×

அகில இந்திய அளவில் போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெற்ற கட்சி திமுக மட்டுமே: இந்தியாவில் 5வது பெரிய கட்சியாக உருவெடுத்துள்ளது

சென்னை: நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் அகில இந்திய அளவில் போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெற்ற ஒரே கட்சி திமுக மட்டுமின்றி, இந்தியாவில் 5வது மிகப் பெரிய கட்சியாகவும் உருவெடுத்துள்ளது. மக்களவையில் மொத்தம் உள்ள 543 தொகுதிகளில் பாஜ 441 தொகுதிகளில் போட்டியிட்டது. இதில் 240 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. அதேபோன்று, காங்கிரஸ் கட்சி 328 ெதாகுதிகளில் போட்டியிட்டு 99 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. இதற்கு அடுத்தபடியாக சமாஜ்வாதி கட்சி 62 தொகுதிகளில் போட்டியிட்டு 37 தொகுதிகளில் வெற்றி பெற்றது. மேற்குவங்கத்தில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி 48 தொகுதிகளில் போட்டியிட்டு 29 தொகுதிகளில் வெற்றி பெற்றது.

புதுச்சேரி மற்றும் தமிழகத்தில் உள்ள 40 தொகுதிகளில் திமுக தனது கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கியது போக 21 தொகுதிகளிலும், கூட்டணி கட்சியான கொ.ம.தே.க. உதயசூரியன் சின்னத்திலும் போட்டியிட்டது. இதில் திமுக நேரடியாக போட்டியிட்ட 21 தொகுதிகளிலும், உதயசூரியன் சின்னத்தில் கொமதேக ஒரு இடத்திலும் வெற்றி பெற்றது. இதனால் அகில இந்திய அளவில் பார்த்தால், போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் 100 சதவீதம் வெற்றி பெற்ற கட்சியாக திமுக மட்டுமே உள்ளது. நேரடியாக போட்டியிட்ட 21 தொகுதிகளிலும் அமோக வெற்றியை திமுக பெற்றுள்ளது.

திமுகவின் இந்த வெற்றி ஒட்டுமொத்த இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. இந்த வெற்றியின் மூலம் அகில இந்திய அளவில் திமுக 5வது பெரிய கட்சியாகஉருவெடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த 2018ம் ஆண்டு கலைஞர் மறைவுக்கு பிறகு, திமுக தலைமைப் பொறுப்பை முதல்வர் மு.க.ஸ்டாலின் ஏற்றார். 2019ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலே திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் முதல் தேர்தல். திமுகவை வழிநடத்தும் தலைவர் பொறுப்பை ஏற்றதில் இருந்து இதுவரை நடந்த அனைத்து தேர்தல்களிலும் வெற்றியை மட்டுமே சொந்தமாக்கி வருகிறார். தமிழக தேர்தல் வரலாற்றில் திமுக கூட்டணிக்கு அடுத்தடுத்த ஒவ்வொரு தேர்தலிலும் சுமார் 100 சதவீத வெற்றியை மு.க.ஸ்டாலின் தேடித்தந்துள்ளது குறிப்பிடத்தக்க சாதனையாக பார்க்கப்படுகிறது.

The post அகில இந்திய அளவில் போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெற்ற கட்சி திமுக மட்டுமே: இந்தியாவில் 5வது பெரிய கட்சியாக உருவெடுத்துள்ளது appeared first on Dinakaran.

Tags : DMK ,India ,CHENNAI ,Lok Sabha ,BJP ,Dinakaran ,
× RELATED இந்தியா கூட்டணி பெற்ற வெற்றி சாதாரண...