×

மக்களவை தேர்தலில் 2 தொகுதிகளிலும் வெற்றி: அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சி அந்தஸ்தை பெறும் விசிக: 8% வாக்குகளால் நாம் தமிழர் கட்சிக்கும் அங்கீகாரம்

சென்னை: மக்களவைத் தேர்தலில் தனி சின்னத்தில் போட்டியிட்டு 2 தொகுதிகளிலும் வெற்றி பெற்ற விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சி என்ற அந்தஸ்தை பெறுகிறது. நாம் தமிழர் கட்சியும் 8 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகள் பெற்றதால், அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக உருவெடுத்துள்ளது. திமுக கூட்டணியில் இரண்டு தொகுதிகளில் வெற்றி பெற்ற விடுதலை சிறுத்தைகள் கட்சியும், ஒரு தொகுதியில் கூட வெல்லாத, ஆனால் 8 சதவீத வாக்குகள் பெற்ற நாம் தமிழர் கட்சியும் அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சிகள் என்ற அந்தஸ்தை பெறுகின்றன. பொதுவாக அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சி என்ற அந்தஸ்தை பெற சில நிபந்தனைகளை பூர்த்தி செய்ய வேண்டியது அவசியம்.

சட்டப்பேரவை தேர்தலில் மொத்த தொகுதிகளில் 3 சதவீத இடங்களிலும், மக்களவை தேர்தலில், மாநிலத்தில் உள்ள எம்.பி. தொகுதிகளில் ஒவ்வொரு 25 இடத்திலும் ஒரு இடத்திலும் வெற்றிபெற வேண்டும். மக்களவை அல்லது சட்டப் பேரவை தேர்தலில் 6 சதவீத வாக்குகளுடன், ஒரு மக்களவை தொகுதியில் வெல்ல வேண்டும் அல்லது 2 சட்டப்பேரவை தொகுதிகளில் வெல்ல வேண்டும். எந்த தொகுதியிலும் வெல்லவில்லை என்றால் 8 சதவீத வாக்குகளைப் பெற வேண்டும் ஆகிய விதிமுறைகளை தேர்தல் ஆணையம் வரையறுத்துள்ளது. விசிக சார்பில் சிதம்பரம் தொகுதியில் போட்டியிட்ட திருமாவளவன் 5,05,084 வாக்குகள் பெற்று சுமார் 1,03,554 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அதேபோல விழுப்புரம் தொகுதியில் போட்டியிட்ட ரவிக்குமார் 4,77,033 வாக்குகள் பெற்று சுமார் 70,703 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்த இரு தொகுதிகளில் தனிச் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றதால் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சி என்ற அந்தஸ்தை பெறுகிறது.

மேலும் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி படுதோல்வி அடைந்தது. இருப்பினும் தமிழகத்தில் 39 நாடாளுமன்றத் தொகுதிகளிலும் நாம் தமிழர் கட்சி 8.9 சதவீதம் வாக்குகளை பெற்றுள்ளது. அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சி அந்தஸ்தை பெற 8 சதவீத வாக்குகள் தேவை. இதன் அடிப்படையில் நாம் தமிழர் கட்சி அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சி அந்தஸ்தை பெறகிறது. இதையடுத்து, இந்த இரு கட்சிகளும் வாக்கு சதவீதம் தொடர்பான விவரங்களை தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்க வேண்டும். தேர்தல் ஆணையம் அதை உறுதி செய்து 15 நாட்கள் முதல் ஒரு மாத காலத்துக்குள் அதற்கான அங்கீகாரத்தை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் மூலம் அடுத்தடுத்து வரும் தேர்தல்களில் இக் கட்சிகளில் தங்களுக்குரிய ஒரே சின்னத்தில் போட்டியிடலாம்.

The post மக்களவை தேர்தலில் 2 தொகுதிகளிலும் வெற்றி: அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சி அந்தஸ்தை பெறும் விசிக: 8% வாக்குகளால் நாம் தமிழர் கட்சிக்கும் அங்கீகாரம் appeared first on Dinakaran.

Tags : Lok Sabha ,Vishika ,Naam Tamilar Party ,CHENNAI ,Liberation Tigers ,India ,Naam Tamilan Party ,Lok Sabha Elections ,Party ,Dinakaran ,
× RELATED சீமானின் வளர்ச்சி கவனம் பெறுகிறது :...