×

தமிழ்நாட்டில் போட்டியிட்ட 39 இடங்களிலும் படுதோல்வி அடைந்ததுடன் பாஜ கூட்டணி 21 இடங்களில் டெபாசிட் காலி: கருத்துக்கணிப்புகள் அத்தனையும் தவிடுபொடியானது

சென்னை: தமிழ்நாட்டில் முதன்முறையாக பாஜ தலைமையிலான கூட்டணி, போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் படுதோல்வி அடைந்ததுடன், 21 இடங்களில் டெபாசிட் தொகையை பறி கொடுத்துள்ளது. பாஜ கூட்டணியில் பாமக, தமாகா, அமமுக, இந்திய ஜனநாயக கட்சி, புதிய நீதிக் கட்சி, இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழகம், தமிழக மக்கள் முன்னேற்ற கழகம், ஓ.பன்னீர்செல்வம் அணி ஆகியவை இணைந்து நாடாளுமன்ற தேர்தலை சந்தித்தன. 39 தொகுதிகளில் பாஜ 19 தொகுதிகளில் போட்டியிட்டது. மற்ற இடங்களில் கூட்டணிக் கட்சிகள் போட்டியிட்டன. மக்களிடையே நன்கு அறியப்பட்ட பிரபரலங்கள், மற்ற கட்சிகளை சேர்ந்த செல்வாக்கு பெற்ற நபர்கள் என அனைவரையும் தேடித் தேடி வேட்பாளராக நிறுத்தியது. தெலங்கானா ஆளுநராக இருந்த தமிழிசை சவுந்தரராஜன் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தேர்தலில் போட்டியிட்டார். ஒன்றிய இணையமைச்சர் எல்.முருகன், முன்னாள் ஒன்றிய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், மாநில பாஜ தலைவர் அண்ணாமலை ஆகியோர் பாஜ சார்பில் களம் கண்டனர்.

மாநில பாஜ துணைத்தலைவர் நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ.வாக இருந்தபோதிலும், நாடாளுமன்ற தேர்தலில் களமிறங்கினார். புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம், இந்திய ஜனநாயக கட்சி தலைவர் பாரிவேந்தர் ஆகியோர் பாஜவின் தாமரை சின்னத்தில் போட்டியிட்டனர். பாஜ ஒவ்வொரு தொகுதியிலும் வலுவான வேட்பாளர்களை நிறுத்தியதால் திமுக, அதிமுகவுக்கு களத்தில் அக்கட்சி கடும் சவால் அளிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. வாக்குப்பதிவுக்கு பின் வெளியான கருத்துக் கணிப்புகளும் அதிமுக கூட்டணிக்கு இணையாக பாஜ கூட்டணி வாக்குகளை பெறும் என்று கணித்திருந்தன. இன்னும் சில கருத்துக் கணிப்புகள், அதிமுக கூட்டணியை காட்டிலும் வாக்கு சதவீதத்தில் பாஜ அணி முந்துவதுடன் மாநில பாஜ தலைவர் அண்ணாமலை போட்டியிட்ட கோவை உள்ளிட்ட பல தொகுதிகளிலும் வெற்றிபெறும் என்றும் ஆருடம் கூறின.

இந்த கணிப்புகள் அத்தனையையும் உடைத்து, தமிழகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக கூட்டணி ஒட்டுமொத்தமாக அனைத்து இடங்களையும் கைப்பற்றி மிகப் ெபறும் வெற்றி பெற்றது. போட்டியிட்ட 39 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி கண்டது. இந்தநிலையில் தமிழ்நாட்டில் பாஜ கூட்டணி 12 தொகுதிகளில் இரண்டாவது இடத்தைதான் பிடிக்க முடிந்தது. அதில் 9 தொகுதிகளில் பாஜவும், மற்ற 3 இடங்களில் கூட்டணியில் போட்டியிட்ட பிற கட்சிகளின் வேட்பாளர்களான ஓ.பன்னீர்செல்வம், டிடிவி.தினகரன், பாமகவின் சவுமியா ஆகியோரும் 2வது இடத்திற்கு வந்துள்ளனர். நாடாளுமன்ற தேர்தலில் மத்திய சென்னை, தென்சென்னை, கோவை, கன்னியாகுமரி, நீலகிரி, வேலூர், திருநெல்வேலி, மதுரை, திருவள்ளூர், தர்மபுரி தொகுதியில் பாமக வேட்பாளர் சௌமியா அன்புமணி, ராமநாதபுரம் தொகுதியில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும், தேனி தொகுதியில் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரனும் இரண்டாவது இடம் பிடித்துள்ளனர்.

ஆனாலும் தமிழகத்தில் மொத்தமுள்ள 39 தொகுதிகளில் பாஜ மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் 21 இடங்களில் டெபாசிட் தொகையை பறிகொடுத்தனர். அதன்படி வடசென்னை, சிதம்பரம், கரூர், நாகப்பட்டினம், நாமக்கல், பெரம்பலூர், திருவள்ளூர், திருவண்ணாமலை, தஞ்சாவூர், திருப்பூர், விருதுநகர் என 11 தொகுதிகளில் பாஜ வேட்பாளர்களும், திண்டுக்கல், ஈரோடு, கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், மயிலாடுதுறை, சேலம், பெரும்புதூர், தூத்துக்குடி, திருச்சி, விழுப்புரம் ஆகிய 10 தொகுதிகளில் பாஜ கூட்டணி கட்சி வேட்பாளர்களும் டெபாசிட் இழந்தனர். ஒரு தொகுதியில் பதிவான வாக்குகளில் 6ல் ஒரு பங்கு சதவீத வாக்குகள் பெற்றால்தான் டெபாசிட் தொகை திரும்பப் பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

The post தமிழ்நாட்டில் போட்டியிட்ட 39 இடங்களிலும் படுதோல்வி அடைந்ததுடன் பாஜ கூட்டணி 21 இடங்களில் டெபாசிட் காலி: கருத்துக்கணிப்புகள் அத்தனையும் தவிடுபொடியானது appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,BJP ,CHENNAI ,led alliance ,BJP alliance ,Tamaka ,AAM ,Democratic Party of India ,New Justice Party ,People of India ,Dinakaran ,
× RELATED தமிழக பாஜ தலைவரை கண்டித்து; நங்கநல்லூரில் காங்கிரஸ் கண்டன ஆர்ப்பாட்டம்