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டனர். அப்போது கோயிலுக்கு வந்த சிறுவர்கள் கோயில் அருகே உள்ள வளாகத்தில் விளையாடிக் கொண்டிருந்தனர்.
அப்போது ஏதோ ஒரு பொருள் காலில் பட்டு ஒரு சிறுவன் கீழே விழுந்துள்ளான். இதையறிந்த பக்தரில் ஒருவர் அந்த சிறுவனை தூக்கி விட்டு எப்படி கீழே விழுந்தாய் என கேட்டுள்ளார். அப்போது அந்த சிறுவன், தடுக்கி விழுந்ததாக அந்த இடத்தை காட்டினான். பக்தர்கள் அங்கு சென்று பார்க்க, ஏதோ ஒரு பொருள் தரையில் புதைந்து சிறு பகுதி மட்டும் வெளியே நீட்டிக்கொண்டிருந்தை கண்டனர். பிறகு அந்த இடத்தில் பள்ளம் தோண்டியபோது சிவன், பார்வதி, நடராஜர் சிலைகள் கிடைத்தன. இதை கண்டதும் மகிழ்ச்சி அடைந்த கிராம மக்கள், சிலைகளுக்கு பூ மாலைகள் அணிவித்து, மஞ்சள், குங்குமம் வைத்து, பூஜைகள் செய்து வழிபட்டனர். தகவல் அறிந்து வந்த வெங்கல் போலீசார் விசாரணை நடத்தினர். மேலும் சிவன் – பார்வதி – நடராஜர் என 3 சிலைகளும் பித்தளையா அல்லது ஐம்பொன் சிலையா என விசாரணை நடத்தி, இந்து சமய அறநிலைய துறைக்கு தகவல் கொடுத்தனர். இதனால் கிராமத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
The post பெரியபாளையம் அருகே சிவன், பார்வதி, நடராஜர் சிலைகள் கண்டெடுப்பு: அதிகாரிகள் விசாரணை appeared first on Dinakaran.