×

வெல்ல முடியாதவர் மோடி என்ற பிம்பம் சிதைந்து விட்டது: தேர்தல் முடிவுகள் பற்றி உலக ஊடகங்கள் கருத்து

வாஷிங்டன்: “பிரதமர் மோடி வெல்ல முடியாதவர் என்ற பிம்பத்தை தேர்தல் முடிவுகள் உடைத்து விட்டன” என உலக ஊடகங்கள் கருத்து தெரிவித்துள்ளன. மக்களவை தேர்தலில் பாஜ கூட்டணி 290 இடங்களை மட்டுமே வென்றுள்ளது. எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி 235 இடங்களை கைப்பற்றி பாஜவுக்கு கடும் நெருக்கடியை உருவாக்கி உள்ளது. இந்நிலையில் இந்திய மக்களவை தேர்தல் முடிவுகள் குறித்து பல்வேறு நாடுகளின் நாளிதழ், காட்சி ஊடகங்கள் கருத்துகளை வௌியிட்டுள்ளன.

நியூயார்க் டைம்ஸ் நாளிதழ், “திடீரென்று நரேந்திர மோடியை சுற்றியிருந்த தோற்கடிக்க முடியாதவர் என்ற ஒளிவட்டம் சிதைந்து விட்டது” என்று பதிவிட்டுள்ளது. ‘‘தேர்தல் முடிவுகள் வந்தவுடன் இந்திய வாக்காளர்கள் தங்கள் அதிருப்தியை காட்டுவது போல் தொடர் வெற்றியாளரை நடுக்கத்தில் வைத்து விட்டனர்” என வாஷிங்டன் போஸ்ட் செய்தி வௌியிட்டுள்ளது.

பிபிசி வௌியிட்டுள்ள செய்தியில், “இந்த தேர்தலில் மக்களின் தீர்ப்பு எதிர்க்கட்சி கூட்டணிக்கு ஒரு வியப்பூட்டும் மறுமலர்ச்சியை தந்துள்ளது. காங்கிரசின் சரிவுகள் குறித்து தேர்தலுக்கு முந்தைய, பிந்தைய கருத்து கணிப்புகள் இரண்டிலிருந்தும் முற்றிலும் மாறுபட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளது.

தேர்தல் முடிவுகள் மோடி பிராண்ட் அதன் பிரகாசத்தை சிறிது, சிறிதாக இழந்து விட்டதை காட்டுகிறது. மோடியின் ஆதரவாளர்கள் பலர் நம்பியதுபோல் அவர்(மோடி) வெல்ல முடியாதவர் அல்ல என்பதை மாற்றி அவரும் தோற்கடிக்கப்படுவார் என்ற புதிய நம்பிக்கையை எதிர்க்கட்சிகளுக்கு அளித்துள்ளது” என்று பிபிசி விமர்சித்துள்ளது. சர்வதேச அமைதிக்கான கர்னகி என்டோவ்மெண்ட் அமைப்பின் தெற்காசிய திட்ட இயக்குநர் மிலன் வைஷ்ணவ் கூறியதாக டைம் இதழ் வௌியிட்டுள்ள செய்தியில், “இந்த தேர்தல் சந்தேகத்துக்கு இடமின்றி மோடிக்கும், பாஜவுக்கும் பெரும் பின்னடைவு” என்று தெரிவித்துள்ளது.

The post வெல்ல முடியாதவர் மோடி என்ற பிம்பம் சிதைந்து விட்டது: தேர்தல் முடிவுகள் பற்றி உலக ஊடகங்கள் கருத்து appeared first on Dinakaran.

Tags : Modi ,Washington ,BJP alliance ,Lok Sabha elections ,India Alliance of Opposition parties ,Dinakaran ,
× RELATED பா.ஜவுக்கு பெரும்பான்மை இல்லை; மோடி...